நவகிரகங்களில் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் புதன். புத்திசாலித்தனத்தை தரும் புதன் ஜாதகத்தில் லக்னம் முதல் 12 இராசிகளில் நின்ற பலனை இப்போது பார்ப்போம்.
இலக்கினத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
லக்னத்தில் புதன் திக் பலம் பெறுவார். ஜாதகர் நல்ல இளமையான தோற்றத்தை பெற்றிருப்பார்.பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். மற்றவர்களை தங்கள் புத்திக்கூர்மையால் ஆதிக்கம் செலுத்துவார்கள். சாதுர்யம் உள்ளபேச்சுகளைப் பேசுகின்றவராகவும், தீர்க்காயுசு உள்ளவராகவும் ஜாதகர் இருப்பார். எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள ஜாதகர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். இளமை காரகன் புதன் லக்னத்தில் இருப்பதால் எதிர்பாலினரை கவரும் தன்மை இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
இரண்டாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
தன் புத்தியால் தனங்களை பெறுபவராக ஜாதகர் இருப்பார். நல்ல சொற்களை பேசுபவராகவும் தம் பேச்சால் அடுத்தவரை கவருபவராகவும் இருப்பார். அடக்கமும் அறிவும், உள்ளவனாயும் இருப்பார்.ஜாதகர் உணவுப் பிரியராக இருப்பார்.உணவை இரசித்து உண்பார்.
மூன்றாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
ஜாதகர் சாமர்த்திய முள்ளவர், நல்ல சகோதர சகோதாரிகளை உடையவர், சூழ்நிலைக்கேற்ப ஜாதகர் நடந்து கொள்வார்.இதனால் பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கணினிகளை கையாளுவதில் ஜாதகர் வல்லவர்.
நான்காமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
ஜாதகர் நல்ல கல்வி அறிவைப் பெற்றிருப்பார்.நல்ல உறவினர்களை பெற்றிருப்பார்.ஜாதகர் கண்ணியமான பேச்சு மற்றும் இரக்கம் உள்ளவராக இருப்பார்.கணிதத்தில் ஆர்வம் இருக்கும். வாகனங்களை தேர்ந்தெடுக்கும் போது, வீடு கட்டும் போது நிறைய திட்டம் தீட்டி அதை செயல்படுத்த முயற்சி செய்வார்கள். வீடு கட்டுவதற்கு கடன் இவர்களுக்கு எளிதாக கிடைக்கும்.
ஐந்தாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
ஜாதகர் நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருப்பார். ஜாதகருக்கு பட்டப்பெயர் ஒன்று இருக்கும் அல்லது ஜாதகர் இருபெயர் கொண்டவராக இருப்பார். மிமிக்ரி செய்வதில் ஜாதகர் வல்லவர். ஜாதகர் காதல் உணர்வு மிக்கவராக இருப்பார். ஜாதகர் மேடையில் பேசும் போது இவரது பேச்சை அணைவரும் இரசித்து கேட்பார்கள். நல்ல அறிவு மற்றும் திறமை உள்ளவராக ஜாதகர் இருப்பார்.
ஆறாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
வாதங்களிலும்,விவகாரங்களிலும் கலகத்திலும்,எப்போதும் வெற்றி பெறுபவராக ஜாதகர் இருப்பார். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஜாதகருக்கு இருக்கும். இவரது பேச்சு எதிரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.வங்கி கடன் இவருக்கு எளிதில் கிடைக்கும்.
ஏழாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
வாழ்க்கைத் துணை இளமையும் அழகும் நிறைந்தவராக இருப்பார். வாழ்க்கைத் துணையை நன்கு புரிந்து வைத்திருப்பார். ஜாதகரை விட வாழ்க்கைத் துணை தோற்றத்தில் வயது குறைந்தவராக தோற்றமளிப்பார். எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். வியாபார உத்திகள் நிறைந்தவராக ஜாதகர் இருப்பார்.
எட்டாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
மறைபொருள் விஷயங்களை கண்டறிவதில் ஜாதகர் வல்லவர். ஜோதிடம், மாந்திரீகத்தில் ஜாதகருக்கு ஆர்வம் இருக்கும். சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களின் தொடர்பு ஜாதகருக்கு இருக்கும். இரகசிய கேமராக்கள் மூலம் அடுத்தவரை கண்காணிப்பு மேற்கொள்வதில் இவர்கள் வல்லவர். ஹேக்கிங் சம்பந்தமான துறைகளில் ஆர்வம் இருக்கும். ஜாதகர் தீர்க்காயுள் உள்ளவராக இருப்பார்.
ஒன்பதாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
அதிக தனமும் கல்வியும் உள்ளவராக ஜாதகர் இருப்பார். சாமர்த்தியமாக பேசக் கூடியவராகவும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும் ஜாதகர் இருப்பார். வெளிநாடுகளுக்கு செல்லும் ஆர்வம் இருக்கும். ஒரு விஷயத்தை பற்றி முடிவு எடுக்கும் போது அந்த விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் ஜாதகர் சில நேரங்களில் முடிவு எடுத்துவிடுவார் (அதாவது ஒரு விஷயத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு அதை உண்மை என நம்புவதற்கு வாய்ப்பு அதிகம்).
பத்தாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
ஜாதகர் காரியாதி. தங்கள் காரியங்களில் ஜாதகர்கள் கண்ணாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமை மிக்கவராகவும், அறிவுள்ளவராகவும் ஜாதகர் இருப்பார்.ஜாதகர் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்வார். ஜாதகர் தன்னை முன்னிலைப்படுத்த முயல்வார் இதனால் பல செலவுகளையும் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பதினோராமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
தனவானாகவும், நல்ல வேலையாட்களையும் ஜாதகர் பெற்றிருப்பார். எந்த சூழ்நிலைக்கும் ஜாதகர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். பிற இன மக்களிடமும் எளிதில் தொடர்பு கொள்பவராக ஜாதகர் இருப்பார் (ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளையும் ஜாதகர் கற்றிருப்பார்கள்). ஆலோசனைகள் வழங்குவதில் ஜாதகர் வல்லவர்.அதிக சுகபோகங்கள் உள்ளவராகவும் தீர்க்காயுளுள்ளவராகவும் புகழ் பெற்றவராகவும் இருப்பார்கள்.
பன்னிரண்டாமிடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
நன்றாகத் தெளிந்த வாக்கியங்களை பேசக் கூடியவர். எதிர்பாலினத்தவரின் ஆதரவு ஜாதகருக்கு கிடைக்கும். எலும்புகள் மற்றும் சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.ஒரு செயலை செய்வதற்கு ஆரம்பத்தில் பெரிய தடுமாற்றம் இருக்கும்(starting trouble). ஜாதகருக்கு மறதி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இலக்கின நிலை மற்றும் புதனோடு தொடர்புடைய கிரகங்களை பொறுத்து பலன்கள் மாறுபடும்