பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு பாராட்டு மடல் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
இடம்:
தேதி:
ஆருயிர் நண்பா,
நலம். நாடுவதும் அஃதே. கடந்த வாரம் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தார் மாநில அளவில் நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில் நீ முதலிடம் பெற்றுச் சுழற்கேடயத்தைப் பள்ளிக்குப் பெற்றுத் தந்து பெருமை சேர்த்துள்ளதை அறிந்து இவ்வெற்றி உன் பெற்றோர்க்கும் பள்ளிக்கும் பெருமை தருவதாகும்.
எந்தக் குறளை எப்படிக் கேட்டாலும் சொல்லும் நினைவாற்றலைப் பெருக்கி வரும் நீ திருவள்ளுவர் கழகப் பேச்சுப் போட்டியில் உனக்கே உரித்தான உரத்த குரலில் உயர்தமிழ் நடையில் பேசியிருப்பாய். கடந்த ஆண்டு இதே திருவள்ளுவர் கழகச் சுழற்கேடயத்தைப் பெற்ற நீ இந்த ஆண்டும் பெற்றுள்ளாய். அடுத்த ஆண்டும் இதனைத் தொடர்ந்து பெற்றால் இச் சுழற்கேடயம் உன் பள்ளிக்கே நிலையாக உரியதாகிவிடும். அந்த நல்ல வாய்ப்பை நீ தவறவிடமாட்டாய் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”.
என்னும் குறள் உனக்கு நன்றாகவே தெரியும். நினைத்ததை முடிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
உன்னுயிர்த்தோழன்,
பெயர்.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
நண்பனின் பெயர்,
நண்பனின் முகவரி,
இடம்.