சான்றோர் வளர்த்த தமிழ் (மாதிரி-2) என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்
- முன்னுரை
- கன்னித் தமிழ்
- சதகத்தமிழ்
- பரணித் தமிழ்
- கலம்பகத் தமிழ்
- அந்தாதி
- பிள்ளைத்தமிழ்
- உலா வரும் தமிழ்
- கோவைத் தமிழ்
- முடிவுரை
முன்னுரை
காலம் பல மாறினும், கண்டம் பல அழிந்தாலும் சிறப்புடைய மொழியாகத் தமிழ்மொழி திகழ்கிறது. இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்து, கன்னித்தமிழாய், செந்தமிழாய், வண்டமிழாய், பைந்தமிழாய் வலம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியே ஆகும்.
கன்னித் தமிழ்
“தமிழ் எங்கள் இளமைக்குப் பால்" என்றார் பாரதிதாசன். காலம் பல கடந்தாலும் தமிழானது என்றும் இளமையாய், வளமையாய் கன்னித்தமிழாய்த் திகழ்கிறது. தமிழின் இளமை, செழுமை, வளமை என்றும் வளர்ந்த வண்ணமாய் உள்ளது.
சதகத்தமிழ்
நூறு பாடல் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர். மாணிக்கவாசகரின் திருச்சதகமே முதற்சதகமாகும். இது உள்ளமுருகும் பக்திப் பாட்டாகும். பழமொழிகள், நீதிநெறிமுறைகள், இறைவன் துதி பாடும் கருத்துகள் போன்றவை சதகப் பாடல்களின் தனிச் சிறப்புகளாகும்.
பரணித் தமிழ்
“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"
என இலக்கண விளக்கப் பாட்டியல் பரணிக்கு இலக்கணம் தருகிறது. போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணியாகும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியே காலத்தால் முற்பட்டதாகும்.
கலம்பகத் தமிழ்
பல்வேறு உறுப்புகளைக் கொண்டு அகமும் புறமுமாய்க் கலந்து, பல்வேறு பாவினங்களால் பாடப்படுவது கலம்பகம். கலம்+பகம் எனப் பிரித்துக் கலம் என்பது பன்னிரண்டு என்றும், பகம் என்றால் அதில் பாதி என்றும் கொண்டு பதினெட்டு உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது கலம்பகமாகும், நந்திக்கலம்பகமே முதற்கலம்பகமாகும்.
அந்தாதி
ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து அசை, சீர், அடி, யாதெனும் ஒன்று அடுத்த பாடலின் முதலில் வரும்படி அமைத்துப்பாடுவது அந்தாதி எனப்படும். தமிழில் அந்தாதி இலக்கிய வகையே மிகுதி, விருத்தமே இதன் யாப்பு வடிவமாகும்.
பிள்ளைத்தமிழ்
தலைவனையோ கடவுளையோ குழந்தையாகப் பாவித்து, பத்துப் பருவங்களாக அமைத்துப் பாடுவது பிள்ளைத் தமிழாகும். பருவத்திற்குப் பத்துப்பாடல்களாக நூறு பாடல்களால் பாடப்படுவது பிள்ளைத்தமிழ். ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் காலத்தால் முற்பட்டது. குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் நிகரற்ற தமிழ் இலக்கியங்களாகும்.
உலா வரும் தமிழ்
அரசர்கள் உலா வரும் போது ஏழு பருவ மங்கையரும் கண்டு காதல் கொண்டு மயங்குவதாகப் பாடுவது உலா இலக்கியமாகும். “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப்" என்ற தொல்காப்பிய நூற்பா உலா இலக்கியத்தைப் பற்றியே குறிக்கிறது.
கோவைத் தமிழ்
ஒரு பாட்டிற்கும் அடுத்த பாட்டிற்கும் நிகழ்ச்சி வரிசை அமைந்த கதை போல அமைத்து எழுதுவது கோவையார் புகழ்பெற்ற இலக்கியச் செல்வமாகும். பொய்யாமொழிப் புலவரால் பாடப்பட்ட தஞ்சைவாணன் கோவை புகழ் பெற்ற நூலாகும்.
முடிவுரை
சான்றோர் பலரால் பல்வகை இலக்கியங்கள் பாங்காய் வளர்ந்தன. இலக்கிய வடிவங்களைத் தந்த சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர்.