சந்திர திசை பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300

புலிப்பாணி ஜோதிடம் 300 என்னும் நூலில் புலிப்பாணி சித்தர் சந்திர திசைக்கு கூறிய பலன்கள். இவை அனைத்தும் பொதுப்பலன்களே லக்ன நிலை மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.

சந்திர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

பாடல் 206 

சொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில் சுகமுடைய சந்திரபுத்தி மாதம் பத்து நில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம் நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும் சொல்லவே சுயவரங்கள் நாட்டிவைத்து சுகமான கல்யாணம் ஆகும்பாரு வெல்லவே சத்துருவை ஜெயிக்கலாம் வேணபடி நிதிசேரும் விவரந்தானே.

பாடல் விளக்கம்

இனி, சந்திர மகாதிசையில் சந்திர பகவானின் சுயபுத்தி 10, மாதங்களாகும் இவ்னது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன; தன்னிகரில்லா மன்னருடன் மகிழ்வுடன் நட்புக் கொள்ளச் செய்யும். சொல்லுதற்கரிய சுயம்வரங்களை கூட்டி வைத்து கல்யாண வைபோகத்தை நிறைவு செய்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். சத்துருக்களை வென்று வெற்றி வாகை சூடச் செய்யும். வேண்டிய தனலாபங்களையும் பொருட் சேர்க்கையையும் ஏற்படுத்தி மகிழ்வுதரும் என்று போகர் அருளால் புலிபாணி கூறினேன்.

சந்திர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

பாடல் 207

தானென்ற சந்திர திசை செவ்வாய்புத்தி தன்மையில்லா நாளதுவும் மாதம் ஏழு வானென்ற அதன்பலனைச் சொல்லக்கேளு வாதமுடன் கிரந்திபித்தம் வாய்வுரோகம் யேனென்ற கள்ளரால் சோரமுண்டாம் யெளிதான யேந்திழையால் துக்கமுண்டாம் கோனென்ற கோதையரும் சகோதரத்தால் கொடுமைகளு முண்டாகும் கூற்ந்துபாரே

பாடல் விளக்கம்:

அடுத்து, சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தி ஏழு மாதங்களாகும். இவை அசுப்பலன் தருபவையே. அவையாவன: வாதநோய், பித்தத்தால் ஏற்படும் வாந்திபேதி, மற்றும் வாயுவால் ஏற்படும் வியாதிகளை உண்டு பண்ணும். வெகுபலவான கள்ளர்களின் கோபத்திற்கு உள்ளாகச் செய்யும். இச்சைக்குகந்த பெண்களால் வெகு துக்கத்தை ஏற்படுத்தலும், வெகு பலமான அப்பெண்களாலும் அவர்களது சகோதரர்களாலும் கொடுமைகள் உண்டு. எனினும் தீர்க்கமாய் ஆராய்ந்து பலன் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.  

சந்திர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

பாடல் 208 

பாரப்பா சந்திரதிசை ராகுபுத்தி பகையான நாளதுவும் மாதம் பதினெட்டாகும் ஆரப்பா அதனுடைய பலத்தைக்கேளு அடங்காத சத்துருவால் தனநஷ்டமாகும் விதியளவும் புத்திமத்தி நாசம்பண்ணும் விளைவு தரும் பூமியுமே விரயமாகும் காரப்பா களருடனே காலிசாவாம் கனகமது சிலவாகும் கண்டுதேரே.

பாடல் விளக்கம்

இதற்கு மேல் நான் ஒன்றையும் உனக்குச் சொல்வேன். அதையும் நீ கவனமாகக் கேட்பாயாக! சந்திர மகாதிசையில் ராகுபுத்தி பகையானதேயாகும். இச்சந்திர மகாதிசையில் ராகுவின் பொசிப்புக் காலம் பகையான தென்றாலும் நீண்ட 18 மாதங்களைக் கொண்டதாகும். இக்கால கட்டத்தில் இதற்கு ஏற்படும் சோதனையான பலன்களை நீ விவரமாகக் கேட்பாயாக! எதற்கும் அடங்காத இவர்களது சத்துருவால் இவர்களுக்கு தனநஷ்டம் ஏற்படும் என்பதையும் அறிந்து கொள்க. பல விதமான வியாதிகளும் ஏற்படும், காலம் எல்லாம் விதியானது உள்ளளவும் மந்தம் உடையதும் மத்திமமான புத்தியுள்ளதும் நாசம் செய்வதுமாக அமையும். மேலும் களத்திலுள்ள விவசாயிகளுடன் கன்று காலிகளும் மடிதல் நேரும். தங்க ஆபரணங்கள் செலவாதலும் உண்டாகும் என உணர்ந்து கிரகபலம் தன்னையும் அறிந்து கூறுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சந்திர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

