செஞ்சிலுவைச் சங்கம் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்:
- முன்னுரை
- தோற்றம்
- சின்னம்
- நோக்கம்
- வளர்ச்சி
- பணிகள்
- முடிவுரை
முன்னுரை
1859-இல் இத்தாலியில் சால்பெரீனா என்ற ஊரில் கடும்போர் நடந்தது. பிரான்சு மன்னன் நெப்போலியனும் ஆத்திரியா மன்னன் பிரான்சிசு சோசப்பும் மோதினர். பலர் உயிரிழந்தனர். குற்றுயிராய்க் கிடந்தோர் நாவற்றி நீர் கேட்டுத் தவித்தனர். இக்கொடுமையைக் கண்டு பதறிய சுவிட்சர்லாந்து வங்கி முதலாளி என்றி டியூனண்டு விரைந்து நீர் கொணர்ந்து கொடுத்தார். பலரைத் துணைக்கு அழைத்து வந்து மருந்திட்டார். இந்நிகழ்வே செஞ்சிலுவைச் சங்கம் தோன்றக் காரணமாயிற்று.
தோற்றம்
இந்நிகழ்ச்சியால் நெகிழ்ந்த என்றிடி யூனண்டு நூலொன்று எழுதி, இதுபோலப் போரினால் காயமுறுவாரைக் காக்க இயக்கம் ஒன்று தேவை என்று குறிப்பிட்டார். பெருமுயற்சியுடன் சுவிட்சர்லாந்தில் ஓர் இயக்கத்தையும் நிறுவினார்.
சின்னம்
சுவிட்சர்லாந்தின் கொடி செந்நிறத் துணியில் வெண்ணிறச் சிலுவையைக் கொண்டது. அதை நினைவுகூரும் வகையில் வெண்ணிறத் துணியில் செஞ்சிலுவை இட்ட கொடி சின்னமாக அமைக்கப்பெற்றது. இதனால் இவ்வியக்கத்திற்குச் 'செஞ்சிலுவைச் சங்கம்' என்பது பெயராயிற்று.
இச்சங்கம் உலகெங்கும் பரவியது. இசுலாம் நாடுகள் சிலுவைக் குறியிடாமல் பிறைக்குறி இட்டன. இதனால் அந்நாடுகளில் 'செம்பிறைச் சங்கம்' என்ற பெயரில் இவ்வியக்கம் இயங்கலாயிற்று.
நோக்கம்
போரில் புண்பட்டோர்க்குப் பாகுபாடின்றி மருத்துவம் செய்தலும், கைதிகளை உரியவரிடம் ஒப்படைத்தலும் இதன் தொடக்கக் கால நோக்கங்கள். பின்னர் அமைதிக் காலத்தில் உடல்நலம் பேணல் முதலியன குறிக்கோளாயின.
வளர்ச்சி
1863-இல் பதின்மூன்று நாடுகளில் இதன் கிளைச்சங்கம் நிறுவப்பெற்றது. இப்போது 74 நாடுகளில் இதன் கிளைச் சங்கங்கள் உள்ளன.
பணிகள்
போர்க்காலத்தில் புண்பட்டோர்க்கு முதலுதவி அளித்தல், நோவுற்றார்க்கு மருத்துவம் செய்தல், கைதிகளைக் காத்து உரிய நாடுகளுக்கு அனுப்புதல் ஆகியவற்றை இச்சங்கம் செய்கிறது. 1949-இல் இச்சங்கத்தின் அமைதிக்காலப் பணிகள் மூன்று துறைகளாகப் பிரிக்கப்பட்டன. மக்களின் உடல்நலம், மகப்பேற்றுக் கால உதவி, தாய்சேய் நலம் முதலியவற்றை இரண்டாம் துறை கவனிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது உயிர் காத்தல், உணவும் உடையும் வழங்கல் முதலியவற்றை மூன்றாம் துறை கவனிக்கிறது.
முடிவுரை
தன் நாட்டவர்க்கு மட்டுமன்றி எந்நாட்டவர்க்கும் தொண்டு செய்யும் இச்சங்கம் இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அமைக்கப்பெற்று நன்கு செயற்படுகிறது.
Tags:
கட்டுரை