ஜோதிடத்தில் 11 ஆம் பாவத்தில் ராகு இருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்
இலாபஸ்தானம் என்று அழைக்கப்படும் 11 ஆம் இடத்தைப் பற்றிக்கூறும் விளக்கங்கள் பிரமிக்க வைப்பனவாகும். 11 ஆம் பாவம் உபஜெயஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. 11 ஆம் இடம் வெளிப்படுத்தும் பலன்களைப் பலரும் அறிவர். ஒருவரது ஆசைகளை பற்றி அறிய இந்த இடம் பெரிதும் பயன்படும். 11 ஆம் இடத்தில் இராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் நின்றால் ஜாதகர் ஏதேனும் ஒரு துறையில் திறமைசாலியாகத் திகழ்வார். இல்லறத்தில் இனிய சுகம் இருந்தாலும் கசக்கிறது என்பார்கள். திருப்தியான நிலை இருக்காது
11 ஆம் இடத்திற்கும் இராகுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குருவுக்குங்கூட அந்த இடத்தில் மிகுந்த மதிப்பு உண்டு. புகழையும், கல்விபயிலாமலேயே மேதையாக்கும் தகுதியையும் வழங்கும் அவர்கள், இல்லற சுபிட்சத்தை ஏற்படுத்துவதே இல்லை.
ஸ்ரீ ஆதிசங்கரர் இளமையில் துறவு பூண்டார்; பகவத் கீதைக்கும் உபநிடதத்திற்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் விரிவு உரை எழுதினார்; அத்வைதத் தாத்பரியத்தை விளக்கிக் கூறினார்.அவர் ஜாதகத்தில் 11 இல் இராகு இருப்பதைக் காணலாம்
120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஸ்ரீஇராமானுஜர் குருவையே சிஷ்யனாகப் பெற்றவர். வைஷ்ணவ மதத்திற்குப் புத்துயிர் ஊட்டிய ஸ்ரீஇராமானுஜர் ஜாதகத்தில் 11இல் ராகு இருந்தார் . ஸ்ரீஇராமானுஜர் இல்லற வாழ்வில் இருந்து சற்று விலகி இருந்தார் என்பதை நாம் அறிவோம்.
அதே போல் திருவருட்பாவைத் தந்த வடலூர் இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார் ) ஜாதகத்தில் 11 இல் இராகு இருப்பதைக் காணமுடியும். இன்றளவும் வள்ளலார் அவர்களின் புகழ் நிலைத்துள்ளது. வள்ளலார் சுவாமி அவர்களும் இல்லற வாழ்வில் இருந்து விலகி இருந்தார்.
சுவாமி விவேகானந்தர் ஜாதகத்திலும் 11 இல் இராகு உள்ளார். இவர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்து சமய கருத்துகளை பாரப்பியதை பற்றி நாம் அறிந்ததே.யோகி அரவிந்தர் ஜாதகத்திலும் 11 இல் இராகு ஆகும். அதே போல், அண்ணா, எம்.ஜி.ஆர்,என்.டி.ஆர், கண்ணதாசன், சத்ரபதி சிவாஜி, பெர்னாட்ஷா ஆகியோர் ஜாதகத்திலும் 11 இல் இராகு உள்ளார். இவர்களுள் கல்வி பயின்ற மேதைகளும் உண்டு, படிக்காத மேதைகளும் உண்டு. ஆனால், உலகம் அறிந்திடத்தக்க புகழுக்குச் சொந்தக்காரர்களாகிய இவர்கள் பெரும்பாலும் இல்லறத்தில் முழுமையான இனிமை காணாதவர்கள்.
11 இல் இருக்கும் இராகு பகவான் ஜாதகர்களுக்கு இருதாரம் என்ற அமைப்பையோ, குழந்தைச் செல்வமற்ற நிலையையோ, தன்னிலும் வயது மூத்தவரை மணக்கும் நிலையையோ, ஜாதி மாறி திருமணம் செய்யும் நிலையையோ ஏற்படுத்தலாம்.
இராகு 11 இல் அமைந்தவர்கள் பெரும்பாலும் பரபரப்பான மனம் பிரம்மிக்க வைக்கும் சிந்தனைகளால் பிரபஞ்சத்தை செதுக்கும் சிற்பிகள். அவர்களது தத்துவம் ஏதோ ஒருவகையில் சமுதாயத்தில் உலவிக்கொண்டிருக்கும். அறக்கட்டளை, நிறுவனம், பீடங்கள், திருமணமண்டபங்கள், முதலிய அமைப்புகள் அவர்கள் பெயரால் உருவாகி ஜொலித்துக் கொண்டிருக்கும். பெரும்பாலும் அவை பொதுமக்களின் தொடர்புள்ளவையதாகவே உள்ளவர்கள்.