புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் சனீஸ்வரர் திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.
சனி மகாதிசை,சனி புத்திப் பலன்கள்
பாடல் 242
கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு கொடியான வருஷமது பத்தொன்பதாகும் கேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று கேடான நாளதுவும் மூன்றதாகும் பாளப்பா பாவையரும் பாலன் தானும் பாங்கான வருஷம் ஒன்றில் சாவதாகும் ஆளப்பா அலைச்சலது மெத்தவுண்டாகும் அளவில்லா தனச்சேத மாகுந்தானே
பாடல் விளக்கம்:
சனிமகாதிசை வருடம் 19-காக்கை வாகனனான அச்சனிபகவானின் பொசிப்புக்காலம் இதில் 3 வருடம் 3 நாள்களாகும். இக்காலகட்டத்தில் துன்பம் தரத்தக்க பலன்களே விளையும். அவையாவன: மனம் விரும்பிய பாவையரும் பாலகரும் மடிவார்கள். வெகுவான அலைச்சல் திரிச்சல் உண்டாகும். வெகுதன விரயம் ஏற்படும் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்
சனி மகாதிசை,புதன் புத்திப் பலன்
பாடல் 243
தானென்ற காரிதிசை புதன்புத்திகே தன்மையுள்ள மாதமது நாலெட்டாகும் நானென்ற நாளதுவும் ஒன்பதாகும் நன்றாக அதில் பலனை நவிலக்கேளு மானென்ற மன்னரால் மகிழ்ச்சியுண்டாம் மாதர்முதல் பந்துக்களும் மகிழ்ச்சியுண்டாம் வானென்ற ஞானமுடன் யோகமார்க்கம் வளர்கின்ற கற்பமுதல் தேகசத்தியா
பாடல் விளக்கம்:
காரியென்னும் சனி திசையில் புதபகவானின் பொசிப்புக்காலம் 2 வருடம் 8 மாதங்களும் 9 நாள்களுமாகும். அதன் பலனை விரிவாகச் சொல்வேன். கேட்பாயாக! அரசர் முதலோராலும் மற்றும் தாய், இன ஜன பந்துக்களாலும் மகிழ்வே உண்டாகும். ஞான மார்க்கமும், யோகமார்க்கமும் தேக சித்தியும் (நல்லுடல் வாய்ப்பும்) கருவளரும் காலம் தொட்டே உளவாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
சனி மகாதிசை,கேது புத்திப்பலன்கள்
பாடல் 244
ஆமென்ற காரிதிசை கேதுபுத்திப் அருளில்லா மாதமது பதின்மூன்றாகும் போமென்ற நாளதுவும் ஒன்பதாகும் புகழில்லா அதன் பலனைப் புகலக்கேளு தாமென்ற தலைவலியும் கண்ரோகமாகும் தப்பாது பாண்டுஉடன் தனம்பொருளுஞ்சேதம் நாமென்ற சத்துருவால் முத்தண்ட முண்டாம் நன்மையுள்ள மாதாரால் கெர்ப்பமது பாழாம்
பாடல் விளக்கம்
சனி திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் அருளற்றதே. இது 1 வருடம் 1 மாதம் 9 நாள்கள் நடைபெறும். இக்காலகட்டத்தில் ஜாதகனுக்கு நிகழும் பலன்களாவன; சிரரோகம் ஏற்படும். கண்ணோய் வரும். மேலும் வயிறு பெருத்துக் காணும். பாண்டு போன்ற நோய் உபாதை உண்டாகும். வெகுதனமும் பெரும்பொருளும் சேதமாகும். சத்துருக்களால் மூவகையில் விரயம் உண்டாகும். நன்மையே தரும் மனைவிக்கு கெர்ப்ப நஷ்டம் ஏற்படும் என்று போகரது பேரருளால் புலிப்பாணி கூறினேன்.
சனி மகாதிசை,சுக்கிர புத்திப் பலன்கள்
பாடல் 245
பாளில்லா காரிதிசை சுக்கிரபுத்தி பாங்கான மாதமது முப்பத்தியெட்டு நாளில்லா மங்கையரும் மனமகிழ்ச்சியுமாம் நன்றான பெருஞ்செல்வம் நாலதிலேயுண்டாம் ஆளில்லா அரசனுடன் அனுதினமும் வாழ்வன் அணைகட்டு விரக்கஞருடன் அலங்காரமுண்டாம் கோளில்லா சத்துரு நோய் யில்லையது பாரு கோகனமாது செல்வம் கொறிப்பாள்தானே
பாடல் விளக்கம்:
மேலும் இக்காரியென்னும் சனிபகவானின் திசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக்காலம் 3 வருடம் 3 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் பெண்களால் மனமகிழ்வு உண்டாகும். இப்புத்தி வந்த நாள் தொட்டு வெகுவான தனப்ராப்ட்தி யோகம் உண்டாகும். எப்பொழுதும் அரசரோடு இணங்கி தினம்தோறும் மகிழ்வுடன் இச்சாதகன் வாழ்வதோடு வரும் பொருள் உரைக்கும் மந்திரிமார்களோடு அவருக்குச் சமமான அணியலங்காரங்களும் ஏற்படும். கோள் சொல்லிக் கொள்ளி வைக்கும் பலவாகிய பகைவர்களும் இல்லாதொழிவர். பொன் மகள் என்னும் இலக்குமி தேவி இச்செல்வ நலங்களைத் தருவாள் என போகர்அருளால் புலிப்பாணி கூறினேன்.
