புராணம்

புராணம் என்றால் என்ன?

புராணம் என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இதற்குப் பழைமை எனப் பொருள். புராணத்தில் பழைய தெய்வக்கதைகள், வரலாற்றுச் செய்திப்பட்டியல்கள், ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் ஆன்மிக உணர்வைப் பெறுவதற்கான சமயம், தத்துவம்,யோகம், போன்றவற்றைப் பற்றிய உரையாடல்கள் நிரம்பிய அறிவுக்கருவூலமாகவும் புராணங்கள் திகழ்ந்தன.

புராணங்கள் எழுதப்பட்ட காலம்:

புராணங்கள் எப்போதுதோன்றின என்று அறுதியிட்டுக் கூற இயலாது. புராணக் காலம் கி.பி.300லிருந்து கி.பி.1000த்திற்கு உட்பட்டது என்று ஆர்.எஸ். சர்மா குறிப்பிடுகிறார். கி.பி.நான்காம் நூற்றாண்டிற்கும், கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டகாலம் புராணங்களின் காலம் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இப்புராணங்களில் மிகவும் பழைமையானதாகக் கருதப்படும் வாயு புராணம் கி.பி.நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

புராணங்கள் எழுதப்பட்டதன் நோக்கம்:

மனித வாழ்வியலில் தத்துவ உண்மைகள் பாமரர்கள் புரிந்துகொள்ள கடினமானவையாக இருந்தன. எனவே, அவை பாமரர்களையும் எளிமையாகச் சென்றடையும் வகையில் நீதிக் கதைகள் வடிவில் தொகுக்கப்பட்டன. அவ்வாறு தொகுக்கப்பட்ட கதைகள் வாழ்வில் பேருண்மைகளை அனைவருக்கும் உணர்த்தின. இக்கருத்துகனே உண்மையை வெளிக்கொணர்தல் என்ற அடிப்படையில் புராணங்களாகத் தொகுக்கப்பட்டன.

புராணத்திற்குரிய பண்புகள்

புராணம் ஐந்து வகைப் பண்புகளைக் (பஞ்ச லட்சணங்களை) கொண்டதாகக் கூறப்படுகிறது. அவை 

  1. அக்காலச் சம்பவங்கள் (வரலாறு)  
  2. படைப்பு 
  3. உலகப்படைப்பின் விரிவும், ஒடுக்கமும் சூரியகுல, சந்திரகுல அரசர்களின் வம்ச விளக்கம் (அரசப் பரம்பரைகளின் பட்டியல்) 
  4. ஆதி வம்சாவழி (பரம்பரை வம்சாவழி)

புராணங்களின் எண்ணிக்கையும் எழுதியவரும்

வேதவியாசர் என்ற முனிவர் புராணக் கதைகளைத் தொகுத்தார் என்றும், புராணங்களை எழுதியவரும் இவரே என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. புராணங்களின் தொகுப்பை உலகிற்குத் தெளிவுபடுத்தியவர். சுதபுராணிகர் எனக் கூறுகின்றனர்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுளர்களும் மற்றும் அக்னி, சூரியன் போன்ற கடவுளர்களும் வேதங்களிலும், காப்பியங்களிலும் பேசப்பட்டனர். எனவே புராணங்கள் மும்மூர்த்திகளின் அடிப்படையில் சிவபுராணம், விஷ்ணு புராணம், பிரம்மபுராணம் எனப் பிரிக்கப்பட்டன.

