இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா குறைந்த வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நிலையற்ற காலநிலை குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு அணுகு முறைகளில் மாற்றம் கொண்டு, இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த உத்திரவிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51A (g) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்துகிறது.
நாட்டின் பொருளாதார மேம்பாடே வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்கிறது. இதன் பொருள் மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்கக் கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதாகும். இதற்கான சட்டங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச் சூழல் கொள்கைகள் ஆகும்.
இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள்
சட்டம் | செயல்பாடு |
---|---|
தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டம், 2010 | சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறது |
பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002 | பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல். |
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 | சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல். |
வன (பாதுகாப்பு) சட்டம், 1980 | காடுகளை அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல். |
நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974 | அனைத்து வகையான ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டு பராமரித்தல் |
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972 | காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது. |