வியாசர் என்பவரால் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் ஆகும். பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கௌரவர்கள் நூறு பேருக்குமிடையேயான போராட்டத்தை இந்நூல் விளக்குகிறது. தருமன்,பீமன்,அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரும் பஞ்ச பாண்டவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட நூறு பேரும் கௌரவர்கள் எனப்படுகின்றனர். பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் சகுனியுடன் சூதாடித் தோற்று, தான் சேர்த்த செல்வங்களைச் சகுனியிடம் இழந்தான். தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயமாக வைத்துத் தருமன் சூதாட்டத்தில் இழந்தான். துரியோதனனின் சொல் கேட்டுப் பாஞ்சாலியைத் துச்சாதனன் சபையிலேயே துகிலுரிந்தான். பாஞ்சாலி, தன் மானம் காக்க, கடவுளான கண்ணனைப் பிரார்த்திக்கிறாள். கண்ணனும் அவளுக்கு அருள்பாலித்து துச்சாதனன் அவளது ஆடைகளைக் களையக்களைய தொடர்ந்து கண்ணன் அருளால் அவ்வாடை நீளமாகிக்கொண்டே போனதால் துச்சாதனன் சோர்வடைகிறான். பாஞ்சாலியை அவமானப்படுத்திய கௌரவர்களைப் பாண்டவர்கள் ஐவரும் கண்ணன் அருளோடும் உதவியோடும் குருஷேத்திர போரில் பழிவாங்கிய நிகழ்வை மகாபாரதம் கூறுகிறது.
மகாபாரதம் இந்தியாவின் இணையற்ற இருபெரும் இதிகாசங்களில் ஒன்று, 18 பருவங்கள் ஒரு லட்சம் செய்யுள்கள், கொண்ட மிகப்பெரிய நூலாகும். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்நூலைத் தழுவி வில்லிப்புத்தூரார் வில்லிபாரதம் என்ற பெயரில் தமிழில் எழுதினார். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலியின் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதினார். மூதறிஞர் ராஜாஜி வியாசர் விருந்து என்ற நூலை மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எழுதினார்.
இறைத்தத்துவங்களையும், ஒழுக்கங்களையும் கிளைக்கதைகள் மூலம் உணர்த்தும் இந்நூல் நமது பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
மகாபாரதம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்:
அரசனிடம் நற்பண்பு இல்லையென்றால் அவனும் கெட்டு அவனது நாடும் கெட்டழியும் என்பதற்குத் தருமனின் வாழ்வே உதாரணம் ஆகும். சகுனியுடன் சூதாடி செல்வங்களையெல்லாம் இழந்த அவன் தன் நாட்டையும் இழந்தான்.
உடல் வலிமை கொண்ட ஒருவன் அவ்வலிமையை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. சிறந்த சிந்தனையுடன் கூடிய மனவலிமை அவசியம் என்று பீமனின் வாழ்க்கையை மற்றவர்க்கு ஒரு வாழ்க்கை நெறியாக மகாபாரதம் கூறுகிறது. துரோணரின் தலைசிறந்த மாணவர்களில் அர்ஜுனன் வில்வித்தையில் சிறந்த வீரன் மட்டுமின்றி மிகச்சிறந்த விவேகியாகவும் இருந்தார். வீரம், விவேகம், குரு பக்தி, இறை பக்தியுடையோருக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் என்ற வாழ்வியல் நெறியை அர்ஜுனன் வாழ்க்கை மூலமாக மகாபாரதம் உணர்த்துகிறது.
