நாட்டு ஒருமைப்பாட்டில் மாணவர் பங்கு கட்டுரை

நாட்டு ஒருமைப்பாட்டில் மாணவர் பங்கு பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்:

  • முன்னுரை
  • பரந்த நோக்கு
  • பிற மொழி கற்றல்
  • ஒருமைப்பாட்டுக்கு வழிகள்
  • மாணவர் அமைப்புகள்
  • முடிவுரை

முன்னுரை

மொழியால் இனத்தால், மதத்தால், பழக்கவழகங்களால் நம் நாட்டு மக்கள் வேறுபட்டவர் என்றாலும், சிந்தையால், சொல்லால், செயலால் ஒன்றுபட்டு விளங்கினால்தான் ஒருமைப்பாடு பிறக்கும்; நாடு சிறக்கும்; உரிமை நிலைக்கும். நாட்டு ஒருமைப்பாட்டில் மாணவர் பங்கு இன்றியமையாதது. ஏனெனில், இன்று ஏடு தூக்கும் இவர்களே நாளை நாடு காக்கும் தலைவர்களாகவும், அறிஞர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் விளங்க இருக்கிறார்கள்.

பரந்த நோக்கு

மாணவர்கள் விரிந்த மனமும் பரந்த நோக்கமும் உடையவராய்த் திகழ்தல் வேண்டும். பிற மாநில மொழிகளையும் பண்பாட்டையும் இழித்தும் பழித்தும் பேசலாகாது. தத்தம் மாநிலத்தின் மீதும் மொழியின்மீதும் பற்று இருத்தல் வேண்டும். அது வெறியாக மாறிவிடக்கூடாது.

பிற மொழி கற்றல்

எம்மொழியும் யார்க்கும் பகையன்று. பிற மொழிகளைக் கற்றுத் திறன் பெற்றுப் பயனுற்று வாழ்வது தமக்குப் பெருமை என்பதை உணர வேண்டும். நம் மொழிச்சிறப்பை பிறர்க்குத் தெரிவிக்கவும், பிறர்மொழிச் சிறப்பை நாம் தெரிந்துகொள்ளவும் பிற மொழிகளைக் கற்றல் இன்றியமையாதது. 

ஒருமைப்பாட்டுக்கு வழிகள்

ஆண்டுக்கு ஒரு முறையாவது பார்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியச் சுற்றுலபா நடத்திப் பிற மாநிலங்கள் பற்றிய அறிவையும், பிற மாநிலத்தார் உறவையும் மாணவர்கள் பெறச் செய்யலாம்.

விடுதலை நாள், குடியரசு நாள், காந்தி பிறந்த நாள், குழந்தைகள் நாள், இந்திய ஒருமைப்பாட்டு நாள் போன்ற தேசிய விழாக்கள் நடத்தி மாணவர்களைப் பங்கேற்கச் செய்யலாம்.

அனைத்து மாநில விளையாட்டுப் போட்டிகளும் ஒருமைப்பாட்டு உணர்வைத் தோற்றுவித்து வளர்க்கும். பிற மாநில மக்களின் கலை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றைச் சித்தரிக்கும் திரைப்படங்களை

மாணவர்களுக்குக் காட்டப் பள்ளிகளும் கல்லூரிகளும் ஏற்பாடு செய்யலாம். 

மாணவர் அமைப்புகள்

கல்வி நிறுவனங்களில் செயற்படுகின்ற தேசிய மாணவர் படை, நாட்டுத் தொண்டுத் திட்டம், சாரணர் இயக்கம், சமூகப் பணிக்குழு போன்றவற்றில் மாணவர்கள் பங்கேற்றுத் தொண்டுள்ளமும் ஒருமைப்பாட்டு உணர்வும் பெறலாம்.

முடிவுரை

இந்து இசுலாம் ஒற்றுமைக்காக உழைத்து உயிர் கொடுத்த காந்தியடிகள், சாதி மத வேற்றுமைகள் நீங்கிச் சமுதாய ஒற்றுமை ஓங்க உழைத்த தந்தை பெரியார், வள்ளலார், அற நூல்கள் வாயிலாக மனித குல ஒற்றுமையை மாண்புறச் செய்த திருவள்ளுவர், ஔவையார், கவிதைகள் வாயிலாக நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் ஊட்டிய பாரதியார், நாமக்கல் கவிஞர் போன்றோர் வழியில் மாணவர்கள் நாட்டு ஒருமைப்பாடு தழைக்கவும் நிலைக்கவும் உழைப்பார்களாக!

Post a Comment

Previous Post Next Post