பாடல் 209

தேறவே சந்திரதிசை வியாழபுத்தி தீங்கில்லா மாதமது பதினாறாகும் கூறவேயிருந்தபலன் தன்னைக்கேளு குணமுடைய மாதர்களும் சோபனமேயுண்டாம் சேரவே செட்டுடனே லாபமுண்டாம் சென்னல் முதல் விளைவாகுஞ்செல்வஞ்சேரும் வீரவே வியாதியது நிவர்த்தியாகும் வீறான மணியமுடன் விளையகலும்பாரே.

பாடல் விளக்கம்:

இப்படிப்பட்ட பெருமைக்குரிய சந்திர திசையில் வியாழபுத்தியின் பொசிப்புக் காலம் 16 மாதங்களாகும். அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் பலன்களை நன்கு அறிந்து கேட்பாயாக! நல்ல மணமகளுடன் சுபசோபனம் உண்டாகும். அதனால் பெருத்த லாபமும் உண்டாகும். சென்னல் முதலிய விளைவயலில் விளைவாகும். மிகுந்த செல்வம் சேரும். எத்தகைய வியாதியாய் இருந்தபோதும் நிவர்த்தியாகும். எதற்கும் தலைமை தாங்கும் பண்பு ஏற்படுவதோடு பூர்வ ஜென்ம வினையும் அகலும் என்பதை நீ நன்கு உணர்வாயாக என்று போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.

சந்திர மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

பாடல் 210

பாரப்பா சந்திர திசை சனியன் புத்தி பகர்ந்தநாள் மாதமது பத்தொன்பதாகும் நேரப்பா அதனுடைய பலத்தைச் சொல்வோம் நேரிழையாள் மரணமதாம் நெஞ்சுதனில்நோவாம் காரப்பா கனகமது சிலவேயாகும் கள்ளரால் சோரர்பயம் துக்கமுண்டாம் சாரப்பா சத்துருவால் இடஞ்சலுண்டாம் சஞ்சலங்களுண்டாகும் தவமேபாழாம்

பாடல் விளக்கம்:

மேலும் இச்சந்திரதிசையில் சனிபகவானின் பொசிப்புக்காலம் 19 மாதமாகும். இக்காலகட்டத்தில் அவனது பலத்தையும் புலிப்பாணியாகிய நான் போகரது கருணையினால் கூறுவேன் அதையும் தேர்ந்து அறிவாயாக! மனம் விரும்பி இச்சாதகனை மணந்த ஜாதகி மரணமெய்த நேரும். அதனால் ஜாதகனுக்கு இதய நோய் ஏற்படும். பல விதத் தங்க ஆபரணங்களும் விரயமாகும். கள்ளர் பயமும் ஏற்படும். சத்துரு உபாதையும் உண்டு. பலவித சஞ்சலங்கள் ஏற்பட்டு இதுவரை அனுபவித்த இன்பங்களும் பாழாகும். மணமிக்க சந்தனம் முதலியகந்தப் பொருள்களை அணிவான். கல்யாணம் முதலிய சுபகாரியங்கள் நிகழும்.

சந்திர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

பாடல் 211  

பாளில்லா சந்திரன் திசை புதனின் புத்தி பகரும் நாள் மாதமது பதினேழாமே கோளில்லா அதன் பலத்தை கூற்ந்துகொள்வோம் குணமுள்ள மாதர்களும் மனமகிழ்ச்சியுண்டாம் நாளில்லா கலியாணம் நடக்கும் பாரு நன்றான பாக்கியமும் நவதானியஞ்சேரும் தேளில்லா சத்துருவை செயிக்கலாகும் தெரிவையர்கள் மோகமுடன் தெளிந்து நிற்பான்

பாடல் விளக்கம்:

மேலும் வேறுபாடில்லாத சந்திர திசையில் புதனின் பொசிப்புக்காலம் 17 மாதங்களேயாகும். அந்தக் கிரகத்தின் பலன்களை நன்கு அறிந்து கூறுவாயாக! ஏனெனில் குணமுள்ள மாதர்களால் அச்சாதகனுக்கு மனமகிழ்ச்சியுண்டாகும். திடுமென்று திருமணம் நிகழ்தலும் உண்டு. நிறைந்த பாக்கியங்களும் நிகழும். நவதானிய வகைகள் சேரும். தேனிலுள்ள வாசத்தைக் கலக்கும் வண்டென இச்சாதனைகளைத் தெரிவையர்கள் என்ற வயதான மங்கையர்கள் தெளிந்து நிற்பார்கள் என்று போகரது கருணையால் புலிப்பாணி பாடினேன்.

