மாவட்டம் காக்கும் மழைத்துளி கட்டுரை

மாவட்டம் காக்கும் மழைத்துளி அல்லது மதுரை மாவட்டத்தில் மழைநீர் சேமிப்பு என்னும் தலைப்பின் கீழ் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்:
  • முன்னுரை
  • கிராமங்களில் மழைநீர் சேமிப்பு
  • மதுரை மாநகரில் மழைநீர் சேமிப்பு
  • கோவில்களில் மழைநீர் சேமிப்பு
  • தமிழ் கண்டதோர் வைகை
  • மாவட்டம் காக்கும் மழைத்துளி
  • முடிவுரை

முன்னுரை:

"நீரின்றி அமையாது உலகு" என்கிறது வள்ளுவம். இந்நீருக்குரிய அடிப்படை ஆதாரம் மழை. மழை பெய்யும் போது அதை நேரடியாக சேமிப்பதும் பூமிக்கடியில் செலுத்துவதும் தான் மழைநீர் சேமிப்பு. சங்கத்தமிழ் வளர்த்த இம்மதுரை மாவட்டத்தில் மழைநீர் சேமிப்பு என்பது இன்று அனைத்து மக்களாலும் உணரப்பட்டு நன்முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிராமங்களில் மழைநீர் சேமிப்பு:

இன்று தமிழகத்தில், கிராமங்களுக்குப் புகழ்பெற்ற மாவட்டமாக விளங்குவது நம் மதுரை மாவட்டம். இந்த கிராமங்களில் உள்ள கண்மாய்கள், ஏரிகள்,குளங்கள் எல்லாம் செப்பனிடப்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் அக்கிராமங்களில் விவசாயம் நன்முறையில் நடந்து வருகிறது. மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது.

மதுரை நகரில் மழைநீர் சேமிப்பு:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும். 
-திருவள்ளுவர்

மதுரை நகரில் மழைநீர் சேமிப்பு என்பது இயல்பான விஷயங்களில் ஒன்றாகி விட்டது.அரசும் பல்வேறு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. சாதாரணமாக பல வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மூலம் மழைநீரை சேகரிக்கிறனர். புதியதாக கட்டும் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்படுகிறதா என்பதை மாநகராட்சி உறுதி செய்கிறது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழைநீர் சேகரிப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.

கோவில்களில் மழைநீர் சேமிப்பு:

மழைநீரை சேமிப்பதற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் கோயில் நிலங்கள் இன்றியமையாதது. கோவில் மாநகரமாம் மதுரையில் மழைநீர் சேமிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளமானது மிகப்பெரிய நீர் சேமிப்பு இடமாக விளங்குகிறது. வைகை ஆற்றில் நீர் வரும் போது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு நீர் வருமாறு தெப்பக்குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியது. மேலும் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் இது போன்ற பெரிய தெப்பக்குளம், கண்மாய்கள் வெட்டி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கண்டதோர் வைகை:

"தமிழ் கண்டதோர் வைகை" என்றார் பாரதியார். இன்று வைகை மதுரை மாநகரின் முக்கிய அடையாளமாக உள்ளது. வைகையில் நீர் வரும் காலங்களில் வற்றிய கிணறுகளிலும் நீர் ஊறுவதை காணமுடிகிறது. மதுரை மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் வைகை நதி முக்கிய பங்கு வகிக்கிறது. வைகை நதியை காக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் காக்கும் மழைத்துளி:

இன்று சுத்தமான தண்ணீர் நமக்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், மழைநீரை வீடுதோறும் நாம் சேமிக்க வேண்டும். நம்மிடம் உள்ள நீரிலேயே மழைத்துளி தான் மிகவும் சுத்தமானது. எனவே இப்படியொரு சுத்தமான மழைத்துளியை வீணாக்காமல் சேமித்தால் நல்லது.
மழைத்துளியை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன்படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும். 

முடிவுரை:

தமிழகம் தண்ணீர் பஞ்சத்தில் இல்லை. தண்ணீரின் தேவையே அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்ட வீடுதோறும் மழைநீர் சேமிப்பு இன்றியமையாதது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் சேமிப்பு முறையாக பின்பற்றப்பட்டால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்ற ஒன்றே ஏற்படாது.

!!அமுதாய் வரும் மழைத்துளி அணைவருக்கும் உயிர்த்துளி!!

!!இதனை மனதில் கொண்டு எளிதாய் சேமிப்போம் மழைத்துளி!!

2 Comments

Previous Post Next Post