புராணங்கள் மொத்தம் பதினெட்டு ஆகும். அவற்றில் சிவபுராணம் பத்து, விஷ்ணு புராணம் நான்கு பிரம்ம புராணம் இரண்டு, அக்னி மற்றும் சூரியன் தலா ஒரு புராணம் என்று பதினெட்டுப் புராணங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சிவ புராணங்கள் பத்து

சிவ புராணங்கள் சிவபெருமானின் பெருமைகனைக் கூறுகின்றன. அவையாவன 
  1. சிவபுராணம் அல்லது வாயு புராணம்
  2. பவிஷ்ய புராணம்
  3. மார்க்கண்டேய புராணம்
  4. லிங்க புராணம் 
  5. வராக புராணம்
  6. மத்சய புராணம் 
  7. ஸ்கந்தப் புராணம் 
  8. கூர்மபுராணம்
  9. வாமன புராணம்
  10. பிரம்மாண்ட புராணம்
ஆகியனவாகும்.

விஷ்ணு புராணங்கள்

திருமாலின் பெருமைகளைக் கூறும் நான்கு புராணங்கள் விஷ்ணு புராணம் எனப்படுகிறது. அவையாவன.  

  1. விஷ்ணு புராணம்
  2. பாகவதபுராணம்
  3. நாரத புராணம்
  4. கருடபுராணம் 
ஆகியவையாகும்

பிரம்ம புராணங்கள்:

பிரம்ம புராணங்கள் பிரம்மாவின் பெருமையை இரண்டு புராணங்கள் கூறுகின்றன. அவையாவன 

  1. பிரம்மம் எனப்படும் பிரம்ம புராணம் 
  2. பதுமம் எனப்படும் பத்ம புராணம் .
ஆகியவையாகும்

அக்னி புராணங்கள்:

அக்னியின் பெருமையைக் கூறும் ஆக்னேயம் எனப்படும் அக்னி புராணமும், சூரியனின் பெருமையைக் கூறும் பிரமை வர்த்தம் எனப்படும் பிரமை வர்த்த புராணம் ஆகும்.

தமிழ்ப் புராணங்கள்

பிற்காலத்தில் தமிழில் தோன்றியவை தமிழ்ப்புராணங்கள் என்றழைக்கப்படுகின்றன. சிவபெருமான் மனித உருவில் தோன்றி, சிவனடியார்களுக்குத் தீட்சை அளித்தும், துயரங்களைப் போக்கவும் செய்தார். அவரது இச்செயல்களைத் திருவிளையாடல் எனவும் இவற்றை இனிய தமிழில் நான்கு புராணங்களாக சுவாமி சிவானந்தர் கூறுகிறார். அவை முறையே சிவபுராணம், பெரிய புராணம், சிவபராக்கிரமம், திருவிளையாடற்புராணம் என்பனவாகும்.

பதினெண் புராணங்களை புராணங்கள் என்றும் அழைப்பர். இவற்றைத் தவிர பதினெட்டு புராணங்கள் உபபுராணங்களும் உள்ளன. அவையாவன,

  1. சூரிய புராணம் 
  2. கல்கி புராணம் 
  3. துர்வாச புராணம்
  4. கபில புராணம்
  5. நந்திகேஸ்வர புராணம்
  6. பசுபதி புராணம்
  7. கணேச புராணம் 
  8. சனத்குமார புராணம் 
  9. வாசிஷ்ட புராணம் 
  10. பராசர புராணம் 
  11. பிருகத்தர்ம புராணம் 
  12. மானவ புராணம் 
  13. காளிகா புராணம் 
  14. நரசிம்ம புராணம் 
  15. பார்க்கவ புராணம் 
  16. கம்ப புராணம்
  17. பராண புராணம்
  18. முத்கலா புராணம்

புராணங்களின் நோக்கம்

புராண இலக்கியமானது ஆழ்ந்த இந்து சமயக் கருத்துகளைக் கொண்டதாகவும் பருப்பொருள் தத்துவமாகவும், அறிவியலாகவும் போற்றப்படுகிறது. சமயம், தத்துவம், அறிவியல் இவை சம்மந்தமாக வெளிப்பட்ட பழங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அவற்றில் புரியாத கடினமான கருத்துகளையும் மிகச் சுவையாகவும், உவமான, உவமேயங்களின் மூலமும் விளக்கி மக்களின் மனத்தில் பதியச் செய்வது புராணங்களின் முக்கிய நோக்கமாகும்.

