தாய்மொழி கல்வியின் சிறப்பு கட்டுரை

முன்னுரை :

"தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது" நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே. மொழி ஒரு கருவி. மனிதன் மொழி கொண்டுதான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான். தனது எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனையாற்றலைப் பெருக்கவும் துணையாக இருக்கும் தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

தாய்மொழிக் கல்வியின்  தேவை :

மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்க படவேண்டும். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கலவி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்படுத்துகின்றது. 

தாய்மொழிச் சிந்தனை :

தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியைக் கற்றாலும் ஒருவனின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான், தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவெழுச்சி வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க இயலும், தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும்.

அறிஞர்கள் பார்வை :

உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைக் கூறியிருக்கின்றார்கள். காந்தியடிகள் கூறும் போது ஜெகதீஷ் சந்திர போஸ், பி.சி. இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள் என்கிறார். சாகித் ஹுசைன் (1938-ஆம் ஆண்டு) குழு தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலை வலியுறுத்துகிறது, டி.எஸ். கோத்தாரி குழுவும் (1964) தேசியக்கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது. 

கற்கும் திறன் :

தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை, தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை, தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் தெரிவிக்க முடியும். கற்கும் திறன் அதிகரிப்பது தாய்மொழி வழியாகவே, தாய்மொழி வழியாகக் கற்கும் போது சிந்தனைத்திறன் அதிகமாகும். 

தாய்மொழிக் கல்வியின் பயன் :

“கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சிப் பெற்று ஒலிகளைக் கேட்கிறது" என்கின்றனர். மருத்துவ அறிஞர்கள், குழந்தை வளரும் சூழல் மொழித்தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. அக்குழந்தைகள் தாய்மொழி வழியாகக் கற்கும் சூழல் ஏற்பட்டால் மிகச் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக அக்குழந்தைகள் வளரும். குழந்தைகள் தாய்மொழிவழியாகக் கல்விக் கற்றால் தரமான கல்வியைப் பெறுவார்கள்.

இன்றைய நிலை :

இன்று தாய்மொழி வழியில் கல்விச் கற்பதைக் கௌரவக் குறைச்சலாகவும், கேவலமாகவும் நினைக்கின்றனர். தாய்மொழியில் கல்விக் கற்றவர்களைத் தரம் குறைந்தவர்களாகப் பார்ப்பது சமூகத்தில் நிலவி வரும் அவலங்களுள் ஒன்றாகும். தாய்மொழியில் கல்விக் கற்போருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும், 

முடிவுரை:

மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமன்று. ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்

1 Comments

  1. அருண் சார் நான் இந்த கட்டுரையை பயன்படுத்திக்கொள்ளலாமா?

    ReplyDelete
Previous Post Next Post