முக்கிய யோகங்கள்
யோகம் என்றால் நல்ல விளைவுகள் என்று தான் பலரும் நினைக்கிறார்கள் என்றாலும் தீய விளைவுகளைத் தரும் யோகங்களும் நிறைய உண்டு. அப்படிப்பட்ட சில யோகங்களையும் பார்ப்போம்.
கஜகேசரியோகம்:
குரு சந்திரனில் இருந்து கேந்திரத்தில் இருந்தால் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. தர்மசிந்தனை, பெரும்புகழ், இனிமையாகப் பழகுதல், தலைமைப் பொறுப்பு ஆகியவை கஜகேசரி யோகத்தால் ஏற்படும்.
அஷ்டலக்ஷ்மி யோகம்:
ராகு ஆறாமிடத்தில் நின்று குரு லக்ன கேந்திரம் அடைந்து நிற்பது அஷ்டலக்ஷ்மி யோகம் எனப்படும். யோகங்களில் மிகச் சிறப்பான யோகமாக இந்த அஷ்டலக்ஷ்மி யோகத்தைச் சொல்கிறார்கள். இந்த யோகம் உள்ள ஜாதகன் அஷ்டலக்ஷ்மிகளின் அருள் கடாட்சம் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களும் பெற்று ராஜபோகத்துடன் வாழ்வாங்கு வாழ முடியும்.
புதாத்திய யோகம்:
ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருப்பது புதாத்திய யோகம் எனப்படும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.
சுப கத்திரி யோகம்:
லக்னத்திற்கு இருபுறமும் அதாவது பன்னிரெண்டாம் வீடு அல்லது இரண்டாவது வீட்டில் சுபகிரகமான குரு, வளர்பிறை சந்திரன், சுபரோடு சேர்ந்த புதன், போன்ற கிரகங்கள் இருந்தால் அது சுப கத்திரி யோகம் எனப்படும். இந்த யோகமானது வாழ்க்கையைச் சிரமம் இல்லாமல் நடத்திச் செல்ல உதவும்.
தர்மகர்மாதிபதி யோகம்:
தர்ம ஸ்தானமான ஒன்பதாம் வீட்டு அதிபதியும், கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டதிபதியும் சேர்ந்து நல்ல வீடுகளில் தங்கி இருந்தால் அது தர்மகர்மாதிபதி யோகம். இது மிக உயர்ந்த யோகமாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் உள்ள ஜாதகர் தொழில் ரீதியாக மிக உயர்ந்த நிலையை அடைவார். லாபகரமான தொழில் அல்லது அதிகாரம் மிக்க பதவி அமையும்.
அகண்ட சாம்ராஜ்ய யோகம்:
2, 9 அல்லது 11 க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். இந்த யோகத்தின் மூலமாக தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பெயர், புகழ், உயர்ந்த அந்தஸ்து ஆகியவை உண்டாகும்.
அதியோகம்:
சந்திரனுக்கு 6,7,8 ஆம் வீடுகளில் சுபக்கிரங்களான குரு, புதன், சுக்கிரன் அமர்ந்திருந்தால் அது அதியோகம் என்று அழைக்கப்படுகிறது. இது சக்தி வாய்ந்த யோகமாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் உள்ளவர் சகல சௌகரியங்களும் உள்ள மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வார், எதிரிகளை வெல்வார் என்று கூறப்படுகிறது.
லட்மியோகம்:
இந்த யோகம் அமைய லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9 ஆம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும். அது கேந்திர வீடாக அல்லது திரிகோண வீடாகவும் கூட இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் லக்ஷ்மி யோகம் அமையும். இந்த யோகத்தினால் ஜாதகன் செல்வத்தோடும், உயர்ந்த குணங்களோடும், நன்கு கற்றவனாகவும், மதிப்பும் மரியாதையும் மிக்கவனாகவும், வாழ்க்கையின் எல்லா வசதிகளை உடையவனாகவும், அழகான தோற்றம் உடையவனாகவும் இருப்பான்.
விபரீத ராஜயோகம்:
தீய ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 6, 8, 12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6, 8, 12 வீடுகளில் மாறி இருப்பது விபரீத ராஜ யோகம் ஆகும். 'கெட் டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்று கூறுவதற்கேற்ப கெட்ட வீடுகள் கெட்டுப் போவதால் இந்த விபரீத ராஜ யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எத்தனை கீழ்நிலையில் இருந்தாலும் திடீரென ராஜயோகத்தை அடைந்து செல்வந்தர்கள் ஆவார்கள்.
நீச்சபங்க ராஜயோகம்:
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சமாகி அந்த நீச்சமான ராசியில் உச்சமாக ஆகக் கூடிய கிரகம் லக்னத்தில் இருந்தோ சந்திரனில் இருந்தோ கேந்திரத்தில் இருந்தால் நீச்சபங்க ராஜ யோகம் உண்டாகிறது. சிலர் அந்த நீச்சமான இடத்தின் ராசிநாதன் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த யோக ஜாதகர்களும் எத்தனை கீழ்நிலையில் பிறந்திருந்தாலும் திடீர் செல்வம், பெயர், புகழ் பெற்று மிக உயர்ந்த நிலைகளுக்குச் செல்வார்கள்.
புத்தி மாதுர்ய யோகம்:
ஐந்தாம் வீட்டு அதிபதி சுபனாக இருந்து அவன் இன்னொரு சுபனால் பார்க்கப்பட்டாலோ, அல்லது சுப வீட்டில் இருந்தாலோ புத்தி மாதுர்ய யோகம் உண் டாகிறது. இந்த யோகம் அமைந்தவர்கள் குணத்திலும், அறிவிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்பார்கள்.
குரு சண்டாள யோகம்:
ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள குருவோடு சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால் அது குருசண்டாள யோகம் எனப்படும். இந்த யோகம் உள்ள ஜாதகர் உயர்குடியில் பிறந்திருந்தாலும் கூட இனப்பற்று, மதப்பற்று, கடவுள் பக்தி இல்லாதவராகவே நடந்து கொள்வார்.
கால சர்ப்ப யோகம்:
லக்னமும் எல்லா கிரகங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருந்து விட்டால் கால சர்ப்ப யோகம் ஏற்படும். இந்த காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேற வேண்டி இருக்கும். (ராகு கேது கிரகங்களின் மத்தியில் உள்ள கிரகங்கள் வலிமையாக இருந்தால் ஜாதகர் வாழ்வின் பிற்பகுதியில் இந்த யோகத்தின் பிடியில் இருந்து மீண்டு நல்ல முன்னேற்றம் அடைவார்.)
சகடயோகம்:
குருவிற்கு 6, 8, 12 ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக் கொடுக்கும். என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பொருள். இந்த யோகம் அமைந்த ஜாதகரின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். ஜாதகர் ஓர் இடத்தில் இருக்க மாட்டார். தன்னுடைய வேலை காரணமாகவோ, சுபாவம் காரணமாகவோ ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அலைந்து கொண்டே இருப்பார். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் ஏற்பட்டபடி இருக்கும்.
கேமத்ரூம யோகம்:
ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு இரு புற வீடுகளும் காலியாக இருந்தால் கேமத்ரூம யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் உள்ளவர்கள் தவறான குணங்கள் கொண்டவர்களாகவும், ஏழைகளாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், மனமகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (சில அறிஞர்கள் சந்திரனில் இருந்து கேந்திரங்களில் கிரகங்கள் இருக்குமானால் இந்த யோகம் தவிர்க்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.) யோகங்கள் இனியும் நிறைய உள்ளன.
Related: பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்