வேதக் கட்டளைகளான 'உண்மை பேசு' தருமத்தைச் செய்  என்பனவற்றை நீதிக்கதைகள் மூலம் விளக்கிக் கடைப்பிடிக்கச் செய்தன. வாழ்வைச் சீர்படுத்துவதும் சமய ஞானமும், கடவுள்
பக்தியும் கலந்த தெய்வீக உணர்வினைத் தருவதும் புராணங்களாகும்.

புராணங்களின் இன்றியமையாமை

புராணங்கள் பழைமைவாய்ந்தவை என்றும் சமயக் கருத்துகளை மட்டுமே பிரதிபலித்தன எனவும் கொள்ளுதல் தவறு. புராணங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் மக்களுக்குப் பயன்படும் அரிய உண்மைகளை எளிமையாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கூறியுள்ளன. 

  • புராணங்களில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் அவற்றின் அவதாரங்கள் மூலம் நிகழ்த்திய அருஞ்செயல்களைக் கூறுகின்றன. அத்துடன் அரசியல், மருத்துவம், சடங்குகள், சமூக விதிமுறைகள், வேதாந்தம், தத்துவம், சமயம் என்ற பல்வேறு நிலைகளுக்கு நீண்ட விளக்கங்களைத் தருகின்றன. 
  • பண்டைய நாகரிகத்தின் சிறப்புக் கூறுகள் எனப்போற்றப்படும் உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றித் தெளிவான கருத்துகனைத் தருகின்றன. 
  • கர்ம வினைகளிலிருந்தும், அவற்றின் விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, அமைதி பெறுவதற்கான வழிமுறைகளைப் புராணங்கள் கூறுகின்றன. 
  • அக்கால மக்களின் வாழ்க்கைமுறை,அரசு முறை முதலியவற்றை அறிய பெருந்துணை புரிகின்றன.  
  • புராணங்கள் கடவுள் எங்கும் இருக்கிறார்,அவருக்குப் பல திருநாமங்கள் உண்டு, மனித இதயத்தில் கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை விளக்கிக் கூறுகின்றன. பக்தன், சத்தியம், தருமம், புலனடக்கம், தெய்வபக்தி, சகிப்புத்தன்மை,தன்னம்பிக்கை ஆகிய குணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இக்குணங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இராமன், கண்ணன், அர்ஜுனன், அனுமன், சபரி, கஜேந்திரன் போன்ற பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.
  • இத்தகைய நல்ல நூல்களைப் படிப்பதன் மூலம் நல்ல குடிமக்கள், உருவாக்கப்படுகிறார்கள். அரிச்சந்திர நாடகத்தைப் பார்த்து மகாத்மா காந்தியும், புராணக் கதைகளைக் கேட்டு இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் சிவாஜியும் சிறந்த மனிதர்களாக உருவானதாக வரலாறு கூறுகின்றது. பொதுவாக மக்கள் தம் வாழ்வின் உயரிய நெறிகளை எளிதாகப் புரிந்துகொண்டு, பின்பற்ற உதவுவன புராணங்கனே என்றால் அது மிகையாகாது.
  • நாயன்மார்களுள் கண்ணப்பர், தம் இறைபக்தியால் சிவபெருமானின் கண்ணில் இருந்து வழியப் பெற்ற இரத்தத்தை நிறுக்க, தம் ஒரு கண்ணைப் பெயர்த்து வைத்ததாகவும், மேலும் மற்றொரு கண்ணிலிருந்து இரத்தம் வர, உடனே மறு கண்ணைப் பெயர்த்து அப்பி இறைவனின் துயரைப் போக்கியதால் கண்ணப்பர் எனப் பெயர்பெற்றதாகவும் அறிகிறோம்.

Post a Comment

Previous Post Next Post