செவ்வாய் திசை பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300

புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் செவ்வாய் திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.

செவ்வாய் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

பாடல்-215

ஆமென்ற சேய்திசை வருஷம் ஏழில் அங்காரகன் புத்திநாள் நூத்திநாற்பத்தி ஏழு போகமென்ற அதன்பகை ஆயுதத்தால் பீடை தாமென்ற சத்துருவால் வியாதியது காணும் தனச்சேதம் உடல் சேதம் தானே உண்டாம் நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாம் நாடேல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே.

பாடல் விளக்கம்:

இனி, சேய் என்று அழைக்கப்படும் செவ்வாயின் தசையில் அக்கிரகத்திற்குரிய சுயபுத்தி 147 நாள்கள் ஆகும். இவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: புகழ்மிக்க அரசர் பகை உளவாகும்; ஆயுதத்தாலும் பீடைகள் நேரும். நாகப்பாம்பினைப் போன்ற விடமுடைய சத்துருக்களால் வியாதியும் நேரும்; தன விரயம் ஏற்படும். உடல் சேதமும் உண்டாகும். சூனியம், பில்லி, போன்றவற்றால் துன்பங்கள் நேரும். நாடே தூற்றிப் பகையாகும் என்று போகரது அருளால் புலிப்பாணி பாடினேன்.

செவ்வாய் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

பாடல் 216

பகையான சேய்திசை ராகு புத்தி பாங்கில்லா நாளதுவும் வருஷம் ஒன்று துகையில்லா நாளதுவும் பதினெட்டாம் துன்பங்கள் சுரதோஷம் வாதபீடை வகையில்லா சத்துருவும் அக்கினியுமுண்டாம் வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும் நகையுடனே பூஷணங்கள் நலமில்லா சிலவாம் நன்மையில்லா நிலைவிட்டு நடப்பாள் காணே 

பாடல் விளக்கம்:

பகை செய்யும் கிரகமான செவ்வாய் கிரகத்தின் திசையில் கரும்பாம்பு என்ற இராகு பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 18 நாள்களாகும்; இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்கள் வெகு துன்பங்களை விளைவிக்கும் - சுரதோடம்; வாதம் முதலிய நோய்களால் பீடை சத்துருக்களினால் ஏற்படும் துன்பம் மற்றும் அக்கினியாகிய நெருப்பினால் துன்பம் நேரும்; மனைவியால் விரோதம் வந்து வகை தொகையான துன்பங்களைக் காட்டும், அணியும் ஆபரணங்களும் அழிந்தொழியும்; நலமில்லா வகையில் மனையாளும் சென்று நன்மையில்லாத நிலையினைவிட்டு நடப்பாள் என்றும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

செவ்வாய் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

பாடல் 217

காணவே சேய்திசை வியாழபுத்தி கனமான நாளதுவு மாதம்பதினொன்று நாணவே நாளதுவும் ஆறதாகும் நன்றாக, அதன்பலனை நவிலக்கேளு பூணவே பூவையரும் பொருந்தியிருப்பாள் புகழான சிலவுடனே சிறப்புண்டாகும் தோணவே சத்துருவும் வணக்கமாவான் தொடுத்ததொரு காரியங்கள் வெற்றியாமே

பாடல் விளக்கம்:

இனியொன்று இச்செவ்வாய் தசையில் வியாழபகவானின் பொசிப்பானது 11மாதம் 6 நாள் ஆகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கவனமாகக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! பூணணிந்த மாதான மனைவியும் மனையில் பொருந்தி அன்புடன் இருப்பாள். புகழானது பெருகும். மிகப் பல சிறப்புகள் ஏற்படும். சத்துருக்கள் நேசமாவர். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையில் வெகுவாக முன்னேறி நற்பெயரும் புகழும் தோற்றுவிக்கும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

செவ்வாய் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

பாடல் 218 

வெற்றியில்லா சேய்திசை சனியன்புத்தி வீறான நாளதுவும் மாதம்பதின்மூன்று சத்தியில்லா நாளதுவும் ஒன்பதாகும் சுகமில்லை அதன்பலனை சூட்டக்கேளு புத்தியில்லா சத்துவும் ரோக பயமுண்டாம் பூவையரும் புத்திரரும் புனிதமுடன் மடிவாம் கத்தியில்லா தர்க்கங்கள் மெத்த உண்டு பாரு கனதையுள்ள சூனியமும் கனாவுடனேகாணும்

பாடல் விளக்கம்:

வெற்றியே அளிக்கவல்ல செவ்வாய் திசையில் அச்செவ்வாயின் பகைவன் எனச் சொல்லத்தகும் சனிபகவானின் பொசிப்புக் காலம் 1வருடம் 1 மாதம் 9 நாள்களாகும். இவை சுகமில்லா நாள்களே. இக்கால கட்டத்தில் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! அறிவற்ற பேதைகளான சத்துருக்களினால் பயம் ஏற்படும். நோயின் பம் உண்டாகும். பெண்டிரும், புத்திரர்களும் மரணமடைய நேரிடும்; ஆதாரமற்ற தர்க்கங்கள் உண்டாகும்; அவையும் வெகுவானதாக இருக்கும். சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால் பயமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

செவ்வாய் மகாதிசை, புதன் புத்திப்  பலன்கள்

பாடல் 219

காணவே சேய்திசையில் புதனார்புத்தி கணக்கான நாளதுவும் மாதம் பதிமூன்று பூணவே நாளதுவும் மூணொன்பதாகும் பூட்டான அதன்பலனைப் புகலக்கேளு பேணவே ஓமுடிந்து பிரயமும் பெரிதான நீரிழிவும் பிலன்கேடுபண்ணும் தோணவே தோகையரும் வியாதியாவாள் தொடுத்ததொரு காரியங்கள் பொல்லாப்பாமே

