- முன்னுரை
- வாய்மையின் சிறப்பு
- வாய்மை காத்தோர்
- முடிவுரை
முன்னுரை
"யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற"
என்றார் வள்ளுவர். அறங்களுள் தலையாயதும் நிலையாயதும் வாய்மையே என்பதால் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கதிரவனைச் சில நேரம் கார்முகில் மறைப்பது போல் வாய்மையைச் சில நேரம் சூது கவ்வும். ஆனால், வாய்மையே இறுதியில் வெல்லும்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்".
என்பார் வள்ளுவர். ஆதலால், பிறிதோர் உயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதலே வாய்மையாகும். பிறர்க்குக் குற்றமற்ற நன்மையை விளைக்குமாயின், பொய்யான சொற்களும் வாய்மையின் இடத்தைப் பெறும் என்றும் வள்ளுவர் வகுத்துரைத்துள்ளார்.
வாய்மையின் சிறப்பு
தன் உள்ளம் அறியப் பொய்யின்றி நடப்பவன் உலகத்தார் உள்ளங்களிலெல்லாம் இருப்பவனாவான். தன் மனம் பொருந்த உண்மை பேசுபவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வோரைவிடச் சிறந்தவன். பொய்யில்லா வாழ்க்கை எல்லா அறத்தையும் கொடுக்கும். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தர வல்லது வாய்மை. அதனால்தான்,
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று".
என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மேலும், புறத்து இருளைப் போக்கும் ஞாயிறு, திங்கள், தீ முதலியன விளக்குகள் ஆகா; அகத்து இருளை அகற்கும் பொய்யாமையாகிய விளக்கே சான்றோர்க்கு விளக்காகும் என்று கூறி, வாய்மையறத்தினது தலைமையைத் தெளிவு படுத்தியுள்ளார்.
வாய்மை காத்தோர்
"வில்லுக்கு விசயன்; சொல்லுக்கு அரிச்சந்திரன்” என்பர். மனைவி, மகன், மன்னர் பதவி அத்தனையும் இழந்தான்; சுடுகாட்டுக் காவலனாய் வாழும் இழிநிலை அடைந்தான். அந்த நிலையிலும் பொய் கூற மறுத்து அழியாப் புகழ் பெற்றான் அரிச்சந்திரன். அந்த அரிச்சந்திரனது வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகத்தைக் கண்டு நெகிழ்ந்த அண்ணல் காந்தி அன்று முதல் தம் வாழ்நாள் முழுதும் வாய்மை காத்தார். வாய்மையே வெல்லும் என்னும் உறுதியோடு அமைதி வழியில் போராடி, ஆங்கிலேயரிடமிருந்து நம் நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தார். 'சத்திய சோதனை' என்னும் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் வாய்மையின் வெற்றியை விளக்கிக் கூறி உலகப் புகழ் பெற்றார்.
முடிவுரை
"சித்திரம் பேசேல்” என்றார் ஔவை. "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்” என்கிறது உலக நீதி. "பொய்சொல்ல லாகாது பாப்பா” என்றார் பாரதி, "மெய்சொல்லல் நல்லதப்பா” என்றார் பாரதிதாசன். சிந்தை, சொல், செயல் இம்மூன்றிலும் தூய்மை காத்து, உண்மையே உரைப்போம்; நன்மையே விளைப்போம்.