கிழமைகள் சார்ந்த ஜோதிட பழமொழிகள்

ஜோதிட பழமொழிகள்:

பொதுவாக கிரகங்கள், இராசிகள், நட்சத்திரங்கள், கிழமைகள், திதிகளைப் பற்றி பழமொழிகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அவற்றின் உண்மையான உட்பொருளை இங்கு காண்போம். ஒரு சோதிடர் இப்பழமொழிகளின் உண்மைப் பொருளை அறிந்து, வரும் ஜாதகர்களிடம் சொன்னால், அவர்களுக்கு மன ஆறுதலும் மனத் தெளிவும் நிம்மதியும் கிடைக்கும்.

1.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

பட்ட பின் அறிவு வரும் என்பதன் பொருள்படக் கூறும் இப்பழமொழியின் உண்மைப் பொருள், கண்ணுக்கு சூரியன் எட்டிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரியன் உதயமாவதற்கு முன் வணக்கம் பண்ணிப் பயனில்லை என்பதே, சூரியன் கண்ணுக்கு எட்டியப் பிறகு நமஸ்காரம் என்று வந்தது.

2.விதியை மதியால் வெல்லலாம்

விதியை மதியால் வெல்லலாம் என்றால் அறிவால் வெல்லலாம் என்றோ, தன் சமயோசித புத்தியால் வெல்லலாம் என்றோ பொருளல்ல. விதியை யாராலும் மாற்ற முடியாது என்பதே உண்மை. ஆனால் மதி என்றால் சந்திரன் என்று பொருள். இவ்விடம் அறிவைக் குறிக்காது. அப்படி நம் நட்சத்திரத்துக்குச் சந்திரன் சந்திராஷ்டம் நாள் இல்லாமல் 2, 3, 6 போன்ற சாதகமான இராசியில் பிரவேசிக்கும் போது திட்டமிட்டு செயலாற்றினால் செயல் வெல்லும் என்பதே பொருள். அதாவது, தடைபடும் விதியை மதி என்னும் சந்திரன் சஞ்சரிக்கும் இராசியைக் கணக்கிட்டு செய்ய வேண்டும் என்பதே பொருள்.

3.செவ்வாய் வெறுவாய்

செவ்வாய் அன்று செய்யும் காரியம் வெறுமனே வீணாகும் என்று தவறாகப் பயன்படுத்தப்படும் இப்பழமொழிக்கு உண்மையான இரு பொருள் உள்ளன.  செவ்வாய்க் கிழமை செய்யும் செயல் மூலம் வருவாய் அதிகம் என்பதாம்.  மற்றொன்று நன்கு கற்றறிந்த மாந்தர்கள் செவ்விய வாய் உடையவர்கள்.அதிகம் பேச மாட்டார்கள். அதுவே செவ்வாய் வெறு வாய் என்று ஆனது. சமயம் வரும் போது பேசி மற்ற நேரத்தில் மௌனமாய் இருப்பதே இதன் பொருள்.

4.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

புதன் கிழமை வாரா வாரம் வரும். பொன் கைக்கு வருவது அரிது. பிறகு ஏன் இப்படிக் கூறினர்? சோதிடவியல்படி பொன்- பொன்னவன் என்பது குருவைக் ஆசிரியரைக் குறிக்கும். புதன் வித்தையை, கல்வியைக் குறிக்கும். அதன் படி பார்த்தால் நல்ல ஆசிரியர் பொன் கிடைத்தாலும் ஒருவருக்குக் கல்வியைக் கிரகிக்கும் ஆற்றல் கிடைப்பது (புதன்) அரிது என்பதையே இது குறிக்கும். ஆசிரியர் கிடைப்பது எளிது. கற்கும் மாணவர் கற்பது அரிது என்பதே உண்மைப் பொருளாகும்.

5.மறைந்த புதன் நிறைந்த கல்வி

புதன் 6 இல் மறைந்தால், அதிக வருமானம். அவர் பெற்ற கல்வியால் வரும் என்பதே இதன் பொருள்.

சனி,செவ்வாய்,இராகு,கேது,புதன்,சூரியன்,சந்திரன் அதாவது சுக்கிரன், குருவைத் தவிர மற்றவை 6 இல் மறைவது சிறப்பான பலன் தரும்.

6. வெள்ளிக் கிழமை பிள்ளை கொள்ளிக்கு மட்டும்

வெள்ளி- கொள்ளி என்று எதுகை மோனையாகப் பேசப்பட்டது. இதற்கு ஆதாரம் இல்லை. எத்தனையோ குழந்தைகள் வெள்ளிக் கிழமை பிறந்து பெற்றோர் நல்ல நிலையில் இருந்திருக்கின்றனர். 

7. சனிப் பிணம் தனிப் போகாது

சங்க காலத்தில் திணைப் புனம் நடுபவர்கள் சனிக்கிழமையன்று (புனம்= வயல்) புனத்தில் அறுவடை செய்து உடனுக்குடன் நாற்று நடுவர். மற்ற நாட்களை விட சனிக்கிழமை நாற்று நட்டால் பயிர் செழிக்கும் என்பது அவரது நம்பிக்கை. அதன்படி உடனுக்குடன் திணையைப் புனத்தில் நடுவதால் சனி புனம் தனித்து இருக்காது பயனிப் புனம் தனிப்போகாது என்றனர். இது சனிப் பிணம் என்றானது.

Post a Comment

Previous Post Next Post