சிறுசேமிப்பு கட்டுரை

சிறுசேமிப்பு பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

முன்னுரை:

சிறு துளி பெருவெள்ளம் என்பது பொருள் பொதிந்த பழமொழிகளுள் ஒன்று. சிறு துளியாகப் பெய்யும் மழை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி நாட்டுக்கு நலம் பல செய்கிறது. அது போலவே சிறிது சிறிதாகச் சேமிக்கும் பொருள் எதிர்காலத்தில் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலம் பல விளைவிக்கும். பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை அல்லவா? 

சேமிப்பின் தேவை:

இன்று இளமையாக இருக்கிறோம். சம்பாதிக்கிறோம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் முதுமையில் அவ்வாறு இருக்க இயல்வது இல்லை. அதனால் தான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்றார்கள். வாய்ப்பு இருக்கும் போது சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கும் பொருள் எதிர்காலத்துக்கும் எதிர்பாராச் செலவுகளுக்கும் பயன்படும்.

எதிர்பாராச் செலவுகள் :

திடீரென்று நமக்கு நோய் வந்து விடுகிறது. படுக்கையில் கிடக்கிறோம். வேலைக்குச் செல்ல இயலாது. அப்போது பொருள் வேண்டும் அல்லவா? குழந்தைகளுக்குக் கல்வி, திருமணம் என்றால் பணம் உடனே கிடைத்து விடுமா? பணம் மரத்திலா காய்க்கிறது. உடனே எடுத்துக் கொள்ள? இதற்குக் கை கொடுப்பதே சிறுசேமிப்பு ஆகும். 

எவ்வாறு சேமிப்பது?:

சேமிப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அதிக வட்டி கிடைக்கிறது என்று தனியார் நிறுவனங்களில் சேமிப்பது முதலுக்கே மோசமாகி விடும். ஆகவே அரசுத் துறைகள் மூலம் சேமிக்க முற்பட வேண்டும். இதற்கென்றே சிறுசேமிப்புத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது இது அஞ்சல் அலுவலகங்கள், அரசு வங்கிகள் மூலம் செயல்பட்டு வருகிறது. நாம் விரும்பும் ஒன்றின் மூலம் சேமிக்க முன் வரலாம்.

சிறுவர்களுக்கான முறை :

சிறுவர்களுக்குச் சேமிப்பில் ஆர்வம் ஏற்பட அழகிய அட்டைகளில் அதற்குரிய அஞ்சல் தலைகளை ஒட்டும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். சஞ்சாயிகா என்ற பெயரில் பல பள்ளிகளில் மாணவர் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் நமக்குக் கிடைக்கும் சிறு தொகையைச் சேமிப்பவர் பள்ளித் தொடக்க காலத்தில் ஏற்படும் புத்தகச் செலவை ஈடுகட்டிக் கொள்ள இயலும். 

திட்டத்தின் பயன் :

இத்திட்டத்தால் நமது எதிர்கால வாழ்வு சிறப்பாக இருக்கும். அத்துடன் நாம் இன்று சிறுசேமிப்பில் செலுத்தும் பணமானது நாட்டுப் பணிக்கும் பயன்படும். இதனால் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். மக்கள் வாழ்வு வளம் பெறும்.

முடிவுரை:

வறண்ட பாலைவனம் சோலைவனம் ஆவதற்கும் பசுங்கிளிகள் அங்கிருந்து பாடும் பாடலைச் சுவைப்பதற்கும் அடிப்படையான வாழ்வை வளமாக்கும் சிறுசேமிப்புத் திட்டங்களைப் பின்பற்றுவது அறிவறிந்தோர் கடமையாகும்.

தொடர்புடையவை: சிறுசேமிப்பு கட்டுரை மாதிரி-2

6 Comments

Previous Post Next Post