ஜோதிடத்தில் பாவ காரகங்கள்

பன்னிரு பாவங்கள்


இராசிச் சக்கரத்தில் முப்பது பாகையுள்ள ஒரு வீடு, பாவம், ஸ்தானம், இராசி என்று குறிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தனி குணம் அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டின் இயற்கை குணம் இராசி என்று கூறப்படுகிறது. ஆதிபத்தியம் குறித்துக் கூறும்பொழுது, பாவம் என்றும் ஸ்தானம் என்றும் சொல்லப்படுகிறது. இராசி அதிபர்கள் இராசிநாதன் பாவாதிபதி ஸ்தானாதிபதி என்று குறிப்பிடப்படுகின்றனர்.

தனிப்பட்ட வீட்டின் குணநலன்களைக் கொண்டு அந்தவீடு, இராசி எனப்படுகிறது. அதில் ஆட்சிபெறும் கிரகம் இராசிநாதன் என்றழைக்கப்படுகிறது. சந்திரன் நின்ற வீடு சென்ம இராசி எனவும் அந்த வீட்டில் ஆட்சி பெறும் கிரகம் சென்ம இராசிநாதன் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இலக்கணம்

ஒரு சாதகத்தில் இலக்கனம், முதல் பாவம் என்றும் இந்த வீட்டில் ஆட்சி பெறும் கிரகத்திற்கு இலக்கானாதிபன், இலக்கனாதிபதி என்று பெயர். இலக்கனத்தைக் கொண்டு, உயிர், ஆத்மகுணம், கௌரவம், தோற்றம், அதிகாரம், தேகம் முதலானவற்றை அறிந்து கொள்ளலாம். இலக்கனத்திற்கு,

இரண்டாம் வீடு (பாவம்)

இரண்டாவது வீட்டிற்கு தனஸ்தானம். வாக்குத் ஸ்தானம், வித்தை ஸ்தானம், நேத்திர ஸ்தானம், குடும்ப ஸ்தானம் என்றும் பெயர். இந்த வீட்டில் ஆட்சிபெறும் கிரகத்திற்கு தனேசன், தனாதிபதி, குடும்பேசன், குடும்பநாதன், குடும்பாதிபதி, வாக்கேசன், வாக்குநாதன், நேத்திரேசன் என பல்வேறு பெயர்கள் உள்ளன. இரண்டாம் பாவத்தைக் கொண்டு வாக்கு, குடும்பம், தனம், கண்பார்வை முதலியனவற்றை அறிந்து கொள்ளலாம்.

மூன்றாவது வீடு (பாவம்)

மூன்றாவது வீட்டிற்குப் பிராதுரு ஸ்தானம், தைரிய ஸ்தானம், கீர்த்தி ஸ்தானம், வீரிய ஸ்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சிபெறும் கிரகத்திற்குத் தைரியேசன், தைரியாதிபதி, வீரியாதிபதி எனப் பெயர்கள் உள்ளன. மூன்றாவது பாவத்தைக் கொண்டு, பின்சகோதரம், தைரியம் வீரியம், போகம், உதவி, ஆபரணம் முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்.

நான்காவது வீடு (பாவம்)

இலக்கனத்திற்கு நான்காம் வீட்டிற்கு சுக ஸ்தானம், மாத்ரு ஸ்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சி செலுத்தும் கிரகத்திற்கு சுகாதிபதி, வாகனாதிபதி, மாதுரு ஸ்தானன் எனப் பெயர்கள் உள்ளன. நான்காவது பாவத்தைக் கொண்டு, தாய், சுகம், கல்வி, வாகனம், வீடு, உறவு, வியாபாரம் முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஐந்தாவது வீடு (பாவம்)

இலக்கனத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சிபெறும் கிரகத்திற்குப் புத்திரேசன், புத்திராதிபதி, பூர்வ புண்ணியாதிபதி என்று பெயர். ஐந்தாவது பாவத்தைக் கொண்டு புத்திரர், தாய் குடும்பம், மனம், பக்தி, பதவி, பூர்வீக சென்மம், பூர்வீக சொத்து முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆறாம் வீடு (பாவம்)

