சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எப்படி எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்
  • முன்னுரை
  • பிள்ளைத்தமிழ்
  • சதகம்
  • பரணி
  • கலம்பகம்
  • உலா
  • அந்தாதி
  • கோவை
  • முடிவுரை

முன்னுரை :

அன்னை மொழியே! அழகாய் அமைந்த செழுந்தமிழே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! வேங்கடமலை முகட்டை எல்லையாகக் கொண்ட திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு பிள்ளைத்தமிழ் பேசியோர் பலர்.

பிள்ளைத்தமிழ்:

கடவுளரையோ (அ) மக்களுள் சிறந்தவர்களையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகப் பாவித்து, குழந்தைக்குரிய பருவச் செயல்களை அவர்மேல் ஏற்றிப் பாடுவது பிள்ளைத்தமிழாகும். இந்நூல் ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். என்பன பிள்ளைத்தமிழ் நூல்களுள் சில.

பிள்ளை தமிழ் பாடியவர்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பகழிக்கூத்தர்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மீனாட்சிசுந்தரனார்

சதகம் :

சதம் என்பது நூறு என பொருள்படும் வடமொழிச்சொல். ஆகவே, நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.தமிழன்னைக்கு  சதகம் பாடியவர்களுள் சிலர்.

சதகம் பாடியவர் காலம்
திருச்சதகம் மாணிக்கவாசகர் 9-ஆம் நூற்றாண்டி
சோழமண்டல சதகம் ஆத்மநாத தேசிகர் 18-ஆம் நூற்றாண்டு
அறப்பளீசுர சதகம் அம்பலவாணக்கவிராயர் 18-ஆம் நூற்றாண்டு

பரணி:

போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுடைய வீரத்தையும் வெற்றியையும் சிறப்பித்துப் பாடுவது 'பரணி' எனப்படும். தமிழன்னைக்கு பரணி பாடியவர்களுள் சிலர்.

பரணி பாடியவர்
கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார்.
தக்கயாகப்பரணி ஒட்டக்கூத்தர்
பாசவதைப்பரணி வைத்தியநாத தேசிகர்

கலம்பகம்:

கலம்+பகம் = கலம்பகம், கலம் - பன்னிரண்டு; பகம் ஆறு பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் எனப்பட்டது.நந்திக்கலம்பகம், மதுரைக்கலம்பகம், தில்லைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம் போன்றவை தமிழன்னை கண்ட கலம்பகங்களுள் ஒரு சில.

உலா:

உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று, பாட்டுடைத்தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இப்பெயர் பெற்றது. உலா என்பதற்குப் 'பவனிவரல்' என்பது பொருள். தலைவன் வீதியில் உலாவர, அவனை (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) எழுவகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதைக் கூறுவது 'உலா' என்னும் சிற்றிலக்கியம் ஆகும். இது கலிவெண்பாவால் இயற்றப்படும். இவ்விலக்கியம் 'உலாப்புறம்' எனவும் வழங்கப்படும். இது அகப்பொருள் துறையில் பெண்பாற் கைக்கிளை துறையைச் சார்ந்தது. தழன்னைக்கு உலா பாடியவர்களுள் சிலர்.

உலா பாடியவர்
குலோத்துங்க சோழன் உலா,இராசராச சோழனுலா ஒட்டக்கூத்தர்
ஞான உலா சங்கராச்சாரியார்
அவிநாசி உலா அருணாச்சலக்கவிராயர்

அந்தாதி :

ஒரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, சொல்லோ, அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப்பாடுவது அந்தாதி ஆகும். தமிழன்னைக்கு அந்தாதி பாடியவர்களில் சிலர்

அந்தாதி பாடியவர் காலம்
அம்பிகை அந்தாதி அம்பர் காவலன் சேந்தன் 9-ஆம் நூற்றாண்டி
கந்தர் அந்தாதி அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டு
அபிராமி அந்தாதி - - அபிராமி பட்டர் 18-ஆம் நூற்றாண்டு

கோவை:

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு பின் மணம் புரிந்து இல்லறம் நடத்தும் இனிய நிகழ்வுகளைச் சொல்வது கோவை இலக்கியம் ஆகும். இதை 'ஐந்திணை கோவை' என்ற பெயரிலும் குறிப்பிடுவது உண்டு.

கோவை பாடியவர் காலம்
திருக்கோவையர் மாணிக்கவாசகர் 9-ஆம் நூற்றாண்டி
தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் 13 ஆம் நூற்றாண்டு

முடிவுரை:

மொழித்தமிழை தமிழன்னையாக பாவித்து, அத்தமிழன்னைக்கு பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா, வந்து, அந்தாதி கூறி கோவை அணிவித்து இச்சிற்றலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்களாகிய தமிழ்ச் சான்றோர்கள். இவ்வழியில் நாமும் சென்று தமிழ்பயிரைப் பேணி வளர்ப்போமாக!

Related:சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை (மாதிரி-2)

Post a Comment

Previous Post Next Post