ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்
- முன்னுரை
- சாதிப் பாகுபாடு
- சமய வேறுபாடு
- ஒரே சாதி ஒரே சாமி
- முடிவுரை
முன்னுரை:
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது திருமூலரின் திருவாக்கு. இறைவன் ஒருவனே. எல்லாரும் ஓர்குலம். இவ்வுண்மையை உணராத மக்கள் சாதிமத வேற்றுமைகளை வளர்த்து, மனித குல ஒற்றுமையைக் குலைத்து வருகின்றனர்.
சாதிப் பாகுபாடு:
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார் வள்ளுவர். செய்யும் தொழிலே தெய்வமெனப் போற்றிய மக்கள் காலப்போக்கில் தொழிலடிப்படையில் சாதிகளைப் பகுத்து வைத்தனர்; குலமும் கோத்திரமும் வகுத்து வைத்தனர். தீண்டத் தகாதோர் எனச் சிலரை ஒதுக்கி, வேண்டத்தகாத கொடுமைகளை இழைக்கலாயினர். இதனால் சாதி வெறி தலைவிரித்தாடத் தொடங்கியது.
சமய வேறுபாடு
சமயம் என்னும் சொல் 'சமை' என்னும் சொல்லினின்று பிறந்து, ‘பக்குவப்படுத்தல்' என்னும் பொருளைத் தருகிறது. எல்லாச் சமயங்களும் இறைவனடி சேர்தலையே குறிக்கோளாய்க் கொண்டவை. இதனை உணர்த்தவே,
"பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி எங்கும்
கங்குகரை காணாத கடலே".
என இறைவனை விவரிக்கிறார் வள்ளலார். இதனை உணரும் திறனில்லாதவர் தத்தம் சமயமே மேலானது என்றும், உண்மையானது என்றும் போற்றுகின்றனர். பிற சமயங்கள் கீழானவை என்றும், போலியானவை என்றும் தூற்றுகின்றனர். இதனால் சமய வெறி மேலோங்கி மோதல்கள் எழுகின்றன.
ஒரே சாதி ஒரே சாமி
சாதிப் பாகுபாடும் தீண்டாமைக் கொடுமையும் ஒழிந்து, சமூக ஒற்றுமை மலர்ந்து, மனித குலம் இனிது வாழ அரும்பாடு பட்ட ஆன்றோர் பலர்.
"சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்"
என்று கேட்டார் நாவுக்கரசர்.
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்". என்றார் பாரதியார்.
"வேறுபடும் சமயமெலாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை"
என எடுத்துரைத்தார் தாயுமானவர்.
"பாருக்குள் ளேதெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டா"
என்று நம்மைக் கேட்டுக்கொண்டார் பாரதியார்.
"மனிதகுலம் ஒன்றே; எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே” என்னும் சிந்தனை எல்லார்க்கும் வரவேண்டும்.
முடிவுரை
சாதி மோதல்களும் சமயப் பூசல்களும் இன்னும் ஓயவில்லை.
"உருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே சாதி"
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் கனவை நனவாக்க எண்ணி உழைப்போமாக!