கொரோனா கால பணியாளர்கள் பற்றி கொரோனா கால கதாநாயகர்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்
- முன்னுரை.
- மருத்துவர்கள் செவிலியர்கள்.
- முன்களப் பணியாளர்கள்.
- காவல்துறையினர்.
- செய்தி தொடர்பாளர்.
- முடிவுரை
முன்னுரை
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”
-திருவள்ளுவர்
நமக்கு திணையளவு ஒருவர் உதவி செய்தாலும் அதனை பனையளவாக எண்ண வேண்டும் என்கிறார் வள்ளுவர். அவ்வாறே கொரோனா பேரிடர் காலத்தில் உதவிய பல்துறை பணியாளர்களுக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நோயின் தீவிரம் கருதி ஊரடங்கு பிறப்பித்திருந்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், காவல்துறையினர், செய்தி தொடர்பாளர் எனப் பலரும் தங்கள் - பணியினை சேவையாக கருதி முனைப்போடு செய்தனர். அவர்களை இக்கட்டுரை மூலம் நினைவு கூர்வோம்.
மருத்துவர்கள்:
கொரோனா சாதாரண நோயல்ல கொடிய உயிர் கொல்லி நோய். அத்தகைய சவாலான நோயையும் அச்சமின்றி எதிர் கொண்டவர்கள் நம் மருத்துவர்கள். உறவுகளைப் பிரிந்தும், சிலர் உயிர் தியாகம் செய்தும் இந்நோயுடன் போராடினர். அத்தகைய மனித உயிர்களை காக்கும் மகத்தான சேவை புரிந்தவர்கள் மருத்துவர்கள்.
செவிலியர்கள்:
நாம் தொடுவதற்கு கூட தயங்கும் உறவுகளை தொட்டு சுத்தப்படுத்து அன்புள்ளம் கொண்டவர்கள் செவிலியர்கள்.கொரோனா காலத்தில் செவிலியர்களின் பணி இன்றியமையாத பணி இன்றியமையாத பணியாகும். நோய்வாய்ப்பட்டவர்களை அன்புள்ளத்தோடு கவனித்துக் கொண்டு, அவர்களுக்கு உரிய நேரத்தில் மருந்துகளை கொடுத்து, விரைவில் நலம் பெற உதவியவர்கள் செவிலியர்கள். இவர்களில் சிலர் சிறு குழந்தைகளையும் பிரிந்து ஓய்வின்றி உழைத்துள்ளனர். அவர்கள் பணி என்றும் பாராட்டுக்குரியது.
முன்களப் பணியாளர்கள்:
"ஊரை சுத்தப்படுத்தும் துப்புரவு தொழிலாளி... நம் உள்ளத்தையுமா சுத்தப்படுத்த முடியும்..
தன்னுடைய சுயகௌரவத்தை எதிர் பார்க்க..”
இந்நிலையில் இருந்த முன்களப்பணியாளர்களை கொரோனா காலம் கௌரவப்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்யும் அளவிற்கு, மக்கள் மனதில் உயர்ந்த இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் இந்த கொரோனா காலத்தில் குடும்ப வறுமையால் அவர்கள் அடைந்த துன்பங்கள் பல. கொரோனா நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவது, நோயில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவது, நோய் தொற்று பாதித்த இடங்களில் கிறுமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
காவல்துறையினர்:
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு"
என பணியாற்றியவர்கள் காவல் துறையினர். நம்மை வீட்டிலேயே இருக்க எச்சரித்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கே போகாமல் இரவு பகலாக பணியாற்றியவர்கள் காவல்துறையினர். கொரோனா காலத்தில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி நோயின் தீவிரத்தை வெகுவாக குறைக்க அரும்பாடுபட்டவர்கள் காவல் துறையினர். மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விதி மீறியவர்களை கண்டித்தும் தங்கள் பணியைத் திறம்பட செய்தனர்.
செய்தி தொடர்பாளர்:
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு."
-திருவள்ளுவர்
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க உண்மையை உரக்க சொன்னவர்கள் இவர்களே. நோயின் தீவிரத்தை உடனுக்குடன் மக்களுக்கு எடுத்துக் கூறியவர்கள் செய்தியாளர்கள். ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளையும் உண்மை நிலவரத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், நோய் பாதுகாப்பு வழிமுறைகளையும் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முடிவுரை:
"அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு”
-திருவள்ளுவர்
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பத்தை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாகும் சிறப்பையும் உண்டாக்கும். அத்தகைய அன்பு இந்த கொரோனா காலத்தில் அனைவரிடமும் தோன்றியது, அதுவே அனைவரையும் தன்னலமின்றி பணியாற்றச் செய்தது, நம்மையும் நோய் தொற்றிலிருந்து விலகியிருக்க செய்தது.
Tags:
கட்டுரை