மழைநீர் சேமிப்பு (மாதிரி-2) பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்:
- முன்னுரை
- மழைநீர்ச் சேமிப்பின் அவசியம்
- கிராமங்களின் நிலை
- நகரங்களின் நிலை
- மழைநீர்ச் சேமிப்பு முறைகள்
- முடிவுரை
முன்னுரை:
இயற்கையின் அமைப்பில் நாம் வாழும் பூமிப் பகுதி மட்டுமே மூன்றில் இரண்டு பாகம் தண்ணீரைக் கொண்டுள்ளது என்பது ஆய்வாளர் கூற்று அதனை நம்பியே உயர்திணை, அஃறிணை உயிர்கள் வாழ்கின்றன அதனாலேயே, திருவள்ளுவர் "நீரின்று அமையாது உலகு" என்று நீரில் தேவையை வலியுறுத்துகின்றார்.மழைநீர்ச் சேமிப்பின் அவசியம்:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
-திருவள்ளுவர்
மழை தரும் மரங்கள் வெட்டப்படுவதால் குளங்கள், ஏரிகள்,கால்வாய்கள் நீரின்றிப் பாழ்படுகின்றன. நீர்ப்பிடிப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விளைநிலங்களாவதால் நிலத்தடி நீர் குறைகிறது. நகர மக்கள் அதிகரிப்பு, பருவ மழை பொய்த்தல், பெய்த மழைநீர் சேகரிக்கப்படாமல் கடலில் கலத்தல் நகரங்களில் நீர் புகா சிமெண்டுத் தரை அமைத்தல் போன்ற காரணங்களால் மழைநீர் நிலத்தடிக்குச் செல்வதில்லை. இதனால் குடிநீருக்குக் கூட பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. எனவே, மழைநீர்ச் சேமிப்பு அவசியமாகிறது.
கிராமங்களின் நிலை:
கிராமப்புறங்களில் பெய்யும் மழைநீர் வீணாக வழிந்தோடுகிறது ஆக்கிரமிப்பு மற்றும் பல காரணங்களால், ஊருணிகள், கிராமக்குளங்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த இயலுவதில்லை. மழைநீரைக் குளங்கள் அல்லது ஏரிகள் உள்ள பகுதிகளுக்கு நீரோடை மூலமாகத் திருப்பி மழைநீனம் சேமிக்க இயலும். இத்தகைய குளங்களின் மூலமாகச் சுற்றுவட்டாரத்திலுள்ள நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் உயருகின்றது.
நகரங்களின் நிலை:
சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றைச் சுற்றியுள்ள இடங்கள் திறந்த வெளியாக விடப்படாமல் சிமிண்ட் கான்கிரீட்டால் மூடப்படுகின்றன. இதனால் மொட்டை மாடியிலும், குடியிருப்பைச் சுற்றியுள்ள இடங்களிலும் விழும் மழை பூமிக்குச் செல்ல வாய்ப்பில்லை. இங்கெல்லாம் மழைநீரை நிலத்தடி நீராக: சேமிக்க ஆவன செய்யவேண்டும்.
மழைநீர்ச் சேமிப்பு முறைகள்:
மழைநீரைத் திறந்தவெளிக் கிணறுகள் மூலமும், குழாய்க் கிணறு மூலமும் நிலத்தடிக்குச் கொண்டுசென்று சேமிக்கலாம். மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரைக் குழாய்மூலம் கீழே கொண்டுவந்து தொட்டியில் தேக்கித் தூய்மையானபின் திறந்தவெளிக் கிணறுகளில் இறக்கிவிடலாம். திறந்தவெளிக் கிணறு இல்லாத இடங்களில் தேங்கும் நீரைக் குழாய்க் கிணறு தோண்டி அதன்வழி நிலத்தடியில் சேர்க்கலாம்.
வேறு சில வழிகளும் உள்ளன. அவை : கசிவுநீர்க் குழிகள், துளையுடன் கூடிய கசிவுநீர்க் குழிகள், கசிவுநீர்ப்படுகை, துளையுள்ள நீர்ப்படுகை, குறைந்த விட்டம், அகலமுடைய நீரூற்றுக் கிணறு, அதிக அகலமும் ஆழமும் கொண்ட நீரூற்றுக் கிணறு ஆகியன மழைநீர் சேகரிக்கும் முறைகளாகும்.
முடிவுரை:
மழைநீர்ச் சேமிப்புத் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறையும். வீணாகும் மழைநீரை நிலத்தடியில் சேமித்துப் பயன்படுத்த ஏதுவாகும். பெருநகரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும். விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி, இன்றைய மழைநீர் நாளைய குடிநீர், மழைநீரை சேமிப்போம் போன்ற முழக்கங்கள் சொல் வடிவில் மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் வர வேண்டும்.
மழை நீரைச் சேமிப்போம்! நிலத்தடி நீரைப் பெருக்குவோம்!
Related: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-1
Related: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-3
Tags:
கட்டுரை