அங்கதேசம்:
துரியோதனனால் கொடுக்கப்பட்டு, கர்ணனால் ஆளப்பட்ட நாடு.
அஸ்தினாபுரம்:
குரு நாட்டின் தலைநகரம். அஸ்தி என்னும் மன்னனால் உருவாக்கப்பட்டது என்பதால் அஸ்தினாபுரம் என்று பெயர் பெற்றது. கௌரவர்கள் இங்கிருந்துதான் ஆட்சி செய்தனர்.
அமராவதி:
தேவலோகத் தலைநகரம். வனவாசத்தின் போது அர்ச்சுனன் இங்கு சென்று வந்தான். சொர்க்கம், பொன்னுலகம் என்றெல்லாம் கூறப்படுவது இந்த அமரா வதிதான்.
இந்திரப் பிரஸ்தம்:
காண்டவ வனம் என்னும் காட் டுப் பகுதியை அழித்துப் பாண்டவர்கள் உருவாக்கிய நகரம்.
இந்திர நீலமலை:
பாசுபதாஸ்திரம் வேண்டி அர்ச்சுனன் தவம் செய்த இடம்.
உபப்ளவ்யா:
அஞ்ஞாதவாசம் முடிந்தபின் பாண்ட வர்கள் சில காலம் இந்நகரில் தங்கியிருந்தனர். இது, விராட வேந்தனுக்குச் சொந்தமானது.
ஏகசக்கரம்:
அரக்கு மாளிகைச் சம்பவத்திற்குப் பின் பாண்டவர்கள் பிராமணக் கோலத்தில் மறைந்து வாழ்ந்த ஊர்.
கதலிவனம்:
பீமனுக்கும் அனுமனுக்கும் சந்திப்பு நிகழ்ந்த இடம்.
கந்தமாதனம்:
வனவாச காலத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட பாண்டவர்கள் சிரமப்பட்டு ஏறிச் சென்ற மலை.
காண்டவப் பிரஸ்தம்:
பாண்டவர்களின் முன்னோர்களான நகுஷன், யயாதி போன்றோர் வீற்றிருந்து ஆட்சி செய்த தலைநகரம். அழிவுற்றுக் காடாகிக் கிடந்த இந்த இடத்தில்தான் புதிய நகரை உருவாக்கி அதற்கு இந்திரப் பிரஸ்தம் என்று பாண்டவர்கள் பெயரிட்டனர்.
காம்யக வனம்:
வனவாசத்தின்போது பாண்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் ஒன்று.
குரு நாடு:
கௌரவர்களும் பாண்டவர்களும் இருந்து ஆட்சி செய்த தேசத்தின் பெயர்.
குருக்ஷேத்திரம்:
பதினெட்டு நாள் யுத்தம் நடந்த பூமி.
கோகுலம்:
மதுராபுரிக்கு அருகிலிருந்த ஆயர் குடி யிருப்பு. கண்ணன் வளர்ந்தது இங்கேதான்.
கௌரீவனம்:
உள்ளே நுழையும் ஆண்களையெல் லாம் பெண்களாக மாற்றும் அதிசய வனம்.
சேதி நாடு:
சிசுபாலன் ஆண்ட தேசம்.
துவாரகை:
கண்ணன் ஆட்சிபுரிந்த தீவு.
துவைத வனம்:
வனவாசத்தின்போது பாண்டவர்கள் தங்கியிருந்த இடங்களில் ஒன்று.
பத்ரீகாச்ரமம்:
வனவாசத்தின்போது தீர்த்த யாத்திரை மேற்கொண்ட பாண்டவர்கள் சில நாட்கள் தங்கியிருந்த மிக ரம்மியமான இடம்.
பாஞ்சாலம்:
துருபத வேந்தன் ஆண்ட தேசம்.
பிரமாணகோடி:
பால்ய காலத்தில் பீமனுக்குத் துரி யோதனன் நஞ்சு ஊட்டிய இடம்.
மகத தேசம்:
ஜராசந்தன் ஆண்ட நாடு.
மதுராபுரி:
கம்சனாலும் பிறகு கண்ணனாலும் ஆளப்பட்டு, அதன்பின்பு ஜராசந்தனால் எரியூட்டப்பட்ட நகரம்.
மேரு:
விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இணைப் புப் பாலமாக உள்ள மலை. இதன் வழியே ஏறித் தரும புத்திரன் சொர்க்கம் சென்று சேர்ந்தான்.
ரைவத பர்வதம்:
துவாரகை நகருக்கு வெளியே இருந்த மலை.
வாரணாவதம்:
பாண்டவர்களை ஒழிக்கத் துரியோ தனாதியரால் அரக்கு மாளிகை எழுப்பப்பட்ட நகரம்.
விசாகயூபம்:
பாண்டவர்கள் வனவாசத்தின் போது வசித்திருந்த இடங்களில் ஒன்று.
விராட நாடு:
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்த இடம். மத்ஸ்ய தேசம் என்பது இதன் பெயர். விராடன் என்பவன் ஆண்டதால் விராட நாடு.