விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்கு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
- முன்னுரை
- முதல் முழக்கம்
- வ.உ.சிதம்பரனார்
- சுப்பிரமணிய சிவா
- சுப்பிரமணிய பாரதி
- திருப்பூர் குமரன்
- சத்தியமூர்த்தி
- வாஞ்சிநாதன்
- முடிவுரை
முன்னுரை
வணிக நோக்குடன் வந்த ஆங்கிலேயர் நம் நாட்டையே உரிமையாக்கிக் கொண்டனர். நம்மை அடிமைப்படுத்தியதோடு கொடுமைப்படுத்தவும் தொடங்கினர். அதனால் விடுதலைப் போராட்டம் நாடெங்கும் நிகழ்ந்தது. இதில் தமிழகத்தில் பங்கு தனிச்சிறப்புடையது.
முதல் முழக்கம்
பூலித்தேவன் என்ற பாளையக்காரர் தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்டு ஆங்கிலேயரை எதிர்த்து வென்றார். இதுவே விடுதலைப் போரின் முதல் முழக்கமாகும்.வெள்ளையரின் கொடுமையை எதிர்த்து 1790-இல் முழக்கம் செய்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஊமைத்துரை, வேலு நாச்சியார், மருதுபாண்டியர், பூலித்தேவன், வேலுத்தம்பி எனப் பலர் வெள்ளையரைக் கடுமையாக எதிர்த்து வீரமரணம் எய்தினார். 1806-இல் நடந்த வேலூர்ச் சிப்பாய்க் கலகம் 1857-இல் நடந்த முதல் இந்திய விடுதலைப் போருக்கு வித்தாக அமைந்தது.
வ.உ.சிதம்பரனார்
‘தென்னாட்டுத் திலகர்' என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் கழகத்தைத் தோற்றுவித்தார் ‘கப்பலோட்டிய தமிழன்' என்ற புகழ் ஈட்டினார்; இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையில் செக்கிழுத்தார்; கல்லுடைத்தார் எண்ணற்ற இன்னலுற்றார். ஆயினும் தம் வாழ்வை விடுதலைக்கு அர்ப்பணித்தார்.
சுப்பிரமணிய சிவா
இவர் சிற்றூர்களுக்கு நடந்தே சென்று, பொதுக்கூட்டங்களில் பேசி, மக்களுக்கு வீரவுணர்வு ஊட்டினார். இவர் பேச்சு ஆங்கிலேயரை நிலை கலங்க செய்தது. நாட்டுப்பற்றை துறக்காத சுப்பிரமணிய சிவா ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆளானார். வெஞ்சிறைக் கொடுமையின் பரிசாய்த் தொழுநோயைப் பெற்றார்.
சுப்பிரமணிய பாரதி
இவர் தம் பாட்டுத் திறத்தால் மக்களுக்கு நாட்டுப் பற்றூட்டி, அச்சம் தவிர்த்து, ஆண்மையோடு போராடும் வழி காட்டினார். நாடு விடுதலை பெறுமுன்பே,
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட் டோமென்று"
என்று பாடி மகிழ்ந்து, நம் உள்ளம் துள்ளச் செய்தார்.
திருப்பூர் குமரன்
தோழர்களுடன் தேசியக்கொடி ஏந்தி வந்த இவரை மண்டையில் அடித்து வீழ்த்தினர். இவர் அந்நிலையிலும் கொடி கீழே விழாதவாறு பற்றியிருந்து, 'கொடி காத்த குமரன்' என்னும் பெயரை ஈட்டினார்; புகழை நாட்டினார்.
சத்தியமூர்த்தி
இவர் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயரை எதிர்த்து முழக்கமிட்டார். அதனால் 'சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று அதன் பிடரியை உலுக்கியவர்' என்னும் பாராட்டைப் பெற்றார்.
வாஞ்சிநாதன்
அடக்குமுறையாளன் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக்கொண்டு மாண்ட பெருமைக்குரியவன் வீர இளைஞன் வாஞ்சிநாதன்.
முடிவுரை
தமிழ்நாட்டை சேர்ந்த எண்ணற்ற தியாக செம்மல்கள் இம்மண்ணில் விடுதலைக்காகத் தம் உயிரையும் உடைமைகளையும் இழந்தனர். அவர்கள் பெற்றுத் தந்த விடுதலையை காப்பது இம்மண்ணின் மைந்தர்களது கடமையாகும். இவர்களைப் போன்றே நாமும் நாட்டுப்பற்றுடன் வாழ்ந்தால், பெற்ற விடுதலையைப் பேணலாம்; நாளும் முன்னேற்றம் காணலாம்.
இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் பற்றி கூறாமல் அவருக்கு பின்னால் எதிர்த்த மற்ற வீரர்களை மற்றும் கூறுவது தவறு.
ReplyDelete