முன்னுரை :
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!' என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு மூலமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்' எனப் பேரவாக் கொண்டவர். மேலும், சாதி வேறுபாடற்ற சமத்துவச் சமுதாயம் காண விரும்பியவர்.
பிறப்பும் இளமையும் :
சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசபபா 29.4.1891-இல் கனகசபை முதலியாருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தார். இளமையில் பிரஞ்சு மொழியையும் தமிழையும் பயின்றார். 16-ஆம் வயதில் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்று தமிழ்ப்புலமைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல்வராய்த் தேறினார். 18-ஆம் வயதில் அரசினர் பள்ளியில் தமிழாசிரியராய் அமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட அன்பால் தம் பெயரைப் பாரதிதாசன் என வைத்துக்கொண்டார்.
தமிழ்ப்பற்று :
“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
“உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே”, “தமிழை என்னுயிர் என்பேன்” என்பன போன்ற கவிதை வரிகள் பாரதிதாசனின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவன. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" எனப் பாடி, மக்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர் அவர். “தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என முழங்கினார். “தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என வருந்தினார்.
கவிச்சுவை :
இயற்கையில் ஈடுபாடு மிக்க பாவேந்தரின் கவிதைகள் கருத்தாழமும் கற்பனைச் சுவையும் கொண்டு கற்பாரைக் களிப்புறச் செய்பவை. “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை எத்தனை அழகான கற்பனை!
“அருவிகள் வயிரத் தொங்கல்! அடர்கொடி, பச்சைப் பட்டே!
குருவிகள், தங்கக் கட்டி! குளிர்மலர், மணியின் குப்பை!”
என்னும் அடிகளில் சொற்கள் மாறி மாறி விழும் அழகைக் காண முடிகிறது.
சமுதாயப் பார்வை :
“வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவரே” எனப் பாடித் தமிழரிடையே ஒற்றுமையை வலியுறுத்தினார். “சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” எனச் சாதி வெறியைச் சாடினார். “வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?” என வினவிக் கைம்பெண் மணத்தை ஆதரித்தார். “மாதர் உரிமை மறுப்பது மாண்பா? மாதர் முன்னேற்றத்தில் மகிழ்வது மாண்பா? ஆய்ந்துபார்” என்கிறார்.
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்''
என்ற பொதுவுடைமைக் கருத்துக்குச் சொந்தக்காரர் பாவேந்தர்.
“ஓடப்ப ராய் இருக்கும் ஏழை யப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொ டிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப் பாநீ"
என்னும் பாடல் உலகப் பண்பாட்டுச் சமத்துவப் பார்வைக்கு வழிகாட்டுகிறது.
“கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?"
எனத் தொழிலாளர் தோழர்களுக்காகப் பாவேந்தர் பரிந்துரைக்கின்றார்.
முடிவுரை :
உடல்வளமும், உளத்திடமும், உண்மை உரைக்கும் பண்பும், நேர்மையும், மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்ட பாவேந்தரின் கனவுகளை நனவாக்குவதே நமது கடமை.
“பாவேந்தர் புகழ் என்றும் நிற்கும் - அவர் பாடலையே நம் நெஞ்சும் கற்கும்”.