தமிழக மேல்சபையின் வரலாறு:
1921ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் முதன் முறையாக மேல்சபை அமைக்கப்பட்டது. முதல் மேல்சபை தலைவராக டேவிட்சன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது இந்த ஒரு சபை மட்டுமே இருந்தது, கீழ்சபையான சட்ட சபை இல்லை, முதல் மேல் சபையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர், முதல் மேல்சபைக் கூட்டம் 1921 ஜனவரி 12ல் அப்போதைய கவர்னர் வெல்லிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்டது, பின்னர் 1923 மற்றும் 1926ம் ஆண்டுகளில் தேர்தல் மூலம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மேல்சபை அமைக்கப்பட்டது, நான்காவது மேல்சபை 1930 முதல் 1934 வரையிலும். ஐந்தாவது மேல்சபை 1934 முதல் 1937 வரையிலும் செயல் பட்டது, 1935ம் வருட அரசியல் கூட்டப்படி சென்னை மாகாணத்தில் மேல்சபை. கீழ்சபை என்று இரண்டு சபைகளாக பிரிக்கப்பட்டன, இருசபை அமைக்கப்பட்ட பிறகு 1937 ல் முதல் முறையாக மேல்சபைக் கூட்டம் நடைபெற்றது.
எம்ஜியார் தமிழக முதல்வராக இருந்தபோது 1986, மே 14ல் மேல் சபையைக் கலைக்கும் முடிவை மேற்கொண்டார், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு 1986 நவம்பர் 1ல் 65 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டுவந்த மேல்சபை முறைப்படி கலைக்கப்பட்டது, அப்போது மேல் சபையில் உறுப்பினர்களாக கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர், மேல் சபையின் தலைவராக ம.பொ.சிவஞானம் இருந்தார், திவால் நோட்டீஸ் வெளியிட்டிருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை மேல் சபைக்கு நியமனம் செய்யக் கூடாது என்று பொதுநலன் வழக்கு தொடரப்பட்டதால் கோபம் அடைந்த எம்,ஜி,ஆர் மேலவையைக் கலைத்ததாகக் கூறப்பட்டது, ஆனால் கருணாநிதி மேலவையின் உறுப்பினராக அப்போது இருந்ததால் சபையை எம்,ஜியார் கலைத்ததாகவும் கூறப்பட்டது,
சட்ட மேலவை ஒரு நிரந்தர சபையாகக் கருதப்படுகிறது. ஆட்சி கலைக்கப் பட்டாலும் மேல்சபை கலைக்கப்படுவதில்லை, மேல் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள், இதில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், மேல்சபை உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பங்குக்கு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும், மேலும் இந்த எண்ணிக்கை 40க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
தமிழக மேல்சபையில் பிரபலங்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர், 1952ல் ராஜாஜியும். 1967ல் அண்ணாதுரையும் மேல்சபையில் இருந்து நேரடியாக முதல்வர் ஆனார்கள், தமிழக மேல்சபையில் கவர்னரால் நியமிக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்.