கலியுக முடிவு பற்றி கோரக்கர் கூறியதை போன பதிவில் பார்த்தோம். கலியுகம் முடிந்த பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும் என்று கோரக்கர் தனது சந்திரரேகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது பாடல்கள் பற்றியும் அதற்கான விளக்கத்தையும் இப்போது நாம் காண்போம்.
சந்திரரேகை பாடல் 84
கலியான ஆண்டு ஐயா யிரம்பின் கருத்துடனே சாதி மத பேதம் ஒன்று நலியாது சந்திரகலை ஐயாயிரம் மட் டானதப்பால் ரவியோட்ட மதிக மாகிப் பொலிவாகப் பூலோகந் திரண்டே நிற்கும் பொய்யான அந்தணரின் கொட்டம் போகும் வலியுடனே சத்தியத்தான் நிலையே யோங்கி வழுவாது மனுக்கள் ஞானி யாமே.
பாடல் விளக்கம்:
கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.
சந்திரரேகை பாடல் 86
தான தரும தத்துவ யோகம் அதிகம் ஆகும் தாரணியில் மாந்தர் பல வருண மாவர் ஈனமின்றி யோக சக்கி ராதி பத்தியம் இனமுடனே ஆண்டென் பத்தீ ராயிரம் மோனமுடன் இருந்தாண்டு வசிப்பார் நாடு முகமினிய நவரத் தின விளைவுண் டாகும் போனகமாய்க் குளிகையிட்டுப் பறப்பார் விண்ணில் பூரணமாய் ஆயுளுற்று வாழ்கு வாரே.
பாடல் விளக்கம்
இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.
சந்திரரேகை பாடல் 84 இல் கோரக்கர் கலியுகம் 5000 வருடம் தான் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று காக புஜண்டரும் கலியுக காலம் 5000 என்று பெருநூல்காவியிம் 800 என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கலியுக வருடம் சரியாக தெரியவில்லை. சிலர் கலியுக வருடம் 5000 முடிந்துவிட்டதாக கூறுகின்றனர் அதற்கும் ஆதாரங்கள் இல்லை.