இராகு திசை பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300

புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் இராகு திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.

இராகு திசை

இராகு மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

பாடல் 224

காணவேராகு திசை வருஷம் பதினெட்டு 

கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்தி 

தோணவே மாதமது முப்பத்திரண்டு 

துகையான நாளதுவும் பனிரெண்டாகும்  

யேனவே  சத்துருவால்  நிவந்தனையோடும் 

யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழ் போனவே பழம் 

பொருளும் வேதமாகும் பிலமான நோயதுவும் கூடிக்கொல்லும்

பாடல் விளக்கம்:

சிறப்பு மிக்க இராகு மகாதிசையானது 18 ஆண்டுகளாகும். இதில் இராகுவின் பொசிப்புக் காலம் அதாவது சுயபுத்தியானது 2 வருடம் 8 மாதம் 12 நாள்களாகும். இக்காலகட்டத்தில் சத்துருக்களால் தொல்லைகளும் நிபந்தனையோடும் எண்ணமுள்ளவனாய் மனைவி இருப்பது கண்டு மனம் வெதும்புதலும், குடியிருக்கும் மனைபாழாதலும் மூதாதையர் சேர்த்து வைத்த பழைமையான கலைப்பொருள்களும் தம் பொருளும் சேதமாகி விரயம் காட்டும். அதுமட்டுமல்லாமல் பலமான பிணியுண்டாகி உயிர்க்குக் கேடு செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இராகு மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

பாடல் 225 

கூடியே ராகுதிசை வியாழபுத்தி குணமுள்ள மாதமது யிருபத்தெட்டும் நாடியே நாளதுவும் மூவெட்டாகும் நலமுள்ள ராசரால் நன்மையுடன் வாழ்வன் தேடியே தெரிவையரும் சோபனமேயாகும் தெகுட்டாத புத்திரனும் தென்புடனேவாழ்வான் பாடியே பாக்கியமும் பவுசிகளுண்டாம் பலன் தரும் பூமிமுதல் யோகந்தானே

பாடல் விளக்கம்:

இவ்விராகு திசையில் வியாழ புத்திற்குரிய காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்காலத்தில் இச்சாதகனுக்கு அரசரால் நன்மையுண்டாகும். பெண்களால் சுபசோபனங்கள் ஏற்படுதலும் புத்திரோற்பத்தியும் ஏற்படும். அதனால் மனத்தில் தெம்பும் மகிழ்ச்சியும் மிகுந்து காணும். பலவிதமான பாக்கியங்கள் ஏற்படுவதோடு சமுதாயத்தில் அந்தஸ்து மிகுதலும், வெகுதனம் வாய்த்தலும் பூமி லாபமும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இராகு மகாதிசை, சனி புத்திப்பலன்கள்

பாடல் 226 

தானென்ற ராகுதிசை சனிபுத்திகேளு

தன்மையில்லா மாதமது முப்பத்தினாலு

நானென்ற நாளதும் ஆறதாகும்

நலமில்லாப் பிரமை கொண்டு நாடுநகர் திரிவன்

கோனென்ற பிதுர் பீடையுண்டாகும் பாரு

கொடியிடையாள் நோவாகும்குழந்தையது சாவாம் 

தேனென்ற தேவதையின் இடஞ்சலுண்டாகும்

தெண்டமுடன் சத்துருவும் திரவியங்கள் சேரும்.

பாடல் விளக்கம்:

இராகு மகாதிசையில் சனிபுத்தியின் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகன் நன்மை இல்லாதவனாகப் பிரமை பிடித்தவனைப் போல் பலதேசமும் சென்று திரிவான். பூர்வபுண்ய வசத்தால் பிதுர்களினால் பீடை ஏற்படும். கொடிபோலும் இடை யுடைய மனைவிக்கு நோய் உண்டாதலும் குழந்தை மரணமும் உண்டாகும். குலதெய்வத்தால் இடைஞ்சல் ஏற்படும். பலவகையில் விரயங்கள் ஏற்படும். சத்துருக்களின் தொகைமிகுவதே போல வெகு தனலாபமும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இராகு மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

பாடல் 227 

சேதமில்லா ராகுதிசை புதனார் பத்து 

செப்புநாள் மாதமது முப்பதாகும்

பாதமில்லா நாளதுதான் பதினெட்டாகும் 

பகுத்தறிவும் அதன்பலனை பகரக்கேளு 

வாதமில்லா வாணிபஞ் செட்டாகும் பாரு 

வகையான சகோதரமுடன் வாழலாகும் 

பேதமுடன் பொருளுண்டாம் பூமிலாபம் 

பொங்குமால் புத்திரனில் புகழ் ரொம்பபாரே

பாடல் விளக்கம்

மேலும் இவ்விராகு திசையில் புதனது புத்தி 2 வருடம் 5 மாதம் 18 நாள்களாகும். அக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன் கேட்பாயாக; பின்னமில்லா வகையில் வாணிபமும் செய்தொழிலும் செழிக்கும். சகோதரர்களுடன் மனமொன்றி வாழ்தலும் நேரும். பிறருடன் சிற்சில மனபோதங்கள் ஏற்படினும் தனலாபமும் பூமி லாபமும் மேலோங்கிப் பெருத்தலோடு புத்திரரால் புகழும் பெருமையும் மிகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இராகு மகாதிசை, கேது புத்திப்பலன்கள்

பாடல் 228

பாரேநீ ராகுதிசை கேதுபுத்தி பகருகின்ற மாதமது பனிரெண்டாகும் சேரேநீ நாளதுவும் பதினெட்டாகும் செலுத்துகின்ற அதன்பலனை செப்பக்கேளு ஊரே நீவிரோதமுடன் சத்துருவுண்டாம் உடன்கேடு பண்ணிவைக்கும் உண்மைபாரு தேரே நீ திரவிங்கள் யேவலுடன் சேதம் தீதான காயங்கள் தேகத்தில் காணும்

