நூல் நிலையங்களும் அவற்றின் பயன்களும் கட்டுரை

நூல் நிலையங்களும் அவற்றின் பயன்களும் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்:

  • முன்னுரை
  • நூல் நிலையத்தின் இன்றியமையாமை
  • பலவகை நூல் நிலையங்கள்
  • நூல் நிலையங்களின் அமைப்பு
  • நூலகர் பொறுப்பு
  • மாணவரும் நூல் நிலையமும்
  • நமது நோக்கம்
  • பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை:

 நூல் நிலையங்கள் எல்லாம் அறிவுக் கோயில்கள் . சிறந்த நூல்கள் யாவும் அறிவுத் திருவுருவங்கள். கலை நலமும் கவி நலமும் கமழ்கின்ற பொற்பேழைகள். வாழ்வுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு கள். ஆதலின், பெருமைமிகு நூல்களைத் தன்னகத்தே கொண்ட நூல் நிலையங்களையும் அவற்றின் பயன்களையும் இக்கட்டுரையில் காண்போம்.

நூல் நிலையத்தின் இன்றியமையாமை: 

அறிவு பெறுவதற்கு வழி யாது? நூல்களைக் கற்றலன்றோ? நூல்கள் அனைத்தும் நாமே வாங்குதல் இயலுமோ? அவற்றை வாங்குவதற்குப் பெருஞ்செல்வரே இடர்ப்படுவார் என்றால், பாமர மக்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ? ஆதலின், பொருட்செலவு உண்டாகாமல் படிப்பதற்கும், மேன் மேலும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நூல் நிலையங்கள் மிகவும் இன்றியமையாதனவாம்.

பலவகை நூல் நிலையங்கள்: 

மலர்களில் பலவண்ணங்களைக் காண்கிறோம். மணங்களில் பலவகைகள் இருத் தலை அறிகின்றோம். சுவைகளில் வேறுபாடுகள் இருப்பதையும் உணர்கின்றோம். அவை போலவே நூல் நிலை யங்களிலும் பலவகைகள் இருக்சின்றன. அவை பொது நூல் நிலையங்கள், தனியார் நூல் நிலையங்கள், பள்ளிநூல் நிலையங்கள், நகரும் நூல்நிலையங்கள் என்பன.

நூல் நிலையங்களின் அமைப்பு: 

நூல் நிலையங்கள் அழகும் அமைதியும் பொருந்திய சூழலில் அமைதல் சிறப்பு. வெளிச்சமும் காற்றோட்டமும் படிப்போருக்கு மகிழ்ச்சியைத் தரும். படிப்போருக்கு வசதியாக இருக்கைகளை ஒழுங்காக அமைத்திருப்பது மிகவும் நல்லது. அடுக்கடுக்காகப் பல்வேறுவகை நூல்களைத் தொகுதி தொகுதியாக நூலகர் அடுக்கி வைத்திருக்கவேண்டும்.

நூலகர் பொறுப்பு: 

நூலகர் நூல் நிலையத்தின் பொறுப்பாளர். உறுப்பினர்களுக்கு வேண்டிய புத்தகங்களைக் கொடுத்தலும், அவர்கள் கொண்டுவந்து கொடுத்த புத்தகங்களை வாங்குதலும், ஆண்டுதோறும் நூலகத்துக்கு வேண்டிய புத்தகங்களை வாங்குதலும் நூலகரின் செயல்கள். சிறந்த ஆசிரியர்கள் எழுதிய நூல்களை அறிந்திருத்தலும், பொறுமை, இன்சொல், அறிவு, அடக்கம் ஆகிய பண்புகளை நூலகர் பெற்றிருத்தலுல் நூலகத்தின் வளர்ச்சிக்கும், தொண்டிற்கும் உறு துணையாக அமையும்.

மாணவரும் நூல் நிலையமும்: 

தென்றல் காற்று நறு மணமும் குளிர்ச்சியும் பெற்று இயங்குதல் போன்று மாணவர்கள் இயங்குதல் வேண்டும். எங்கெங்கு கலைகள் உள்ளனவோ அங்கெல்லாம் சென்று அறிவுக் கலை களைப் பெறுவதில் ஆர்வம் கொள்ளுதல் வேண்டும். நாள் தோறும் பள்ளி நூலகத்திற்குச் சென்று இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகளைப் படிக்க வேண்டும். அறிவும் மனப்பண்பும் அறிஞர்களின் நூல்களைப் பயில்வதின் மூலமே ஏற்படும். சிறந்த கருத்துக்களை, அழகிய கவிதைகளைக் குறிப்பேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

நமது நோக்கம்: 

ஊர்கள் தோறும் நூலகங்களை அமைப்பது நமது அரசின் நோக்கம். அரசின் விருப்பம் நிறைவுபெற மக்கள் ஒத்துழைத்தால் வீதிகள் தோறும் நல்ல படிப்பகங்களையும் அமைக்க முடியும். நாம் குறிக் கோளுடன் செயல்பட்டால் வீடுகள் தோறும் நூலகங்களை ஏற்படுத்தலாம். நூல்களைக் கையில் வைத்திருப்பதையும் படிப்பதையும் நம் வாழ்க்கையின் நோக்கமாகக் கருதவேண்டும்.

பயன்கள்: 

நூல்கள் தரும் இன்பத்தை என்னென்று சொல்வது? வீணாகப் பொழுது போக்காமல் நல்ல முறை யில் அறிவூட்டும் அறப்பணிகளை நூலகங்களைப் போல எவை செய்யமுடியும்? சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கலைச்செல்வத்தை வாரி வழங்கும் அமுத சுரபிகள் அனறோ நூல் நிலையங்கள். மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் ஏற்படும் ஐயங்களை அகற்றும் கலைக்கருவூலங்கள் அன்றோ நூலகங்கள். மக்கள் நல்ல முறையில் காலத்தைப் பயன்படுத்துவதற்கும், மனத்தைப் பண் படுத்துவதற்கும், செயலில் தூய்மையை வளர்ப்பதற்கும் நூலகங்கள் மிகச்சிறந்த முறையில் துணைசெய்கின்றன.

முடிவுரை: 

பண்டைக்காலம் முதல் நூலகங்கள் இருந்தன சங்கம் அமைத்துத் தமிழர்கள் நூல்களைப் போற்றியதும், நாளந்தா பல்கலைக்கழகத்தில் நூலகம் செயல்பட்டமையும், சரபோஜி மன்னர் நூல்களைப் பாதுகாத்தமையும் இக்கால நூலக வளர்ச்சியெனும் மாளிகையின் அடிப்படை யெனலாம். எனவே, வாழையடி வாழையாக அறிவெனும் கொடி படர்வதற்கு நூலகமே கொழுகொம்பாக விளங்குகின்றது.

Related: நூலகம் கட்டுரை மாதிரி-1

Post a Comment

Previous Post Next Post