சுக்கிரதிசை பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300

புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் சுக்கிர திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.

சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

பாடல் 269:

காணவே சுக்கிரதிசை வருஷம் நாலைந்து கனமான சுக்கிரனில் சுக்கிரன் புத்தி பூணவே மாதமது நாற்பதாகும் பூலோக மன்னரைப்போல புவியிலரசாள்வான் பேணவே சவுக்கியங்க ளுண்டாகும்பாரு பெரிதான லெட்சுமியும் பொற்கொடிபோல் வருவான் தோணவே சோபனமும் சுபயோகமுண்டாம் தோகையர்கள் வந்தவுடன் தொகுதியுடன் வாழ்வான். 

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசை வருடம் மொத்தம் 20 ஆகும். இதில் சுக்கிர பகவானின் சுயபுத்தியான ஆதிக்க காலம் 2 வருடம் 4 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பூமியில் ஓர் அரசனைப்போல வெகு சிறப்புடன் வாழ்வான் பலவிதமான சுக போக ளும் உண்டாகும் பெருமை தரத்தக்க இலக்குமி தேவியானவள் இவனது மனையை விரும்பி ஒரு பொற்கொடி போல வந்து அமைவாள் சுப சோபனங்களும் சுபயோகங்களும் உண்டாகும் மனம் விரும்பிய மங்கையர் வாய்த்து பலவகையிலும் இன்பம் துய்த்து வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்

சுக்கிர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்

பாடல் 270:

வாழலாம் சுக்கிரதிசை சூரியபுத்தி வகையில்லா மாதமது பனிரெண்டாகும் நாளலாம் அதன்பலனை நவிலக்கேளு நன்மையில்லா சுரபிடை நாய்கடிகளுண்டாம் கேளலாம் சத்துருவும் குடிகேடுசெய்வான் குணமான தாய்தந்தை மரணமதுவாகும் வாழலாம் சித்தமதில் வெகு கலக்கமுண்டாம் மனைவிதனைவிட்டேகி மலையாண்டியாவான்

பாடல் விளக்கம்:

இச்சுக்கிர மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 1 வருடமாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக ஜுரத்தினால் பீடையுண்டாகும். நாய் கடித்தல் போன்ற பிணியும் உண்டாம். பகைவர்கள் குடிகெட்டுப்போகும் வண்ணம் கேடு நினைத்து அதனை நிறைவேற்றவும் செய்வர். நல்ல குணம் பொருந்திய தாய், தந்தையின் மரணம் முதலியன சம்பவிக்கும். குறைவற வாழ்ந்த போதிலும் அறிவில் தெளிவின்றி வெகு கலக்கம் ஏற்படும் தன் துணைவியை விட்டுப்பிரிந்து ஆண்டியாகி மலைப்பிரதேசங்களுக்குச் செல்வாள் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்

சுக்கிர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

பாடல் 271 

ஆவானே சுக்கிரதிசை சந்திர புத்தி அருளில்லா மாதமது நாலைந்தாகும் போவானே அதன்பலனைப் புகலக்கேளூ பொன்பெறுவான் அன்னையும் மரணமாவாள் சாவானே சம்பத்தும் குறைந்துபோகும் சதிரான மனையை விட்டு ஓடிப்போவான் நோவானே வியாதியது துடர்ந்து கொள்ளும் நுணுக்கமுள்ள வினைசமயம் நுகருந்தானே

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன திருமகளைப் போல் திகழ்ந்த அன்னை மரணமடைவாள். அவளது சாவுக்குப்பின் தேடி வைத்திருந்த திரவியங்கள் நாசமாகிப் போகும். பதர் போன்ற மனைவியை விரும்பாது அவளிடமிருந்து விலகி இச்சாதகள் ஓடிப் போதலும் நேரும். வியாதி தொடர்ந்து காண்பதால் வெரு வருத்தையும் அடைவாள். சமயம் பார்த்து பழவினையானது தனது பணியைச் செய்வது எத்தனை அதிசயமானது எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்

சுக்கிர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

பாடல் 272 

தானென்ற சுக்கிரதிசை செவ்வாய்புத்தி தாழ்வான மாதமது பதினாலாகும் யேனேன்ற அதன் பலனை யியம்பக்கேளு எலிகடியும் பீனிசமும் இளைப்பு முண்டாம் வானென்ற வயத்தினிலே நோவுண்டாகும் வகையுடனே ஆசனத்தில் கடுப்புண்டாகும் தேனேன்ற தெரிவையர்கள் விகற்பமாகும் தீதான சத்துருவும் சேர்வான்பாரே

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன எலி கடித்தலால் ஏற்படும் நெடுநாள் இருமல் முதலியனவும் வந்து பற்றிக் கொள்ளும் வயிற்றில் உபாதை ஏற்படும். குதத்தில் கடுப்பு உண்டாகும் பெண்களால் தொல்லைகள் ஏற்படும், கொடுமையான பகைவனும் வந்து பற்றிக் கொள்வான் என்று போகரின் பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

சுக்கிர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

பாடல் 273

பாரப்பா சுக்கிரதிசை ராகுபுத்தி பகையான மாதமது முப்பத்தாறாம் சேரப்பா அதன் பலனை செப்பக்கேளு சிரரோகம் காமாலை ஜெயமும்நோவாம் ஆரப்பா அரசர்பகை அகமிருந்துமாமே அன்பான தாய் தந்தை அடவுடனே சாவாம் மேரப்பா மேகமதால் ரோகமுண்டாம் மேலெல்லாம் சிரங்குகுட்டம் ஆவான்பாரே 