சூரியன், குந்திதேவி தம்பதியின் மகனாகப்பிறந்து, அவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டு, தேரோட்டி ஒருவரால் வளர்க்கப்பட்ட கர்ணன் மிகச்சிறந்த வீரரும், கொடைவள்ளலுமாவார். தன் திறமையால் துரியோதனின் ஆதரவைப் பெற்று அங்க நாட்டு மன்னனாக்கப்பட்டார். துரியோதனன் தீய குணமுடையவனாக இருந்தாலும் செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்க குருஷேத்திரப் போரில் (அர்ஜுனனை எதிர்த்து நடைபெற்ற போரில்) கர்ணன் வீரமரணமடைந்தார். தன் நற்குணம், கொடைத்திறனை நல்லவர் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தலாம் தீயோர்களிடத்தில் நற்பண்புடையவர்களின் செயலானது விழலுக்கிறைத்த நீர்போலாகும் என்ற கருத்து கர்ணனின் வாழ்க்கை மூலம் மகாபாரதத்தில் உணர்த்தப்படுகிறது. பீஷ்மர், துரோணர் ஆகிய இருவருமே சிறந்த ஆசிரியர்கள். ஆனால், துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரித்த போது அவனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாலும் துரியோதனனுக்கு உதவியதாலும் குருஷேத்திரப் போரில் அர்ஜுனனால் பீஷ்மர் தோற்கடிக்கப்பட்டார். ஓர் ஆசான் தனக்குத் தெரிந்த கலையைத் தீயவர்க்குப் பயன்படுத்தியதன் வினையை பீஷ்மர் அனுபவித்தார் என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியை மகாபாரதம் நமக்குத் தெரிவிக்கின்றது. தலை சிறந்த குருவால் எத்தனை மாணவர்களையும் நற்பண்புடையவர்களாக மாற்றமுடியும் என்ற உயரிய தத்துவத்தைத் துரோணாச்சாரியர் வழி நின்று மகாபாரதம் வாழ்வியல் பண்பாட்டு நெறியாக விளக்குகிறது. அர்ஜுனனின் ஆசிரியராக இருந்த துரோணாச்சாரியார் குருஷேத்திரப்போரில் அவனது வெற்றிக்கு உதவினார்.
தன் சகோதரன் திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய அறிவுரைகளின் தொகுப்பே விதுரநீதி எனப்படுகிறது.
- பிறர் போற்றும்போது மகிழ்ச்சியும், தூற்றும்போது வருத்தமும் அடையாமல் யார் இருக்கிறார்களோ அவர்களே பண்டிதர்கள் ஆவர்.
- அடங்கிப்போன பகையைத் தூண்டி வளர்க்கக்கூடாது.
- அதிகம் பேசுபவரால் பொருட்செறிவுடனும் புதுமையுடனும் பேச முடியாது.
- பாணங்களால் பட்ட புண் ஆறிவிடும்; ஆனால், கொடிய வார்த்தைகளால் சொல்லப்பட்ட சிந்தனையாகிய புண் எப்போதும் ஆறாது.
- அதிக அகந்தை, அதிக கோபம் ஆகியவை பெருங்குற்றம் ஆகும். இது போன்ற அறிவுரைகள் மகாபாரதத்தில் விதுரநீதியாக இடம்பெற்று வாழ்வியல் பண்பாட்டு நெறியாக அமைந்துள்ளன
சகுனி தன்னுடைய சூழ்ச்சியால் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்படுத்திய செயலால் தானே அழிந்தான். இதன் மூலம் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தருமம் வெல்லும் என்பது புலனாகிறது.
அர்ஜூனனுக்குக் கண்ணன் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு பகவத்கீதையாகும். இந்நூல் இந்துக்களின் ஒப்பற்ற புனித நூலாகப் போற்றப்படுகிறது. மனித வாழ்விற்குத் தேவையான ஒப்பற்ற வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிகளைப் பகவத்கீதை கூறுகிறது.
மனித வாழ்வை நெறிபடுத்தவே பாரதம் எழுந்தது எனலாம். அறவழியில் நடக்கவும், மனிதனைச் சிந்திக்கவைக்கவும் செய்கிறது. சான்றோர்கள் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக எண்ணுவர். எப்போதும் அறவழியைக் கைவிடக்கூடாது என்றும் கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்ற வாழ்வியல் தத்துவ நெறியை மகாபாரதம் வெளிப்படுத்துகிறது.