நான் விரும்பும் நூல் திருக்குறள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
நான் விரும்பும் நூல் திருக்குறள்
குறிப்புச்சட்டம்:
- முன்னுரை
- திருக்குறளின் அமைப்பும் பெருமையும்
- உலகப் பொதுமறை
- கருத்துக் களஞ்சியம்
- முடிவுரை
முன்னுரை :
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்பார் தம் தமிழ்க்கவி பாரதியார். வள்ளுவனைத் தந்தது தமிழகம். அந்த வள்ளுவன் தந்ததோ திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை. நாடு, மொழி,இனம்,சாதி, சமயம், காலம் முதலிய வேறுபாடுகளின்றி உலக மக்களனைவராலும் ஏற்றுப் போற்றத்தக்க அறநெறிகளைக் கூறும் நூல் திருக்குறளாகும்.
திருக்குறளின் அமைப்பும் பெருமையும் :
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 1330 குறள் வெண்பாக்களையும் உடையது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஏற்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள்.
'எல்லாப் பொருளும் இதன்பாலுள' என நாகனாரும், 'அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என ஔவையாரும் புகழும் நூல்.
இது, “நான் படித்தறிந்த அறநெறி நூல்களுள் தலைசிறந்தது திருவள்ளுவரது திருக்குறள்” என்று பேரறிஞர் ஆல்பர்ட் சுவைட்சரும் கூறியுள்ளார்.
உலகப் பொதுமறை :
திருக்குறள் உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்குச் சான்று, உலக மொழிகள் பலவற்றுள்ளும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதுதான். திருவள்ளுவர் தம் திருக்குறளில் உலகோர் அனைவரும் பின்பற்றத்தக்க நெறிகளையே கூறியுள்ளார். கல்வி, கேள்வி, ஒழுக்கம், அடக்கம், வாய்மை, பொறுமை, ஈகை முதலிய பண்புகள் உலகோர் அனைவருக்கும் பொதுவானவைதாமே. இல்லறம், துறவறம், அரசியல், அமைச்சியல், நட்பியல், களவியல், கற்பியல் எனப் பகுத்துக்கொண்டு அவர் கூறுவன யாவையும் அவனியோர் அனைவருக்கும் பொதுவானவையே.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எனத் தம் முதற்குறளிலே 'உலகு' என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார், எச்சமயத்தவர்க்கும் எம்மொழியினருக்கும் பொதுவான இறைவழிபாட்டையே கடவுள் வாழ்த்தில் அவர் கூறியுள்ளார். தாய்மதத்தையோ, தாய்மொழியையோ தாய் நாட்டையோ தம் நூலில் எங்கும் குறிப்பிடாதது அவரது நூல் உலகப் பொதுவுடைமை என்பதற்குச் சான்றாகும்.
கருத்துக் களஞ்சியம் :
'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்' என அறத்திற்கு விளக்கம் தந்து, “அறத்தான் வருவதே இன்பம்” அதனால் “அன்றறிவாம் என்னாது அறம் செய்க” என்றார். “ஒழுக்கம் விழுப்பம் தரலான்”, “பரிந்தோம்பிக் காக்க” என்றார். “நன்றி மறப்பது நன்றன்று”, “வறியார்க்கொன்று ஈவதே ஈகை”, “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பவை மனித வாழ்வை உயர்த்தும் அருள்மொழிகளாகும்.
முடிவுரை :
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்,
திருக்குறள் உலக மக்களுக்காகப் படைக்கப்பட்டது. ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளையும் கற்போம்! கற்றபடி நிற்போம்!
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - இடைக்காடர்
Tags:
கட்டுரை