மேகங்கள்:
ஒவ்வொரு நாளும் மிக அதிக அளவில் கடல் நீர் நீராவியாக மாறுகிறது. மேகங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது.
உயரத்தின் அடிப்படையில் மேகங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.
- மேல்மட்டமேகங்கள் (High clouds)(6-20 கி.மீஉயரம் வரை)
- இடைமட்டமேகங்கள் (Middle clouds)(2.5- 6 கிமீ உயரம் வரை).
- கீழ்மட்டமேகங்கள் (Low clouds) (புவியின் மேற்பரப்பிலிருந்து 25 கி.மீ. உயரம் வரை)
1.மேல்மட்ட மேகங்கள் (High Clouds):
கீற்று மேகங்கள்(Cirrus):
வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர்உயரத்தில் மெல்லிய,வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் கீற்று மேகங்கள் எனப்படுகின்றன. இது முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும். பனித்துகள்களை கொண்ட இம்மேகங்கள் மழைப்பொழிவை தருவதில்லை.
கீற்றுத் திரள் மேகங்கள் (Cirro Cumulus):
கீற்றுத் திரள் மேகங்கள் வெண்மையான திட்டுக்களாகவோ, விரிப்பு போன்றோ அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும். இவை பனிப்படிகங்களால் உண்டானவை ஆகும்.
கீற்றுப்படை மேகங்கள் (Cirro Stratus):
கீற்றுப்படை மேகங்கள் மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும். இது மிகச்சிறிய பனித்துகள்களை கொண்ட மேகமாகும்.
சூரிய மறைவின் பொழுது கீற்றுமேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் “பெண்குதிரை வால்” (Mare’s Tails) என்றும் அழைக்கப்படுகிறது.
2.இடைமட்ட மேகங்கள் (Middle Clouds)
இடைப்பட்ட படைமேகங்கள் (Alto Status):
சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்ப டும் மேகங்கள் இடைப்பட்ட படை மேகங்களாகும். இவை உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்டிருக்கும்.
இடைப்பட்ட திரள்மேகங்கள் (Alto Cumulus):
தனித்தனியாக உள்ள மேகத்திரள்கள் ஒன்றுடனொன்று இணைந்து பல்வேறு வடிவங்களில் காணப்படும். இவை அலைத்திரள் அல்லது இணைக்கற்றைகள் போன்று அமைப்புடன் காட்சியளிக்கும் ஆகையினால் இதனை செம்மறியாட்டுமேகங்கள்(Sheep Clouds), அல்லது கம்பளிக்கற்றைமேகங்கள்(Wool Pack Clouds)என்று அழைக்கப்படுகிறது
கார்படைமேகங்கள் (Nimbo Stratus): புவியின்
மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கார்படை மேகங்கள் ஆகும். இவை மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடையது.
3.கீழ்மட்டமேகங்கள் (Low Clouds)
படைத்திரள் மேகங்கள் (Strato Cumulus):
சாம்பல் மற்றும் வெள்ளை நிற வட்டத்திட்டுக்கள் 2500மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரத்தில் சாம்பல் மற்றும் வெண்மை நிறத்தில் வட்டத்திட்டுகளாக காணப்ப டும். தாழ்மேகங்கள் படைத்திரள்மேகங்கள் எனப்படுகின்றன.பொதுவாக இம்மேகங்கள் தோன்றும்போது அப்பகுதியில் தெளிவான வானிலை காணப்படும்.
படைமேகங்கள் (Stratus):
மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் படைமேகங்கள் எனப்படும்.இவை மழை அல்லது பனிப்பொழிவைத் தரும்.
திரள் மேகங்கள் (Cumulus):
தட்டையான அடிபாகமும், குவிமாடம் போன்ற மேல் தோற்றமும் கொண்டு காலிபிளவர் போன்ற வடிவத்துடனும் காணப்படும். இது தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகமாகும்.
கார்திரள் மேகங்கள் (Cumulo - Nimbus):
மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன், இடியுடன் கூடிய மழைதரும் மேகங்கள் கார்திரள் மேகங்கள் எனப்படும். இவை பொதுவாக கனமழையையும் அதிக பனிப்பொ ழிவையும் சில நேரங்களில் கல்மாரிமழை மற்றும் சுழற்காற்றுடன் கூடிய மழையையும் தருகின்றன.