புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் கேது திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.
கேது மகாதிசை, கேது புத்திப் பலன்கள்
பாடல் 260
ஆமென்ற கேதுதிசை வருஷம்யேழு
அதனுடைய புத்திநாள் நூத்திநாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனைப் புகலக்கேளு
புகழான அரசர்படை ஆயுதத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதிகாணும்
தனச்சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாகும்
நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப்பகையே
பாடல் விளக்கம்
கேது பகவானின் திசை வருடம் 7 ஆகும். இதில் இவரது சுய புத்தியான ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவை தான் என்று சொ வோம். நன்கு கவனித்து கேட்பாயாக! புகழ் மிக்க அரசரது படையாலும் ஆயுதங்களாலும் பீடைகள் ஏற்படும். வலிய பகைவரால் பலவகைத் தொந்தரவுகளும் அதனால் வியாதியும் நேரும். பெரும் பொருட்சேதமும் அங்கத்தில் குறையுண்டாதலும் தானாகவே வந்துசேரும். தான்வசிக்கும் நகரத்தில் பலவகைச் சூனியங்களும் உருவாகும், நாட்டுமக்கள் எல்லாரும் பகையாகித் துன்பம் தருவதால் நன்மை நேராது என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
கேது மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்
பாடல் 261
பகையான கேதுதிசை சுக்கிரபுத்தி
பாங்கில்லா மாதமது பதினாலாகும்
தகையான அதன் பலனைச் சாற்றக்கேளு
தாழ்வில்லா சத்துருவால் விலங்குண்டாகும்
நகையான பூஷண்ங்கள் நசிவதாகும்
நாரழையாள் தன்னுடனே அபமிருத்துகாணும்
வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி
மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வன்காணே
பாடல் விளக்கம்
கேது மகாதிசையில் சுக்கிரபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவரால் நிகழ்த்தப்பெறும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! குறைதல் இல்லாத பகைவரால் விலங்கு பூணுதல் நேரும். பலவகையான பொன்னாபரணங்களும் விரயங்களாகும். மனைவிக்கும் இச்சாதகனுக்கும் அபமிருந்து தோடம் காணும். எனினும் தன்மையுள்ள அரச சகாயத்தால் மனத்தில் மகிழ்ச்சியுண்டாகி மனைவி மக்களுடன் சுகித்து வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.
கேது மகாதிசை, சூரிய புத்திப்பலன்கள்
பாடல் 262
பாரப்பா கேது திசை சூரியபுத்தி
பாங்கான நாளதுவும் நூத்தி இருபத்தி
ஆறு பாரப்பா அதன் பலனைச்
சொல்லக்கேளு ஆகாதசத்துருவால்
அக்கினியும் பேயும் சேரப்பா சேர்ந்துமே
கூடிக்கொல்லும் சேர்ந்துநின்ற
தந்தைகுரு மரணமாகும் வீரப்பா
வீண்சிலவு மிகவேயாகும் வீடு விட்டு காஷாயம் பூணுவானே
பாடல் விளக்கம்
கேது மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 4 மாதம் 6 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! மனம் ஒவ்வாத பகைவரால் துன்பம் நேரும். அக்கினி பயமும் பேய், பிசாசுகளினால் மிகுந்த பயமும் சேர்ந்து இச்சாதகனைக் கொல்லும். இவர்க்கு உறுதுணையாக நின்ற தந்தைக்கும், குருநாதர்க்கும் மரணம் ஏற்படும். வீணான தண்டச் செலவுகளால் இச்சாதகன் துறவு பூணுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
கேது மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்
பாடல் 263
பூணுவான் கேதுதிசை சந்திரபுத்தி
புகழான மாதமது நாலுமூணும்
ஆணுவான் அதன் பலனை
அரையக்கேளு ஆயிழையாள் விலகி
நிற்பள் அதமமாகும் தோணுவான்
தோகையரும் புத்திரரும் பாழாம்
தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும்
நாணுவாள் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து
நன்றாகமடிந்திடுவான் நலமில்லைதானே
பாடல் விளக்கம்
இக்கேது மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 7 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவைதான் எனக் கூறுவோம். கவனித்துக் கேட்பாயாக! மனைவியானவள் , இச்சாதகனுடன் மனம் வேறுபட்டு விலகி நிற்பாள். அதர்மம் நேரும். மனைவி மக்கள் பாழடைவர். மிகப் பலவாகிப் பல்கி இருந்து பெரும் பொருள்கள் சேதமடைதலும் நேரும். தனது மனைவி தண்ணீரில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நலமில்லாத துர்ப்பலன் நிகழும். இது கண்டு இச்சாதகன் நாணுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
கேது மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்
பாடல் 264
தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி
தாழ்வான நாளதுவும் நூத்தியிருபத்தியேழு
வானென்ற அதன்பலனை வழுத்தக்கேளு
வண்மையுடன் சத்துரு தானே உண்டாம்
