நியூட்டனின் விதிகளை பார்ப்பதற்கு முன்பு விசை என்றால் என்ன என்று பார்ப்போம்.
விசை:
விசை என்பது ‘இழுத்தல்’ அல்லது ‘தள்ளுதல்’ என்ற புறச்செயல் வடிவம் ஆகும்.இதை
கீழ்கண்டவாறு விளக்கலாம்.
- ஓய்வில் உள்ள பொருளை இயக்குவதற்கு அல்லது இயக்க முயற்சிப்பதற்கான செயல்.
- இயங்கி கொண்டிருக்கும் பொருளை நிறுத்த அல்லது நிறுத்த முயற்சிப்பதற்கான செயல்.
- இயங்கி கொண்டிருக்கும் பொருளின் திசையினை மாற்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல் ஆகும்.
விசையானது எண்மதிப்பும் திசையும் கொண்ட ஒரு வெக்டார் அளவாகும்.
விசையின் அலகு:விசையின் SI அலகு நியூட்டன் (N)ஆகும். அதன் CGS அலகு டைன் (dyne) ஆகும்.
விசையின் வகைகள்:
விசைகளை, அவை செயல்படும் திசை சார்ந்து வகைப்படுத்தலாம்.
1.ஒத்த இணைவிசைகள்:
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை ஒத்த இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
2.மாறுபட்ட இணைவிசைகள்:
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள், எதிர் எதிர் திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை மாறுபட்ட இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
நியூட்டனின் முதல் விதி:
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும்
செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும்நேர்க்கோட்டு
நிலையிலோ தொடர்ந்து இருக்கும். இவ்விதி விசையினை வரையறுக்கிறது. அது மட்டுமின்றி,பொருட்களின் நிலைமத்தையும் விளக்குகிறது.
நியூட்டனின் இரண்டாம் விதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்தமாறுபாட்டு வீதத்திற்குநேர்தகவில்
அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும். இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. எனவே இதை
‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
நியூட்டனின் மூன்றாம் விதி:
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
நியூட்டனின் மூன்றாம் விதிக்கு எடுத்துக்காட்டு:
- பறவைகள் தமது சிறகுகளின் விசை(விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன.காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை(எதிர் விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.
- நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.
- துப்பாக்கி சுடுதலில் குண்டு, விசையுடன் முன்னோக்கி செல்ல அதற்கு சமமான எதிர்விசையினால் குண்டு வெடித்தபின் துப்பாக்கி பின்னோக்கி நகர்கிறது.
1 நியூட்டன் என்பதன் வரையறை:1 கிலோகிராம் நிறையுடைய பொருளொன்றை 1 மீவி^-2 அளவிற்குமுடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 நியூட்டன் (1N) ஆகும்.1 நியூட்டன் = 1கிகி மீவி^-2
1 டைன் என்பதன் வரையறை :1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செ. மீ^-2 அளவிற்கு முடுக்குவிக்கதேவைப்படும் விசையின் அளவு 1 டைன் ஆகும்.
1 டைன் = 1 கி செ.மீ^-2.1 நியூட்டன் = 105 டைன்