மதுரை-தமிழர் நாகரீகமும் பண்பாடும்

மதுரை



இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்றுள்ளதில் இருந்தே இதன் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

பண்டைய காலத்தில் மதுரையை முறையே பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர். இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், அவர்களைத் தொடர்ந்து நாயக்கர்களும் ஆட்சி புரிந்தனர். இதன் விளைவாகப் பண்பாட்டுக் கலப்பு நிகழ்ந்தது. வணிகம் செழித்தது. இதற்கான சான்றுகள் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில்
கிடைத்துள்ளன.

சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் 49 பேர்.

கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த தொண்டியில் இருந்து மதுரைக்கு அகில், சந்தனம் போன்ற நறுமணப் பொருள்கள் கொண்டு வரப்பட்டன. பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை உவரி என்னுமிடத்திலிருந்து இறக்குமதி செய்தார். பாண்டியர் துறைமுகமான கொற்கைக்கு அருகில் உவரி உள்ளது.

ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையில் இருந்துள்ளது.

மதுரை ஏன் தூங்கா நகரம் என அழைக்கப்படுகின்றது?

நாளங்காடி, அல்லங்காடி என்ற இரண்டு வகை அங்காடிகள் மதுரையில் இருந்தன. நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும். அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும். இரவு பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.

பெண்கள் எந்த வித பயமும் இன்றி இரவு நேரத்தில் அல்லங்காடியில் பொருள்களை வாங்கிச் சென்றனர். அந்த அளவிற்குப் பாதுகாப்பானதாக மதுரை நகர் விளங்கியது.

வரலாற்று குறிப்புகள்

பிறநாட்டு நாணயங்களும் மதுரையில் அச்சடிக்கப்பட்டது, மதுரையின் புகழுக்கு ஒரு சான்று ஆகும்.

புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு. மௌரிய வம்ச அரசனான சந்திர குப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையைப் பற்றி தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை நகரைச் சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள் கூட செல்லும் அளவுக்கு அகலமான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு மதுரை பண்டைய காலத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்தது.

Post a Comment

Previous Post Next Post