- முன்னுரை
- உணவு
- உடை
- உறையுள்
- போக்குவரவு
- உழவு
- வாணிகமும் தொழிலும்
- மருத்துவம்
- முடிவுரை
முன்னுரை
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியலின் பங்கு நம் அன்றாட வாழ்வில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாம் அறிவியலின் துணையின்றி வளமாகவும் நலமாகவும் வாழ்தல் இயலாது என்பது உறுதியா கிவிட்டது. அளவற்ற அறிவியலின் விந்தைகளில் சிலவற்றை இங்குக் காண்போம்.
உணவு
கற்களை உரசி நெருப்புண்டாக்கி இறைச்சியைச் சுட்டுத் தின்ற மனிதன், இன்று சில மணித்துளிகளிலேயே உணவைச் சமைத்து முடிக்கும் மின்னடுப்புகள், காற்றழுத்த அடுப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். நீராவி அழுத்தத்தில் சமைக்கும் பாத்திரங்களும் உள்ளன.
உடை
இலைதழைகளை உடுத்தி வந்த மனிதன் இன்று வகைவகையான நூல்களாலான வண்ண வண்ண ஆடைகளை அணிகிறான். உடைகளைத் தைக்கவும், உடைகளில் அழகிய வேலைப்பாடுகள் செய்யவும் பொறிகள் உள்ளன. சலவை செய்யச் சவர்க்காரக் கட்டிகளும் தூள்களும் கலவைப் பொறிகளும் உள்ளன. சுருக்கம் போக்க மின் தேய்ப்புப் பெட்டிகளும் உள்ளன.
உறையுள்
மலைக்குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்று மாடமாளிகைகளில் வாழ்கிறான். பளபளப்பும் வழுவழுப்பும் மிக்க தரை, திப்பற்றாத கூரை, மின்விளக்கு, மின்விசிறி, செந்தணப்பு (Air-Condition) முதலிய பல வசதிகள் கொண்ட வளமனைகளைக் காண்கிறோம்.
போக்குவரவு
கட்டைவண்டிப் பயணம் செய்த மனிதன் இன்று மிதிவண்டி, மிதியுந்து, மகிழுந்து, வானூர்தி, கப்பல் முதலியவற்றைப் பயன்படுத்துகிறான்.
உழவு
எந்திரக் கலப்பைகள், நீர் இறைக்கும் பொறிகள், நிலத்தைச் செம்மைப்படுத்தும் உழுபொறிகள், உரங்கள் பூச்சிகொல்லி மருந்துகள் முதலியவற்றை அறிவியல் வழங்கியுள்ளதால் உழவு சிறக்கிறது.
வாணிகமும் தொழிலும்
தொலைபேசி, தொலைவரி, கணிப்பொறி முதலியன வாணிகத் தொடர்புக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளன. தொழிற்சாலைகளை இயக்க மின்சாரத்தை வழங்குவதும் அறிவியலே.
மருத்துவம்
பழுதுற்ற மனித உடலுறுப்புகளை மாற்றியமைக்க வழி கண்டுள்ளது அறிவியல். குருதி குறைந்தோர்க்கு அதே வகைக் குருதி செலுத்தப்படுகிறது.
"காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?"
என்றார் பாரதிதாசன். கருத்தடைச் சாதனங்கள் கண்டறிந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறது அறிவியல், பல கொடிய நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பெற்றுள்ளன.
முடிவுரை
நன்மைகள் பல விளைத்துள்ள அறிவியல், உலகையே சில நொடிகளில் அழிக்கவல்ல அணுக்குண்டையும் வழங்கியுள்ளது. கத்தி கொண்டு கனியையும் நறுக்கலாம்; பிறர் உயிரையும் பறிக்கலாம். அறிவியலும் அது போன்றதே. ஆதலால், ஆக்கப்பணிக்கே அறிவியலைப் பயன்படுத்தி அமைதியாய் வாழ்வோம்.