பலன்கள் சனி மகாதிசை,சூரிய புத்திப் பலன்கள்
பாடல் 246
தானென்ற காரிதிசை கதிரோன்புத்தி தயவில்லா மாதமது பதினொன்றாகும் நானென்ற நாளதுவும் பனிரெண்டாகும் நன்கையில்லா அதன் பலனை நவிலக்கேளு ஊனென்ற சுர பீடை ரெத்தமேறும் உதிரத்தால் சூலைநோய் உடனேகாணும் மானென்ற மனைவியரும் மக்கள் தானும் மயங்குகின்ற நோவதனால் வருத்தங்காணே.
பாடல் விளக்கம்:
இனி இச்சனி திசையில் கதிரவனாகிய சூரியனது பொசிப்புக்காலம் 11 மாதம் 12 நாள்களாகும். இந்தக் கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: தேகத்தில் சுர உபாதை காணுதலும் ரத்த சம்பந்தமான நோயும் வயிறுபாதையால் வாடச் செய்யும். சூலை நோயும் உடன் காணும்.
சனி மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்
பாடல் 247
காணவே காரிதிசை சந்திரபுத்தி
கனமில்லா மாதமது பத்தொன்பதாகும் தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
தோகையருஞ் சண்டையதால் துன்பம் வருங்கேடு பூணவே பூமிமுதல் பூணாபரணங்கள்
புகன்றதொரு தனமுதல் சேதமாகும் ஆணவே அலைச்சலது உண்டாகும்பாரு
அளவில்லா யேதுவுங்கூடிக் கொல்லும்
பாடல் விளக்கம்:
காரி எனும் சனி திசையில் சந்திரபகவானின் பொசிப்புக்காலம் 1 வருடம் 7 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன் கேட்பாயாக! பெண்களுடன் மனம் வேறுபட்டுச் சண்டையிடுவதால் துன்பம் நேரும். ஆண்டிருந்த பூமியும் அணிந்திருந்த ஆபரணங்களும் வெகுதனமும் விரயமாகும். மேலும் வெகுபேய்களும் வந்து கூடி மரணத்தைத் தரும் என போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
சனி மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்
பாடல் 248
கூடியே காரிதிசை செவ்வாய்புத்தி குணமில்லா மாதமது பதிமூன்றதாகும் தேடியே நாள துவும் ஒன்பதாகும் தேகமுள்ள அதன் பலனைச் சொல்லக்கேளு பாடியே பாவையரும் வகைநாசமாகும் பண்புடனே சத்துருவும் தனச்சேதம் பண்ணும் வாடியே அலைந்திடுவாய் தேசமெங்கும் வாகான தேவதையால் பிசகுண்டாமே
பாடல் விளக்கம்:
சனி மகாதிசையில் செவ்வாய் தன் பொசிப்புக் காலம் 1 வருடம் 2 மாதம் 9 நாள்களாகும். இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவன: மனம் விரும்பும் பாவையர் நாசமாவதுடன் பகைவரும் பலவாகிப் பெருகுவார்கள். இதனால் பெருந்தனம் விரயமடையும். தேசமெங்கும் வாடித்திரிந்திடும் நிலையுண்டாகும். நன்மை செய்யும் தேவதைகள் மாறுபட்டு நிற்பதால் பிழைகள் பலவாகப் பெருகிக் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
சனி மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
பாடல் 249
உண்டாகும் காரிதிசை ராகுபுத்தி உறுதியில்லா மாதமது முப்பத்திநாலு கொண்டாகும் நாளதுவும் ஆறதாகும் கொடுமையுள்ள அதன் பலனைக்குறித்துச் சொல்வோம் விண்டான வியாதியுடன் வாந்தி காணும் விதமான சரீரமதில் மேகரணமுண்டாம் துண்டாகும் சரீரமது யிருபிளவாய்ப் போகும்
துன்பமுள்ள நாளதனில் சாவாம் மாசே.
பாடல் விளக்கம்:
இச்சனி பகவானின் திசையில் ராகுபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். கொடுமை செய்யும் இக்காலகட்டத்தின் பலன்களைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! சொல்ல முடியாத நோய் வந்து பற்றும். வாந்தி காணும். தேகத்தில் ரணம் ஏற்படும். அங்கக்குறைவு ஏற்படும். அதனால் மரணமும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
சனி மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்
பாடல் 250
சாவில்லாக் காரிதிசை வியாழபுத்தி சமான முள்ள மாதமது முப்பதாகும் நாளில்லா நாளதுவும் பன்னிரெண்டாகும் நன்மையுள்ள அதன்பலனை நவிலுவோம்கேள் மாயில்லா மங்கையரும் மணமுடனே வருவாள் மார்க்கமுள்ள பழம்பொருளும் வகையுடனே வரும் காவில்லா வாகனமது கண்டெடுப்பான் பாரு கனதையுள்ள சத்துருவும் காலடியில் வீழ்வான்.
பாடல் விளக்கம்
இனி இச்சனிபகவானின் திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாள்களாகும். நன்மை தரத்தக்க இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: திருமணம் நடந்தேறும். மனத்திற்கேற்ப மனைவி அமைவாள். முதாதையர் பெரும் தனம் வகையாக வந்து சேரும். வாகனயோகம் அமையும். புதையல் தனம் கிடைக்கும், ஈனகுணம் மிக்க சத்துருக்களும் இச்சாதகனின் காலடியில் வீழ்ந்து அடிமைப் படுவர் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.