நான் விரும்பும் நூல் கட்டுரை மாதிரி-2

நான் விரும்பும் நூல் (மாதிரி-2) என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்:

  • முன்னுரை
  • போற்றக் காரணம்
  • நூலின் சிறப்பு
  • திருக்குறள் தெரிவிக்கும் வாழ்க்கை
  • திருக்குறள் தெரிவிக்கும் நல்லரசு
  • திருக்குறள் உணர்த்தும் நாடு
  • திருக்குறளில் உள்ள சில உவமைகள்
  • முடிவுரை

முன்னுரை: 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுவையை விரும்புகின்றனர்; வேறுவேறு எண்ணங்களையும் செயல் களையும் கொண்டிருக்கின்றனர். அவரவர் மன இயல்புக்கு ஏற்பச் சில நூல்களை விரும்பிப் படிக்கின்றனர். நான் விரும்பிப் படிக்கின்ற சிறந்த நூல் திருக்குறளே ஆகும்.

போற்றக் காரணம்: 

திருக்குறள் உலகப் பொது நூல். அறநூல். அறிஞர் பெருமக்களால் போற்றும் நூல். வாழ்க்கையின் பல்வேறு நிலையினர்க்கும் வழிகாட்டும் நூல். "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற'' என்னும் குறள், "மனத்தில் குற்றம் இல்லாமல் இருப்பாயாக. அறம் என்பது அவ்வளவே ஆகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமாகும்". என்று தெளிவாகத் தெரிவிக்கின்றது. "அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் இவை நான்கினையும் நீக்கி ஒழுகுபவனே அறநெறியில் வாழ்வோன்' என்று மேலும் விளக்குகின்றது. ஆதலின், அறத்தை விளக்கும் நூலாக, அரசியலைத் தெரிவிக்கும் நூலாக, நன்மகனாக வழிகாட்டும் நூலாக விளங்குகின்றது. ஆதலின், யான் இந்நூலை விரும்பிப் பயில்கின்றேன்.

நூலின் சிறப்பு: 

திருக்குறள் தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய 'அ' கரத்தில் தொடங்கி, இறுதி எழுத்தாகிய 'ன'கரத்தில் முடிகின்றது. இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகள் உள்ளன. இரண்டு அடிகளில் சிறந்த கருத்துக்களை உவமை, உருவக அணிகளின் மூலம் விளக்குந்திறன் கற்போருக்குக் கழிபேருவகை அளிக்கும். எந்நூலுக்கும் அமையப் பெறாத பெருஞ்சிறப்பாக, இந்நூலை அக்காலப் புலவர் பெருமக்கள் பாராட்டியதைத் திருவள்ளுவமாலையில் காணலாம்.

திருக்குறள் தெரிவிக்கும் வாழ்க்கை: 

வாழ்க்கை சிறக்க வழியாது? அன்பு என அறிவிக்கின்றது திருக் குறள். அன்பின் அடிப்படையிலே இல்லற வாழ்வு அமைய வேண்டும். "அன்பும் அறனும் உடைத்தா யின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'' என விளக் குகின்றது.அன்போடு பொருந்திய தாய் அறத்தோடு தழுவியதாய் அமையின், அவ்வன்பே பண்பாகும். அவ்வறமே பயனாகும். இவ்விரு தன்மைகளும் உள்ள இல்லற வாழ்வே 'புகழ்வாழ்வு' என்றும், மங்கல வாழ்வு என்றும், இவ்வாழ்வுக்குத் துணை செய்யும், பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்றும் புலப்படுத்துவதை நோக்குக.

திருக்குறள் தெரிவிக்கும் நல்லரசு: 

இல்வாழ்க்கை இனிது நடைபெற நல்லாட்சி அமைதல் வேண்டும். புற நானூற்றுப் புலவர், "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'', என்று கூறுவதிலிருந்து, நல்ல அரசாங்ககே உலக வாழ்க்கையின் உயிர்நாடி என்பதை உணரலாம். ஆதலின், நல்லரசு யாது? "வேண்டுவார்க்கு வேண்டு வன கொடுத்தலும், யாவரிடத்தும் அன்பு காட்டுதலும், நீதி வழுவாது ஆட்சிசெலுத்துதலும், குடிமக்களைப்பாது. காத்தலும் ஆகியவற்றை உரிமைச் செயல்களாகக் கருதிப் பணிபுரியும் அரசே நல்லரசு எனத் திருக்குறள் இலக்கணம் வகுக்கின்றது. 

திருக்குறள் உணர்த்தும் நாடு: 

நல்லர சினால் நடத் தப்படும் நாடு எத்தகைய இலக்கணங்களைப் பெற்றிருத் தல் வேண்டும்? கல்லும் முள்ளும் மரமும் மட்டையும் நாடாகுமா? அன்று அன்று. ''குறையாத பயிர்விளைச் சலைச் செய்பவர்களும் அறநெறியில் நடப்பவர்களும் செல்வம் உடையோரும் ஒருங்கு வாழ்வதற்கு இடமாக இருப்பதே நாடு. மிக்க பசியும் நீங்காத நோயும் அழிவு செய்யும் பகைவர்களும் இன்றி நடப்பதே நாடு, குடிகள் பொருள் தேடி அலையாமல் அவர்களுக்கு எல்லா வளங் களையும் எளிதிற் கொடுப்பவையே நாடு' என்று திருக் குறள் கூறுகின்றது.

திருக்குறளில் உள்ள சில உவமைகள்: 

இன்சொல்லிருக்க வன்சொல் கூறுதல் கனியிருக்கக் காய் கவர்தல் போன்றதென்றும், சான்றோர் அவையில் பேதை புகுதல் கழுவாத காலை இன்பந்தரும் படுக்கையிலே வைத்தாற் போன்றது என்றும், பொருட் பெண்டிரின் பொய்ம்மை பொருந்திய தழுவல் இருட்டறையிலே முன்பு அறியாத பிணத்தைத் தழுவியது போன்றது என்றும், சூதாடலில் வென்ற பொருள் இரையில் மறைந்த தூண்டிலை இரையனெக் கருதி மீன் விழுங்கி யதை ஒக்கும் என்றும் உவமைகள் மூலம் பல்வேறு பொருள்களையும் நீதிகளையும் உணர்த்தியுள்ள நயம் எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

முடிவுரை: 

திருக்குறளைக் கற்றலும் அதன் வழி நிற்றலும் பெற்றவரே நற்றவம் உற்றவர் ஆவார். ஆதலின் குறள் பேணின் அறம் வாழும். அனைத்துலகமும் வாழும்.

Related: நான் விரும்பும் நூல் மாதிரி-1

Post a Comment

Previous Post Next Post