சுற்றுச்சூழல் கட்டுரை
குறிப்புச்சட்டம் |
---|
முன்னுரை |
காற்று மாசு |
நீர் மாசு |
நிலம் மாசு |
ஒலி மாசு |
தொழிற்சாலைகளின் கழிவு |
மாணவர்களின் பங்கு |
முடிவுரை |
முன்னுரை:
நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தோறும் மோசமடைந்து வருகின்றது. நிலம், நீர், காற்று என அனைத்துப் பகுதிகளும் மாசடைந்து வருகின்றன. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் மனித நடவடிக்கைகளே பெரும்பங்கு வகிக்கின்றன.
காற்று மாசு:
காற்று மாசுபடுதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வாகனங்களும், தொழிற்சாலைகளும் விடும் நச்சுப் புகைகள் வாயுமண்டலத்தில் கலந்து அமில மழைகளை உண்டாக்குகின்றன. இது உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது. மேலும் ஓசோன் படலமும் தேய்ந்து கொண்டிருக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
நீர் மாசு:
நீர்நிலைகளில் துணி துவைத்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளை கலத்தல் போன்ற செயல்களால் நீரானது மாசடைகின்றது. இதனால் மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் வருகின்றன.
நிலம் மாசு:
இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியின் விளைவால் நில மாசு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நாகரீக முறையில் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பாலித்தீன் பாக்கெட்டுகளையும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எப்போதும் மட்காத இப்பொருட்களால் நிலமானது மாசடைகிறது.
ஒலி மாசு:
பெருநகரங்களில் ஒலி மாசு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மனிதனுடைய காதுகள் 120 டெசிபல் அளவு வரையே ஒலியைத் தாங்கும். ஒலி பெருக்கி, மோட்டார் வாகனங்கள், விமானம் போன்றவற்றிலிருந்து வரும் சத்தங்கள் ஒலியை மாசுபடுத்தும் காரணிகளாக விளங்குகின்றன. இதனால் மனிதர்களின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது.
தொழிற்சாலைகளின் கழிவு:
தொழிற்சாலைகள் நகரத்தில் மட்டுமன்றி கிராமங்களிலும் பெருகி வருகின்றன. தொழிற்சாலைகள் திட, திரவ, வாயு கழிவுகளை பெருமளவில் வெளியேற்றுகின்றன. இதனால் சுற்றுப்புறம் பெருமளவில் பாதிப்படைகின்றது. தொழிற்சாலைக் கழிவுகளால் மனிதனுக்கு புற்றுநோய், நரம்பு மண்டலம் பாதிப்பு, உடல் உறுப்பு பாதிப்படைதல் போன்ற பல்வேறு இன்னல்கள் வருகின்றன.
மாணவர்களின் பங்கு:
மாணவர்கள் முதலில் தங்கள் வாழ்விடமான வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும். தாங்கள் கல்வி கற்று வரும் கல்வி நிறுவனங்களை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். தெரு மக்களிடமும் ஊர் மக்களிடமும் சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தல் வேண்டும். ஊர்ப்புறங்களில் வைத்துள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைக் கொட்டுமாறு மக்களை அறிவுறுத்த வேண்டும்.
முடிவுரை:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. எனவே நம் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு நம் உடலை, வீட்டை, தெருவை, நாட்டை, சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாகப் பாதுகாப்போம். நம் உயிரும் உள்ளமும் நலமுடன் திகழப் பாடுபடுவோம்.
நன்றி:க.வேல்முருகன் (தமிழ் ஆசிரியர்)