பாடல் விளக்கம்:

செவ்வாய் திசையில் புகபகவானின் புத்தி 1 வருடம் 1மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: பாண்டு(வெண்குஷ்டம்) முதலிய நோய்களும், நீரிழிவும் தேக பலனை அழித்துக் கேடு செய்யும். வீட்டில் மனையாளும் வியாதிக்கு அடிமைப்பட்டு கேடடைவாள். எடுத்த காரியங்கள் எல்லாம் முற்றும் கேடுற்றுப் பொல்லாததாகவே முடியும் என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

செவ்வாய் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

பாடல் 220

ஆகுமே செவ்வாயில் கேதுபுத்தி ஆகாத நாளதுவும் நூத்திருபத்தியேழு போதவே பலன் தனைப் பூட்டக்கேளு பூவையரும் புத்திரரும் வியாதியாகும் யேருமே வியாதியது கொல்லும் யின்பமுள்ளனவிரோதம் தானுமுண்டாம் சாருமே சத்துருவும் பிசாசுதானும் சஞ்சலங்க ளதனாலே கோடிதானே.

பாடல் விளக்கம்:

மேலும், இச்செவ்வாய் திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் 127 நாள்களாகும். இவை ஆகாதவையே. இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனையில் நாகணவாய்ப்புள் போன்ற பூவையர்க்கும், புத்திரர்க்கும் வியாதி உண்டாகிப் பெருத்த துன்பம் நல்கும். அதனால் மரணமும் நேரும். இதுவரை இன்பமுள்ள அனைத்தும் துன்பம் தரும். விரோதம் பெருகும். சத்துருக்களாலும் பிசாசு பயத்தாலும் துன்பங்கள் மிகும் என்று போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

செவ்வாய் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

பாடல் 221 

தானென்ற சேய் திசையில் சுக்கிரபுத்தி தாழ்வான மாதமது பதினாலகும் வீணென்ற அதன்பலனை வினவக்கேளு விரகான சத்துருவால் விலங்குமுண்டாம் யேனென்ற ஈனஸ்திரீ போக முண்டாம் யின்பமில்லா துன்பமது யிடஞ்சல் காட்டும் கோனென்ற இராசாவால் கலகமுண்டு கோதண்டம் தான்வுருகும் கொடுமைபாரே.

பாடல் விளக்கம்:

தன்னிகரற்ற செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி தன்றன் பொசிப்புக் காலம் 14 மாதமாகும்.இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! மாறுபாடற்ற சத்துருக்களால் விலங்கு பூண நேரும்: மீன் போலும் கண்ணுடைய போகஸ்திரீயின் சேர்க்கை நிகழும். இன்பமில்லாத நிலையில் வெகு துன்பங்களே நிகழும். பலவகையிலும் காரியங்கள் கேடுறும். அரசபயம் உண்டாகும். ஆயுதத்தால் கேடுறும் பயம் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

செவ்வாய் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்

பாடல் 222 

பாரப்பா செவ்வாயில் சூரிய புத்தி பாங்கான நாளதுவும் நூற்றிருபத்தியாறு ஆரப்பா அதன் பலன் அரையக்கேளு ஆனதொரு சம்பத்து அயிஸ்வரிய முண்டாம் சாரப்பா சத்துருவு முறவாகிப் போவான் சஞ்சலங்கள் தானகலும் சம்பத்துண்டாம் சேரப்பா சில தவங்கள் சேரப்பண்ணும் தீங்கில்லா சிவவேடம் பூணுவானே.

பாடல் விளக்கம்:

கீர்த்திமிகு செவ்வாய் திசையில் சூரிய புத்தி 126 நாள்களாகும். அவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: வெகு சம்பத்து ஏற்படும், ஐஸ்வரியம் பெருகும். சத்துருக்கள் உறவாகி அதனால் இன்பம் காணும். எல்லாவகைத் துன்பங்களும் விலகும்; மிகுந்த தன லாபம் நேரும்., பல சிவத்தலங்களுக்குச் சென்று பிரசித்திமிகு பூசைகளை இச்சாதகன் புரிவான். சிவதீட்சை பெறுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

செவ்வாய் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

பாடல் 223

பூணுவான் செவ்வாயில் சந்திரபுத்தி புகழான நாளதுவும் மாதமேழு ஆணுவான் அதன்பலனை அன்பாய்க்கேளு ஆயிழையா ளருகிருந்து செல்வபதியான் கோணுவான் கொடியோர்கள் வணக்கஞ்செய்வார் கொற்றவனே குவலயத்தில் பேர் விளங்கும் ஊணுவான் தோகையரும் புத்திரருமுண்டாம் உற்றதொரு குலதெய்வம் உறுதிகாணே.

பாடல் விளக்கம்:

இச்செவ்வாய் மகாதிசையில் இறுதி புத்தியான சந்திரனின் பொசிப்புக் காலம் ஏழு மாதங்களேயாகும். இவ்வேழு மாதங்களும் நற்பலன்களும் விளையும். மனைவி இணக்கமாக இருந்து வெகு செல்வம் நல்கி விளங்கி வாழ்வாள்; தீயவர்களும் தங்கள் தவற்றினையுணர்ந்து வணங்கி வழிபடுவர். இந்நிலவுலகில் வெகுவான பேர் விளங்கும். நல்ல மனைவியரும் புத்திரரும் வாய்ப்பர். இவையெல்லாம் குலதெய்வத்தின் பேரருளால் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

Post a Comment

Previous Post Next Post