கோனென்ற திரவியமும் சேதமாகும்
கோதையரால் குலமதுவு நாசமாகும்
தேனென்ற திரவியமும் சேதமாகும்
தெகுட்டாத துணை தம்பி தீதுண்டாமே
பாடல் விளக்கம்
இனி இக்கேது பகவானின் திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவரால் நிகழ்த்தப் பெறும் பலன்களைக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வலிமையுள்ள இனஜன பந்துக்களும் தாமறியாதவாறே சத்துருக்களாக மாறிப் போவர். மனையில் சிலர் கோள் சொல்லுதலால் குடும்பம் பாழாகும். பெண்களால் குல நாசம் ஏற்படும். நிதானித்துத் திரட்டிய வெகுதனமும் விரயமாகிப்போகும். சகோதர விரோதம் உண்டாகி அதனால் தீமை மிக்க பலனே நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
கேது மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
பாடல் 265
உண்டான கேதுதிசை ராகுபுத்தி
உண்மையில்லா நாளதுவும் வருடம்
ஒன்று நன்றாகும் நாளதுவும் மூவாறாகும்
நலமில்லா அதன்பலனை நவிலக்கேளு
விண்டாகுஞ் சத்துருவால் சோரபயமாகும்
வினையான மனைவிதன்னால் வீண்கலகமாகும்
ஒன்றாகும் உன் உடம்பில் பிணியுண்டாகும்
உறுதியில்லா உந்தெய்வம் ஓடுந்தானே
பாடல் விளக்கம்
கேது மகாதிசையில் இராகுபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 18 நாள்களாகும். நன்மை தராத அக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுவோம். கவனமாய்க் கேட்பாயாக! பகைவராலும், திருடர்களாலும் மிகு பயம் ஏற்படும். சந்தேகம் கொண்ட மனைவியினால் குடும்பத்தில் வீண் கலகம் ஏற்படும். தேகத்தில் வியாதி காணும், இச்சாதகனின் குலதெய்வமானது இவன் மனையில் தங்காது குடியோடிப் போகும் என்று போகமா முனிவர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
கேது மகாதிசை, வியாழன் புத்திப்பலன்கள்
பாடல் 266
காணவே கேதுதிசை வியாழபுத்தி
கனமான மாதமது பதினொன்றாகும்
தோணவே நாளதுவும் ஆறதாகும்
துகையான தனங்களும் புத்திரனாலுண்டாம்
பூணவே மூவுடையாள் நிர்த்தனம்
செய்வாள் பூமிதனில் வெகுலாபம்
பொருந்திக்காணும் நாணவே ராசாங்க யோகம் பெற்று நன்றாக
சுகம் விளையும் யோகந்தானே
பாடல் விளக்கம்
கேது மகாதிசையில் வியாழ பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 6 நாட்கள் ஆகும், இக்கால கட்டத்தில் புத்திரனால் வெகுதனம் உண்டாகும். மனம் விரும்பிய மனைவி மகிழ்ச்சிக் கூத்தாடும் வண்ணம் மனையில் மகிழ்ச்சி பொங்கும். பூமிதனில் விளைச்சல் மிகுந்து வெகு லாபம் தன்னிறைவாக வந்தடையும். வெகுவான அரசாங்க நன்மைகளும் உதவிகளும் சேர்ந்து மனச்சோர்வகற்றும். பலவகையிலும் சகாயங்கள் நேர்ந்து யோகத்தைச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
கேது மகாதிசை, சனி புத்திப் பலன்கள்
பாடல் 267
தானென்ற கேதுதிசை சனியின்புத்தி
தாழ்வான மாதமது பதிமூன்றாகும்
நானென்ற நாளதுவும் ஒன்பதாகும்
நலமில்லா அதன்பலனை நவிலக்கேளு
வானென்ற வான்பொருளும் கேடுவாகும்
வகையான மனைவியுடன் மக்களதும்போம்
மானென்ற பதிமூன்றில் மரணமாவான்
மனக்கவலை ரொம்ப உண்டு மாள்வான்பாரே
பாடல் விளக்கம்
கேது மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் தெளிவாகக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வானளாவிய செல்வமும், பெரும் பொருளும் சேதம் அடையும். நன்மையையே விரும்பிச் செய்யும் மனைவி மக்கள் கை விட்டுப் போதலும் நேரும். மூன்று மாத கால அளவில் மரணமும் நேரும். மிகுதியான மனக் கவலையால் பீடித்த இச்சாதகனுக்கு மரணம் நேர்தலும் உண்டு என்று போகமா முனிவரின் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.
கேது மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்
பாடல் 268
பாரப்பா கேதுதிசை புதனார்புத்தி
பாங்குள்ள மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் இருபத்தியேழு
சேதமில்லா அதன் பலனை செப்பக்கேளு
வீரப்பா கொண்டு நின்ற மயக்கம் போய்நீ
மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய்
சீரப்பா லட்சுமியும் சேர்ந்துகொள்வாள்
தீங்கில்லா மனக்கவலையில்லை காணே
பாடல் விளக்கம்
கேது மகாதிசையில் புதன் பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும். நன்மை தரும் இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாய்! இதுவரை பற்பல இன்பங்களில் வயப்பட்டு மயங்கிய நிலை மாறி இந்நிலவுலகில் இச்சாதகனை எல்லாரும் ஒரு சிறந்த மனிதன் என்று கூறத்தக்க நிலை உண்டாகும். திருமகள் இவன் மனையை விரும்பிச் சேர்வாள். எனவே தீங்கொன்றும் நேராது எவ்வித மனக்கவலையும் இல்லாதொழியும் எனப் போகமா முனிவர் பேரருளால் புலிப்பாணி பாடினேன்.