இலக்கனத்திற்கு ஆறாம் வீட்டிற்கு சத்ரு ஸ்தானம், ருன ஸ்தானம், ரோக ஸ்தானம், சல்லிய ஸ்தானம், சோர ஸ்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சி பெற்றுள்ள ரோகாதிபதி, ருணாதிபதி, சத்ரு ஸ்தானாதிபதி, சத்துரேசன் எனப் பெயர்கள் உள்ளன. ஆறாவது பாவத்தைக் கொண்டு, கடன், நோய், எதிரி, போட்டி முதலானவற்றைப் பற்றியும் மாமனைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

ஏழாம் வீடு (பாவம்)

இலக்கனத்திற்கு ஏழாவது வீட்டிற்குக் களத்திர ஸ்தானம், காமஸ்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சி பெற்றுள்ள கிரகத்திற்குக் களத்திராதிபதி, களத்திரேசன், காமாதிபதி என்று பல்வேறு பெயர்கள் உள்ளன. ஏழாவது பாவத்தைக் கொண்டு, மனைவி, கூட்டாளி, பயணம், மரணம், வியாபாரம், காமம், காதல், முதலானவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

எட்டாம் வீடு (பாவம்)

இலக்கனத்திற்கு எட்டாம் வீட்டிற்கு அட்டமதானம், ஆயுள்தானம், மாரகத்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சி பெறும் கிரகத்திற்கு அட்டமாதிபதி, மாரகாதிபதி என்று பெயர்கள் உள்ளன. எட்டாவது பாவத்தைக் கொண்டு, ஆயுள், விபத்து, மரணவழி, வில்லங்கம், பீடை, பங்காளி, பெண்ணுக்கு மாங்கல்யம், கணவன் உயிர் முதலானவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒன்பதாம் வீடு (பாவம்)

இலக்கனத்திற்கு ஒன்பதாம் வீட்டிற்கு பாக்கியஸ்தானம், பிதுர்த்தானம், தருமஸ்தானம் என்றும் பெயர். இந்த வீட்டில் ஆட்சி பெற்றுள்ள கிரகத்திற்குப் பாக்கியாதிபதி, தருமாதிபதி, தர்மேசன் என்ற பெயர்கள் உள்ளன. ஒன்பதாம் பாவத்தைக் கொண்டு தந்தை, தருமம், பொதுச்சேவை, பிரயாணம், வழிகாட்டி, அதிஷ்டம், பாக்கியம், யோகம், முதலானவற்றை அறியலாம்.

பத்தாம் வீடு (பாவம்)

இலக்கனத்திற்குப் பத்தாம் வீட்டிற்குச் சீவனஸ்தானம், கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சி பெற்றுள்ள கிரகத்திற்குக் கருமாதிபதி, கருமேசன், ஜீவனாதிபதி, கருமநாதன் என்ற பெயர்கள் உள்ளன. பத்தாம் பாவத்தைக் கொண்டு, அரசபதவி, தொழில், செயல்திறன், தொழில்ஞானம், செயல் ஆவல், பெற்றோர் மரணம் முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்.

பதினொன்றாம் வீடு (பாவம்)

இலக்கனத்திற்குப் பதினோராம் வீட்டிற்கு இலாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம் என்று பெயர். ங்கு ஆட்சி பெற்றுள்ள கிரகத்திற்கு இலாபாதிபதி, இலாபேசன் என்ற பெயர்கள் உள்ளன. பதினோராம் பாவத்தைக் கொண்டு, இலாபம், மூத்த சகோதரம், வெளியூர் இலாபம், பெண்களின் உதவி முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்.

பன்னிரண்டாம் வீடு (பாவம்)

இலக்கனத்திற்குப் பன்னிரண்டாம் வீட்டிற்கு விரயஸ்தானம், வியஸ்தானம் என்று பெயர். இந்த வீட்டில் ஆட்சி பெற்றுள்ள கிரகத்திற்கு விரயாதிபதி, வியாதிபதி, வியநாதன் என்ற பெயர்கள் உள்ளன. பன்னிரண்டாம் பாவத்தைக் கொண்டு, விரயம், தூக்கம், மோட்சம், நிலம், வெளியூர்த் தொழில் முதலானவற்றை அறியலாம்.

Post a Comment

Previous Post Next Post