சந்திர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

பாடல் 212 

தெரிந்து நின்ற சந்திர திசை கேதுபுத்தி

தென்மையில்லா நாளதுவும் மாதம் ஏழு புரிந்துகொண்ட இதன்பலனைப் புகலக்கேளு

புகழ்மெத்த மார்பில்சில பிணியுமுண்டாம் பரிந்துகொண்ட பாவையரும் பகைநாசமுண்டாம்

பாங்கான தாய்தந்தை சுதன்மரணமாகும் விரிந்து கொண்ட வியாதியது விழலாய்ப்பண்ணும்

வீணாக தேசமெங்கும் அலைவன்பாரே.

பாடல் விளக்கம்:

மேலும், இச்சந்திர மகாதிசையில் கேது புத்தியானது, மிகவும் கலக்கத்தைச் செய்வதேயாகும். இக்கேதுவின் பொசிப்புக்காலம் ஏழு மாதம் என்பதையும் உணருக. இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: புகழ்தற்குரிய பெருத்த மார்பகத்தில் பிணியேற்படுதலும், இவர்களுக்காகப் பரிந்து நின்ற பெண்களுக்குப் பகைவர்களால் பெருநாசமும் விளைவதாகும். மேலும், பெற்ற தாய், தந்தை மற்றும் பிறந்த மகன் முதலியோரின் மரணமும் நேரும். அதிகப்பட்டுப்போன வியாதி பெருத்த விரயத்தை உண்டு பண்ணும். இச்சாதகன் காரணமின்றியே தேசாந்தரம் சென்றலைவான் என்று போகரது கருணையினால் புலிப்பாணி பாடினேன்.

சந்திர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

பாடல் 213

கேளப்பா சந்திரதிசை சுக்கிரபுத்தி கெணிதமுள்ள நாளதுவும் மாதம் நாலைந்து ஆளப்பா அதன்பலனை சொல்லக்கேளு அன்பான லெட்சுமியு மனுதினமுநிற்பாள் தாளப்பா வாகனமும் பொன்முத்துசேரும் வகையான பூஷணமும் மிகுதியுண்டாகும் கேளப்பா கலியாணங் கெணிதமுடன் நடக்கும் கெந்தமுடன் சுகந்தங்கள் அணிவான்பாரே

பாடல் விளக்கம்:

இன்னும் ஒரு கருத்தைச் சொல்லுகிறேன். கேள்! சந்திர மகாதிசையில் சுக்கிரனது பொசிப்புக் காலம் 1 வருடம் 8 மாதமாகும். அவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன் கேள். மகாலட்சுமியானவள் அவனது மனையில் சுகித்துத் தங்கிருப்பாள். வாகன யோகம் உண்டாகும். பொன்னாபரண சேர்க்கையும் முத்தாபரண சேர்க்கையும் இதமான பல்வேறு பூஷணங்களும் இணையற்றதாக இச்சாதகனுக்கு வாய்க்கும் என்று வகை தொகை அறிந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

சந்திர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்

பாடல் 214

மானே கேள் சந்திரதிசை சூரியபுத்தி மரணநாள் மாதமது ஆறதாகும் தானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும் தாபமுள்ள சுரதோஷம் சன்னிதோஷம் யேனே தான்காணுமடா யிருக்கமதுவுண்டாம் யேகாந்த தேகமது இருளதுவேயடையும் தேனேகேள் லெட்சுமியும் தேகமுடன் போவாள் திரவியங்கள் சேதமடா, சிசுவுடனேதீதாம்

பாடல் விளக்கம்:

மற்றுமொரு கருத்தினை என்னன்பிற்குரிய மானே கேட்பாயாக! சந்திர மகாதிசையின் இறுதி புத்தியாகிய சூரியனின் பொசிப்புக் காலம் ஆறுமாத காலமேயாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! சத்துரு பயமும், அக்கினி பயமும் ஏற்படும். ஜுரதோடம் உண்டாகும். அதிகமான ஜுரத்தால் ஜன்னி காணுதலும் ஏற்படும். மதுவினால் மயக்கமடைதலும் தேகம் இருளடைதலும் நேரும், இலக்குமி தேவியானவள் அவனது தேகத்தை விட்டுச் சென்றுவிடுவாள். அதனால் திரவிய நஷ்டமும் சிசு நஷ்டமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

Post a Comment

Previous Post Next Post