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசையில் இராகு பகவானின் ஆதிக்க காலம் - வருடங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன சிரரோகம், காமாலை, சயரோகம் முதலிய நோய்கள் ஏற்படுதலோடு அரசரது பகையும், அபமிருந்து தோஷமும் மனத்திற்கினிய தாய் தந்தை மடிந்து படுதலும் ஏற்படும் மேலும் மேக நோய் எனும் ரோகம் ஏற்பட்டு தேகமெங்கும் சிரங்கு, குட்டம் போன்ற நோயுற்று அவதிப்படுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சுக்கிர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

பாடல் 274

காணவே சுக்கிரதிசை வியாழபுத்தி கனமான மாதமது முப்பத்திரண்டு தோணவே அதன்பலனை சொல்லக்கேளு தோகையரும் மங்களமும் சுபயோகமாகும் பேணவே பெருஞ்செல்வம் பெருகும்பாரு பெரிதான புத்திரனும் பெண்களுண்டாகும் நாணவே நாடுநகரம் உண்டாகும்பாரு நன்மையுடன் வாகனமும் நட்புடனே உண்டாம்

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசையில் வியாழ பகவானின், ஆதிக்க காலம் 2 வருடம் - மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன. மனம் விரும்பிய மங்கையரைச் சேர்தலும் அதனால் மங்களகரமான வாழ்வும் சுபயோகங்களும் நேரும் விரும்பிய வண்ணம் பெரும் பொருட் சேர்க்கை ஏற்படும். அச்செல்வம் மேலும் மேலும் பெருகிக் காணும். நன்மை தரத்தக்க ஆண் சந்தானமும் பெண் மக்களும் வாய்ப்பர் நாடு நகரங்கள் வசமாகும் பலவிதத்திலும் நன்மையும் வாகன யோகமும் ஏற்பட்டு சிறந்த நண்பர்களையும் பெற்றுச் சுகித்து வாழ்வான் எனப் போகர் கருணையால் புலிப்பாணி புகன்றேன்

சுக்கிர மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

பாடல் 275

உண்டாகும் சுக்கிர தசை சனியன்புத்தி உண்மையுள்ள மாதமது முப்பத்தெட்டு தெண்டாடும் தினபலனை சொல்லக்கேளு திரவியமும் பூமிமுதல் சேரும்பாரு நன்றாகும் அரசர்பதி யாவாய்பாரு நன்மையுள்ள மாதர் மைந்தர் நாடு நகர்உண்டாம் சென்றாகும் செல்வபதி யாவான்பாரு தீர்க்கமுள்ள மன்னனெனச் செப்பலாமே

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன வெகு தன லாபம் வாய்க்கும் பூமி, மனை முதலியன நேரும். அரச சம்பத்துடன் வாழ்வது நேரும். குலமாதர், நன்மைந்தர் அமைதலோடு நாடு நகரங்களும் உண்டாகும். மிகப்பெரிய தனவந்தனாகி ஆளுமை மிகுந்து ஒரு பெருமன்னன் என்று கூறக்கூடிய வகையில் அவளியில் பொலிவுறு வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்

சுக்கிர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

பாடல் 276

ஆமென்ற சுக்கிரதிசை புதனார்புத்தி அன்புடைய மாதமது முப்பத்தினாலு நாமென்ற அதன்பலனை நவிலக்கேளு நாடுநகர் உன்வசமே ஆகும்பாரு தானென்ற தன்னரசு ஆண்டுநீயும் தரணியில் நீயுமொரு தவசியாவாய் போமென்ற பொன்முதலும் பூமியாண்டு பொங்கமுடன் தானிருந்து அரசு ஆள்வாய்

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசையில் புதபகவானின் ஆதிக்க காலம் 2 வருடம் 10 மாதங்களும், இக்கால கட்டத்தில் விளையும் பலன்களைக் கூறுவோம் தெளிவாகக் கேட்பாயாக நாடு நகரம் வசமாகும் தன்னிகரில்லாத அரசனென ஆட்சி புரியும் நிலை ஏற்படும். முடிவில் இந்நிலவுலகில் தவத்திற் சிறந்த தவசியாதலும் நேரும் கைவிட்டுப்போம் என்று சொல்லத்தகும் பொன் முதலாகிய பொருள்களையும் பூமி லாபத்தையும் பெற்று அரச செல்வமெய்தி ஆண்டிருக்கும் நிலை ஏற்படும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சுக்கிர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

பாடல் 277 

ஆளலாம் சுக்கிரனில் கேதுபுத்தி ஆகாத மாதமது யீரேழாகும் வாழலாம் அதன்பலனை வகுத்துச் சொல்வேன் வளர் கொடியாள்தான் சாவாள் வான் பொருளும் போகும் தாழ்வான தன்னரசு ராச்சியங்கள் போகும் சம்பத்து தான்குறையும் தந்தைதாய் மரணம் கோளலாம் சத்துருவால் குடிகேடாகும் கோதையரும் தான்போவாள் குடிகேடாமே

பாடல் விளக்கம்:

சுக்கிர மகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன வளருகின்ற கொடிபோலும் இடையுடைய மனையாள் மரணம் நேரும் மிகுதியான திரவிய நாசம் ஏற்படும். ஒப்பாகும் மிக்காரும் இல்லாது தனித்தரசாண்டிருந்த நிலைமை மாறும். நாடு நகரங்கள் இழப்பாகும், சம்பத்து குறையும் தாய் தந்தை மரணமடைவர் கோள் வைக்கக் கூடிய சத்துருக்களால் குடிக்குக் கேடு விளையும். மனைவி மனம் வெறுத்து வீட்டைவிட்டுப் போவாள். குடும்பமானது சிதையும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

Post a Comment

Previous Post Next Post