இந்திர விழா

இந்திர விழா (மருத நில விழா)

மருத நிலத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழா 'இந்திரவிழா', பசி, பிணி, பகை போக்குவதற்காக இந்திரனை மக்கள் வழிபட்டனர். இவ்விழா சாந்திப் பெருவிழா, தீவகச்சாந்தி என்றும் அழைக்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையிலும் மணிமேகலையில் விழாவறைகாதையிலும் இந்திரவிழா நடைபெற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழா 28 நாள்கள் நடைபெற்றது, சமயக்கணக்கர், காலம் கணிப்போர், சான்றோர்கள், ஐம்பெரும்குழுவினர், எண்பேராயத்தினர் ஆகியோர் ஒன்றுகூடி இந்திரவிழா நடக்கும் நாளை முடிவு செய்வார்

நால்வகைப் படையினரும் சூழ்ந்து வர 'இந்திரவிழா' நடைபெறும் செய்தியினை முரசு அறைந்து மக்களுக்கு அறிவிப்பர். மக்கள் வீதிகளிலும் கோயில்களிலும் பூரண கும்பங்களும் பொற்பாலிகைகளும் பாவை விளக்குகளும் வைத்தனர். வாழை, கரும்பு, கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி முதலானவற்றைக் கொண்டு நகரை அலங்கரித்தனர். வீதிகளிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதுமணல் பரப்பினர். பூதசதுக்கம் முதலான தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளைச் செய்தனர். விழா நாளில் பொது இடங்களில் சான்றோர் நல்லுரை ஆற்றினர். பட்டிமண்டபங்கள் நகரின் பல இடங்களில் ஆங்காங்கே நடைபெற்றன. இவ்வாறு புகார் நகரில் இந்திர விழா நடைபெற்ற செய்தியினைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.


இந்திர விழா புகார் நகரில் மட்டுமல்லாமல் மதுரையிலும் இந்திரவிழா நடைபெற்றதாகச் சின்னமனூர்ச் செப்பேடு தெரிவிக்கின்றது, ஐங்குறுநூற்றிலும் (52) இந்திரவிழா பற்றிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. தொடித்தோட்செம்பியனால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திரவிழா, விருந்தாட்டுவிழா ஆகிய பெயர்களில் மணிமேகலை குறிப்பிடுகின்றது.மருதநில மக்கள் போருக்குச் செல்லும் போது, தங்கள் அரசனை வாழ்த்தி விழாக் கொண்டாடுவர். இவ்விழாவில், தங்கள் வாளை உயர்த்திப் பிடித்துத் 'தண்ணுமை'தண்ணுமை' என்னும் போர்ப்பறை ஒலிக்க ஆடியும் பாடியும் குரவை நிகழ்த்துவர்.

Post a Comment

Previous Post Next Post