பாடல் விளக்கம்:

இனி, இராகு திசையில் கேதுபகவானின் புத்தி ஒரு வருடம் பதினெட்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: எவ்விடத்திலும் விரோதம் ஏற்படுதலும் அதனால் பகைவர்கள் பெருகிக் காணலும் நேரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை கேட்டினையே செய்தலும் ஏவல், பில்லி முதலியவற்றால் திரண்ட திரவியங்கள் சேதமாதலும் தேகத்தில் தீராப்பிணிக்குரிய அடையாளங்களும் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இராகு மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

பாடல் 229

காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி    கணக்கான மாதமது ஆறாறாகும் கோணவே அதன்பலனைச் சொல்லக்கேளு தோகையர்கள் தன்னாலே சுகமாகும் பாரு பூணவே பூமிமுதல் பொருளுஞ்சேரும் புகழ்பெற்ற அரசரால் சந்தோஷமாகும் ஊனவே வியாதியது பீடிப்பாகும் உடன்கேடு வேந்தனால் கலகமாமே.

பாடல் விளக்கம்:

இராகு திசையில் சுக்கிர பகவான் பொசிப்புக் காலம் 3 வருடங்களாகும். இக்காலத்தில் சாதகனுக்கு நிகழும் பலன்களாவன: மயில் போலும் சாயலையுடைய பெண்களால் இன்பம் விளையும். பூமி லாபம் ஏற்படுதலும் நிறைவான பொருட் சேர்க்கையும் புகழ்மிக்க அரசர்களால் சுப சந்தோஷங்களும் ஏற்படும். எனினும் வியாதி பீடிப்பதும் அதன் காரணமாகக் காரியக்கேடு ஏற்படுதலும், அரசனால் கலகம் விளையும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இராகு மகாதிசை, சூரிய புத்திப்பலன்கள்

பாடல் 230 

ஆகுமே ராகுதிசை சூரியபுத்தி அருளில்லா மாதமது பத்தேயாகும் யேகுமே நாளதுவும் மூவெட்டாகும் யென்ன சொல்வேனதன் பலனை யியம்பக்கேளு போகுமே சத்துருவால் வியாதிகாணும் பொருள் சிலவு பூமிமுதல் சேதமாகும் சாகுமே நாள்தோறும் சண்டையாலே சதிரான பூமிமுதல் காலிபோமே.

பாடல் விளக்கம்

இவ்விராகு திசையில் சூரிய பகவானின் பொசிப்புக் காலம் கருணை தராத காலமே. இக்காலம் 10 மாதம் 24 நாள்களாகும். தீய சத்துரு ஏற்படுதலும், உடல் நலத்தைக் கெடுக்கும் வியாதி நேர்தலும் அதனால் பெரும் பொருள் செலவும் பூமி முதலிய விரயமுமாகும். ஒவ்வொரு நாளும் சண்டையிடுதலாலே சாவு நேர்தலும் பெருமை மிக்க பூமி அழிதலும் கன்று காலிகள் மாய்தலும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

பாடல் 231 

காலியென்ற ராகுதிசை சந்திரபுத்தி கனமில்லா மாதமது ஈரொன்பதாகும் விதமில்லா மனைவி தன்னால் பொருளுஞ்சேதம் வாலியென்ற குரங்கது போல் மாண்டு போவான் வகையான தேசம்விட்டு அலைவது பாரு மாலையென்ற மனைவியால் சுகபோகமில்லை மிகையான செல்வமதும் விரையமாகும் மக்கள் முதல் மாடுடன் கோடாங்கேளே

பாடல் விளக்கம்

இராகு பகவானின் திசையில் சிறப்புத்தராத சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 6 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: இன்னவிதம் என்று சொல்ல இயலாத வகையில் இதம் அறிந்து நடந்திடாத மனைவியால் பெரும் பொருட் சேதமும் இராமகாதையில் வரும் வாலியினைப் போல இச் சாதகன் மாண்டு போதலும் உண்டு. சுய தேசத்தைவிட்டு பரதேசத்தில் அலைந்து திரிதலும் மனைவியால் நற்சுகம் அடைதலும் இல்லாது போகும். மேலும் மக்களால் தான் அடைந்த பிற செல்வங்களாலும் கன்று காலிகளாலும் கேடே விளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இராகு மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

பாடல் 232

கேளப்பா ராகுதிசை செவ்வாய்புத்தி கேடான நாளதுவும் வருஷம் ஒன்று நாளப்பா நாளதுவும் பதினெட்டாகும் நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளு ஆளப்பா அக்கினியும் சோரபயமுண்டாம் அடிபணியும் தேவதையால் அவதியுண்டாம் பாளப்பா பாவையரும் பலனுந்தீதாம் பாழாகும் பொருள் சிலவும் பலவிதமுந்தானே

பாடல் விளக்கம்

இனி, இவ்விராகு திசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் கேடுதருவதே. அதுவும் 1 வருடம் 18 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நன்மை நேராது. அப்பலன்களாவன: அக்கினியாலும், திருடர்களாலும் வெகுபயம் உண்டாகும். குலதெய்வத்தின் சாபத்தால் மிகுந்த அவதி உண்டாகும். பாவையரால் ஏற்படும் பல தீங்குகளால் வெகுதன விரயம் ஏற்படும். பலவகையிலும் பொருட் செலவு உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

Post a Comment

Previous Post Next Post