ஒற்றுமையே உயர்வு அல்லது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்னும் தலைப்பின் கீழ் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
முன்னுரை:
ஒற்றுமையோடு கூடிய உயிரினங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி அடையும். ஒற்றுமையில்லாத உயிரினங்கள் எவ்வளவு வலிமை உடையனவாய் இருந்தாலும், அவை வாழ்க்கைப் போரில் தோல்வி அடையும். இவ்வுண்மையை உயிரினங்கள் பற்றிய உண்மையை ஆய்வோர் உணர்வர். வாழ்க்கைப் போரில் வெற்றிகாண விரும்புவோர் ஒற்றுமையைப் பேணுவாராயின், செயற்கரியவற்றைச் செய்து பெரும்புகழ் அடைவார்.
ஒற்றுமை உண்டாக வழி:
ஒற்றுமை என்னும் எழில் மாளிகையை அன்பு என்னும் அடிப்படை அமைத்தும், ஒருவருக்கொருவர் உதவுதல் என்னும் செஞ்சாந்திட் டும், செவ்விய சிந்தனையென்னும் செங்கற்களை அடுக்கியும் எழுப்ப வேண்டும் அப்பொழுதுதான் ஒற்றுமை உருவாகும். மற்றும் பிறர் குற்றங்களை மன்னித்தல், கோபங்கொள்ளாமல் பொறுமையுடன் வாழ்தல் ஆகியவை அம்மாளிகையில் ஒளிவீசவல்ல ஒற்றுமை என்னும் சுடர்விளக்கின் உறுப்புக்களாகும்.
ஒற்றுமை விளக்கு:
ஒற்றுமை வாழ்வு என்னும் விளக்கு ஒளிவீச வேண்டுமானால், அன்பு என்னும் எண்ணெய் வேண்டும். அறம் என்னும் திரி வேண்டும். அளவோடு செயல்படுதல் என்னும் காற்று வேண்டும். அப்பொழுது வாழ்வாம் விளக்கு ஒளி வீசுவதைக் காணமுடியும். எனவே, வாழ்க்கையாகிய விளக்கு ஒளிவீச வேண்டுமானால், கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும்.
ஒற்றுமையின் பயன்கள்:
இல்வாழ்வின் ஒற்று மையே ஊரின் ஒற்றுமையாய் நாட்டின் ஒற்றுமையாய் உலகின் ஒற்றுமையாய் வளர்ச்சி அடையும். அவ்வளர்ச்சியிலே கல்வியின் மாண்பைக் காணலாம்; கலையின் நலத்தைக் காணலாம்; செல்வத்தின் செழிப்பைக் காணலாம்; இன்பத்தின் எழிலைக் காணலாம்; வீரத்தின் பொலிவைக் காணலாம்; வெற்றியின் விளைவைக் காணலாம்.
ஒற்றுமையின் வலிமை:
சின்னஞ்சிறு மழைத்துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் பொங்கிவரும் பெரிய ஆறு உருவாகிறது. மெல்லிய மயிலிறகுகளை எல்லாம் மொத்தமாக வண்டியில் மேலும் மேலும் ஏற்றினால் அவை வலிய வண்டியின் இரும்பு அச்சையும் முறிக்கின்றது. சின்னஞ்சிறு மீன்கள் எல்லாம் ஒன்று சேரக் குவிந்தால் பெரிய கப்பலையே தடுத்து நிறுத்தி விடுகின்றன. ஆதலின், ஒற்றுமையின் வலிமையை ஏளனமாகக் கருதாதீர். அஃது மாபெரும் ஆற்றலை உடையது. ஏழைகள் எல்லாம் ஒன்றுபட்டு எதிர்த்த பொழுது கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சி அமைப்புக்கள் அழிந்தன வன்றோ?.
ஒற்றுமையின்மையால் விளையும் கேடுகள் :
ஒற்றுமை யின்மையால் விளைந்த கேடுகள் மிகப்பலவாகும். பண்டைத் தமிழ் மன்னர்கள் அழிந்ததற்குக் காரணம் யாது? ஒற்றுமை இன்மையால் அல்லவா? மாபெரும் இந்தியா சிறிய பிரிட்டனிடம் சிக்கியதற்கு இதுவன்றோ காரணம். தொழில் வளமும் பொருள் வளமும் ஏன் நசுங்கின? ஒற்றுமையோடு உழைக்கும் மனப்பாண்மை இல்லை. ஒற்றுமையோடு பாடுபடும் செயல்திறன் இல்லை. எனவே, துன்பம் மிகுந்தது. இன்பம் குறைந்தது.
முடிவுரை:
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு'' என்னும் பாரதி பாடல் நமக்கு ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் காவியமாகத் திகழ்கின்றது. ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்ற உயரிய குறிக்கோள் உலக ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் திருமந்திரமாய் நிலவுகின்றது, வான்புகழ் வள்ளுவர் வழங்கிய திருக்குறள் ஒற்றுமையை வளர்க்கும் தாயுள்ளமாய்த் தொண்டு புரிகின்றது.
வாழ்க உலக ஒற்றுமை!